

புரட்டாசி சனியன்று நாராயணாய நமஹ என்ற எட்டெழுத்து மந்திரம் தவறாமல் சொல்லவேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கின்றோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு நான் உரியவன் என்று அர்த்தம். நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப் பொருள்.
அதாவது உலகத்தில் நாம் வந்துவிட்டோம். பிறகு என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா, உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கை திரும்பி வருகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம்.
கலியுகக் கொடுமைகளிலிருந்து தப்பித்து பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணா என்று சொல்வது பொருத்தமானது. கடவுளைவிட அவருடைய திருநாமத்திற்கு அதிக சக்தி உண்டு. திரௌபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம். முதலையிடம் சிக்கிய யானையின் துன்பத்தைத் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம். கலியுகத்தில் இவ்வாறான நாமஜபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடையமுடியும்.
கட்டித்தங்ககம் போல் கடவுள். ஆபரணத்தங்கம் போல் அவரின் திருநாமம் என்று சொல்வதுண்டு. ஆபரணத்தங்கமான கடவுளின் நாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி எளிதாகச் சேமிக்கலாம். ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் ஆகிய ஆறு வகையான குணங்களைக் கொண்டவன் என்பதே பகவான் என்ற வார்த்தையின் உண்மைப் பொருளாகும்.
இத்தகைய பகவான் சத்யத்வம், ஞானத்வம், அனந்தத்வம், ஆனந்தத்வம், அமலத்வம் என்ற உண்மை, அறிவு, எல்லையில்லா நிலை, இன்பம், தூய்மை ஆகியவடிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது.
இவ்வளவு பெருமை வாய்ந்த திருமாலின் அருள் அமுதத்தை சாதாரண மனிதன் கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் ஒரு மார்க்கத்தை வைஷ்ணவம் உலகுக்குத் தந்துள்ளது. அந்த அமுதம் ஓம் நமோ நாராயணா என்று எட்டெழுத்து மந்திரமாகும். இதில் வரும் ஓம் என்ற பிரணவம் மூலமந்திரம் என்பதை நாம் அறிவோம்.
வைஷ்ணவ சித்தாந்தத்தின்படி அ,உ,ம என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கை ஒலியே ஓம் என்பதாகும். இதில் அகரம் இறைவனையும், மகரம் உயிரையும், உகரம் படைத்தலையும் குறிப்பிடுவதாகும்.
உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதை காட்டுவதே கடைசியில் வரும் நம என்ற வார்த்தையாகும். ந என்ற முதல் எழுத்திலா இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது. மகரம் என்பது உயிரைக் குறிப்பதாகும். இதன் பொருள் நான் எனக்குரிய வன் இல்லை என்பதாகும். நான் நாராயணன் ஒருவனுக்கே அடிமை. நாராயண என்ற வார்த்தைகளுக்கு தனித்தனி அர்த்தம் உண்டு.
நான் என்பது தன்னிடமிருந்து தோன்றிய உயிர்களைக் குறிக்கும்.ரே அயன என்ற சொல் உபாயம், பலம், ஆதாரம் என்ற பொருளைக்காட்டுகிறது. கடைசியாக ஆய என்ற பதம் பணி என்ற பொருளைக் கொண்டது. அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும். ஓம் நமோ நாராயணாய என்ற வார்த்தைகள் மனிதனின் ஆணவத்தை அழிக்கிறது. ஆன்மநேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது.
இதனால்தான் பெரியாழ்வார்
மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை
மூன்று மாத்திரை உள்வாங்கி
மேலை வண்ணனை மேவுதிர் ஆகில்
விண்ணகத்தில் மேவலும் ஆமே
என்று சொல்கிறார்.
அதாவது எட்டெழுத்து மந்திரத்தை மூச்சுக் காற்றுடன் உள்ளுக்குள் இழுத்துத் தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுத மொழியாகும்.
வைஷ்ணவம் வெறும் வாழும் நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனைச் சேர்க்கும் நெறியாகும். எனவே நாம் ஓம் நமோ நாராயணாய என்று மீண்டும் மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களைத்களைந்து பாவங்களைப்போக்கி குழந்தை போல் அரவணைத்துக் கொள்ளும் திருமாலின் திவ்ய பாதங்களை சிக்கென பிடித்து வணங்குவோம். புரட்டாசி பெருமாளுக்குரிய மாதத்தில் இந்த எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் பெருமாளின் அருளைப் பெறுவோம்.
இந்த ஆன்மீக வழிகாட்டுதலைப் பின்பற்றி எட்டெழுத்து மந்திரத்தை உளப்பூர்வமாக ஜபிப்பதன் மூலம் மன அமைதி, குடும்பத்தில் செல்வம், மற்றும் கலியுகத் துன்பங்களிலிருந்து விடுபட்டு பெருமாளின் பரிபூரண அருளைப் பெறலாம்.