

மூலவர் - கோலவில்லி ராமன்
உற்சவர் - சிருங்கார சுந்தரர்
தாயார் - மரகதவல்லி
தலவிருட்சம் - செவ்வாழை
தீர்த்தங்கள் சுக்கிர தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என 4 தீர்த்தங்கள்.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்கலா வர்த்தக விமானம் எனப்படுகிறது.
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
நவகிரகங்களில் சுக்கிரன் (வெள்ளி) தன்னுடைய கண் பார்வை குறை நீங்க இத்தலத்தில் தவமிருந்து வழிபட்டதால் இத்தலம் சுக்கிர பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது.
நேத்ர விளக்கு:
திருவெள்ளியங்குடி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திவ்ய தேசம் இது. சுக்கிர பரிகார ஸ்தலம் என்று போற்றப்படும் இங்கு அசுரர்களின் குருவான சுக்கிர பகவான் கண் பார்வையை இழந்த போது, இத்தலத்தின் இறைவனான கோலவில்லி ராமரை வேண்டித் தவம் செய்தார். சுக்ரனின் தவத்தை மெச்சிய பெருமாள் அவருக்கு கண் பார்வை அளித்தார்.
அன்று சுக்கிரனுக்கு அருளப்பட்ட அந்த ஒளி இன்றும் கருவறை அருகே 'தூண்டா விளக்காக' இரவும் பகலும் சுடர் விட்டு பிரகாசிக்கிறது.
இத்தலத்தில் சுக்கிரன் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதால் இங்கு வந்து 'நேத்ர விளக்கு' ஏற்றி வைக்க கண் பார்வை தொடர்பான கோளாறுகள் நீங்கி, வாழ்வு சுக்கிர யோகத்தால் ஒளிரும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:
இத்தலம் வாமன அவதாரத்துடன் தொடர்புடையது. மகாபலியின் செருக்கை அடக்குவதற்கு வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள் மூன்றடி நிலத்தைக் கேட்க மகாபலிக்கு குருவாக இருந்த சுக்ராச்சாரியார் வந்திருப்பது சாதாரணமானவர் அல்ல ஸ்ரீமன் நாராயணன் தான் என்பதை அறிந்து கொண்டு வாமனன் கேட்டபடி மூன்றடி நிலத்தை மகாபலி தாரை வார்த்து கொடுக்கக் கூடாது என்று விரும்பினார்.
சுக்ராச்சாரியார் எவ்வளவோ தடுத்தும் மகாபலி சக்கரவர்த்தி பின்வாங்கத் தயாராக இல்லை. கடைசியில் சுக்ராச்சாரியார் மகாபலியின் கமண்டலத்திலிருந்து நீர் வரும் வழியை ஒரு வண்டு உருவில் வந்து அடைத்துக் கொள்ள தாரை வார்த்து கொடுக்க நீர் வராததால் மகாபலி சக்கரவர்த்தி ஒரு தர்ப்பைப் புல்லால் கமண்டலத்தின் துளையில் குத்த அந்த தர்ப்பைப் புல் வண்டின் ஒரு கண்ணை குத்தி பார்வையை இழந்துவிட்டார்.
தான் இழந்த பார்வையை மீண்டும் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்து வண்டு வடிவில் ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) தவம் இருந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி கடுமையாக தவம் இருந்தார். அவரது தவத்திற்கு இறங்கிய பெருமாள் அவருக்கு காட்சி தந்து பார்வையையும் கொடுத்து அருளினார்.
அன்று சுக்கிரனுக்கு கொடுக்கப்பட்ட ஒளி இப்போதும் தூண்டா விளக்காக (நேத்ர தீபம்) கருவறை அருகே இரவும் பகலும் சுடர்விட்டு ஒளிர்கின்றது. இன்றும் இந்த தீபத்தில் பெருமாள் உயிர்ப்புடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
தல சிறப்பு:
இங்கு கருடன் நான்கு கைகளுடன் சங்கு சக்கரத்துடன் காட்சியளிப்பது இத்தலத்தினுடைய தனிச்சிறப்பாகும். 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும்தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருகரங்களுடன் காட்சி தருகிறார்.
தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் இப் பெருமானுக்கு விருப்பம் அதிகம் என்பதால் உற்சவர் சிங்கார சுந்தரர் எனப்படுகிறார். மூலவர் பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட கோலத்தில் அழகிய வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் புரிகிறார். பெருமாளின் தலைமாட்டில் மார்க்கண்டேய மகரிஷியும், கால் மாட்டில் பூதேவியும் காட்சி தருகின்றனர். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
மற்றொரு சிறப்பு இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை (செவ்வாழை) முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டுக்கொண்டு வாழையடி வாழையாக இன்றும் இருந்து வருகிறது.
தேவச் சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடிக்க இதுபோல் தன்னால் கட்ட முடியவில்லை என அசுரக்குல சிற்பி மயன் வருந்தி பிரம்மாவிடம் வேண்ட அதற்கு பிரம்மா இத்தலத்தில் வந்து கடுந்தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறினார்.
மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுக்க, மயனோ தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில் ராமாவதாரக் காட்சி வேண்டும் என்று வேண்ட தன் கரத்தில் இருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் காட்சி தந்தார். அசுர குல சிற்பி மயனால் எழுப்பப்பட்ட ஆலயம் இது என்று புராணங்கள் கூறுகின்றன.
வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்திற்குச் சென்று கோலவில்லி ராமரையும் மரகதவல்லித் தாயாரையும் தரிசிக்க சுக்கிர தோஷம் நீங்கும். கருவறையில் இருக்கும் அணையா விளக்காக பிரகாசித்துக் கொண்டிருக்கும் நேத்ர விளக்கிற்கு தீபத்தில் நல்லெண்ணெய் சேர்க்க நினைத்த காரியம் கைகூடும். வாழ்வில் தடைகள் நீங்கி திருமணம் மற்றும் குழந்தை இல்லா தம்பதியருக்கு குழந்தை செல்வம் வாய்க்கும்.
திருவிழாக்கள்:
ஸ்ரீ ராம நவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி போன்றவை இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எங்கு உள்ளது?
கும்பகோணத்தில் இருந்து சோழபுரம் செல்லும் வழியில் அணைக்குடி சாலையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.