ஒரே வெட்டில் கிடைத்த பேரரசு: விக்ரமாதித்தனுக்கு அருளிய உஜ்ஜைனி மாகாளி!

மந்திரவாதியின் உத்தியால் சாத்தியமான அசாத்திய சாகசம் மற்றும் காளியின் அற்புதம்.
விக்ரமாதித்தன் - Ujjain Mahakali
விக்ரமாதித்தன் - Ujjain Mahakali
Updated on

விக்ரமாதித்தன் மன்னராகி நாட்டை விரிவுபடுத்த நினைக்கும் போது, பட்டி கண்ட காட்டுக் காளிகோவிலில் உள்ள கல்வெட்டின் சவாலைக் கேட்டு, ஏழு உறிகளை ஒரே வெட்டில் அறுத்து, வேல்முனையில் பாய முயல்கிறான். பட்டியின் யோசனைப்படி செயல்படும் அவனின் வீரத்தையும் தீரத்தையும் கண்டு மகாளி அவனை காப்பாற்றி, வரம் கேட்கச் சொல்கிறாள்.

விக்ரமாதித்தன் மன்னனாக முடி சூட்டிக்கொண்டதும் தனது மந்திரியான பட்டியுடன் நாட்டை விரிவுபடுத்தும் திட்டங்கள் குறித்து விவாதித்தான். அதற்கான இடத்தை பட்டி அறிந்து வருவதாக கூறி மனித சஞ்சாரம் இல்லாத ஒரு காட்டுக்குள் சென்று ஒரு இடத்தை கண்டான்.

அங்கே குளக்கரையில் பிரம்மாண்டமான ஆல மரங்களுக்கு நடுவில் காளி கோவில் காணப்பட்டது. குளத்தின் கரையில் உள்ள ஒரு ஆலமரத்தின் கிளையில் சக்கர வளையம்போல ஏழு உறிகள் கட்டப் பட்டிருந்ததோடு குளத்து நீரின் உள்ளே ஆகாயத்தை நோக்கி மிக கூர்மையான வேல் ஒன்று நடப்பட்ட இருந்தது.

பட்டி பயங்கர ரூபம் கொண்ட பத்திரகாளியை வணங்கி அங்கிருந்த கல்வெட்டை வாசித்தான். எவனொருவன் பொய்கையில் குளித்து ஆலமரத்திலிருந்து தொங்கும் ஏழு உறிகளையும் ஒரே வெட்டில் வீழ்த்தி தலைகீழாக குளத்தின் நடுவே இருக்கும் வேல்முனையில் பாய்கிறானோ அவனுக்கு காளி பிரசன்னமாகி வேண்டிய வரங்களை தருவாள் என்று எழுதியிருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: குலதெய்வ ரகசியம்: ஊர்க்கோடி அம்மன்!
விக்ரமாதித்தன் - Ujjain Mahakali

இதை செய்வதற்கு விக்ரமாதித்தன் ஒருவனே தகுதியானவன் என்று பட்டி முடிவு செய்து ஊருக்கு திரும்பி வந்து அரசனிடம் விவரங்களை தெரிவித்தான். ஒரு நல்ல நாள் பார்த்து காளியை வணங்கி ஒரே வெட்டில் ஏழு உறிகளையும் அறுப்பது எப்படி என்று யோசித்தான்.

அப்போது பட்டி, அரசே கடைசி உறியில் காலை வைத்து ஒருமுறை சுழன்றால் கயிறு முறுக்கிக் கொண்டு ஏழு உறிகளும் ஒன்றாகிவிடும். அப்போது உங்கள் வாளை எடுத்து ஒரே வெட்டில் அத்தனை கயிறுகளையும் வெட்டி எறியலாம். தலைகீழாக நின்றவரே இவ்வாறு செய்தால் உறியில் இருந்த ஒரு காலை விடுவித்துக்கொண்டு வேலின் மீது பாய்வதற்கும் வசதியாக இருக்கும் என்றான் பட்டி.

விக்ரமாதித்தன் மிகுந்த தீரத்தோடு அவ்வாறே செய்து வேல்முனையை நோக்கி பாய்ந்தபோது பத்ரகாளி பிரசன்னமாகி அவனை இரண்டு கைகளினாலும் தாங்கி காப்பாற்றினாள்.

உன்னுடைய வீரமும் தீரமும் என்னை பரவசப்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத இந்தப் போட்டியில் நீ சாமர்த்தியமாக வென்று விட்டாய் விக்ரமாதித்தா! வேண்டிய வரத்தை கேள் என்றால் காளி.

உன்னுடைய சன்னிதானத்தில் இருந்தே ஆட்சி புரிய விரும்புவதால் இந்த இடத்தில் மாட மாளிகையும் கூட கோபுரங்களும் உண்டாக வேண்டும் தேவி! அந்த சிம்மாசனத்தில் இருந்து நான் நாடாள வேண்டும் என்றான்.

விக்ரமாதித்தன் - Ujjain Mahakali
விக்ரமாதித்தன் - Ujjain MahakaliAI Image

அப்படியே ஆகட்டும் என்று கூறிய காளி, இந்த பட்டினம் உஜ்ஜையினி மாகாளிப்பட்டினம் என்ற பெயரோடு விளங்கும். என்னுடைய சன்னதிக்கு கீழே இருக்கும் தங்கப் புதையலை எடுத்துக்கொண்டு நீண்ட காலம் நல்லாட்சி புரிந்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று ஆசி கூறிவிட்டு காளிதேவி மறைந்துவிட்டாள்.

காளிதேவியின் பெயரால் அந்த பட்டணம் உஜ்ஜயினி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு விக்கிரமாதித்தன் காளியின் அருளுக்கு பாத்திரம் ஆகி மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவி ஆண்டு வந்தான்.

பார்ப்பதற்கு கொடூரமானவளாக தோற்றம் தரும் காளி தேவி அனுக்கிரகம் செய்வதில் நிகரற்றவள். பக்தர்களின் துயர் துடைப்பதில் அவளுக்கு யாரும் இணை கிடையாது. அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வந்து என்ன மகனே! என்று கேட்கும் கருணை உள்ளம் கொண்டவள் காளிதேவி.

காளி தேவியின் ஒரு கை அச்சப்படாதே, துக்கப்படாதே எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கை தரும் வகையில் அபய ஹஸ்தத்தை காட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
வெட்டுப்பட்ட 'உடையாள்' - 'வெட்டுடையாள்'! அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில்... பண்பாட்டு சுவடுகள்!
விக்ரமாதித்தன் - Ujjain Mahakali

தீமை எங்கே நடந்தாலும் வெட்டி சாய்ப்பேன் என்பதற்கு இணங்க மற்றொரு கையில் வாள் ஏந்தி இருக்கிறாள். தீயவர்கள் யாரும் அவளது பார்வையில் இருந்தோ தண்டனையில் இருந்தோ தப்பவே முடியாது என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

இந்த வரலாற்றை வாசிப்பதன் மூலம், எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் சாதுரியத்தாலும் தைரியத்தாலும் எவ்வாறு வெல்வது என்ற துணிச்சலையும், பக்தியின் மூலம் வாழ்க்கையில் அமையப்போகும் பாதுகாப்பையும் நன்மைகளையும் நீங்கள் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com