பூரி ஜெகந்நாதர் கோயிலில் நடக்கும் இந்த ஆன்மீக அதிசயங்கள் தெரியுமா?

காற்று வீசும் திசைக்கு எதிரே பறக்கும் கொடி மற்றும் நிழல் விழாத கோபுரத்தின் பின்னணியில் உள்ள சுவாரசியங்கள்.
பூரி ஜெகந்நாதர்
பூரி ஜெகந்நாதர்Gemini image
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

திசங்கரரால் இந்தியாவின் நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்ட நான்கு புண்ணியத் தலங்களான 'சார் தாம்' தலங்களில் ஒன்று பூரி ஜெகந்நாதர் ஆலயம். இது ஒடிசா மாநிலத்தில் உள்ளது. இங்கு பகவான் விஷ்ணு 'ஜெகந்நாதராகக்' காட்சியளிக்கிறார். கடலோரம் அமைந்துள்ள இந்நகரம் ஆன்மீகத்தையும் இயற்கை அழகையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் அற்புதமாகும்.

அருள்மிகு ஜெகந்நாதர் ஆலயம்:

பூரியின் அடையாளமே உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில்தான். 12-ஆம் நூற்றாண்டில் கங்க வம்சத்து மன்னர் அனந்தவர்மன் சோடகங்க தேவனால் கட்டப்பட்ட இக்கோயில், திராவிட மற்றும் கலிங்கக் கட்டிடக் கலையின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் அற்புதப் படைப்பாகும். இங்கு ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்ரர் (பலராமர்) மற்றும் சகோதரி சுபத்ரா ஆகிய மூவரும் மரத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்களாக அருள்பாலிக்கின்றனர்.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரி ரத யாத்திரையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள். இக்கோயிலின் உச்சியில் உள்ள கொடி, காற்று வீசும் திசைக்கு எதிர்த்திசையில் பறப்பது, கோயிலின் நிழல் தரையில் விழுவதில்லை மற்றும் ஜெகந்நாதர் கோயில் கோபுரத்திற்கு மேல் பறவைகள் பறப்பதில்லை போன்ற பல ஆன்மீக அதிசயங்களுக்கு இத்தலம் பெயர் பெற்றது.

குண்டீசா கோயில் (Gundicha Temple):

ஜெகந்நாதர் கோயிலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். இது 'ஜெகந்நாதரின் பூங்கா வீடு' என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரையின் போது, ஜெகந்நாதர் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் 7 நாட்கள் தங்குவதற்காக இக்கோயிலுக்கு வருகிறார். அழகிய தோட்டங்கள் சூழப்பட்ட அமைதியான சூழலில் கலிங்க பாணி கட்டிடக்கலையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

லோகநாத் கோயில் (Loknath Temple):

பூரியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் பழமையான தலமாகும். இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கமாகும்; இது எப்போதும் நீரால் சூழப்பட்டே இருக்கும். இங்கு சிவபெருமானை தரிசித்தால் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

பூரி ஜெகந்நாதர்
பூரி ஜெகந்நாதர்Gemini image

பூரி கடற்கரை:

ஆன்மீகத் தலங்களைத் தாண்டி பூரியின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது அதன் தங்க மணல் பரப்பிய கடற்கரையாகும். வங்காள விரிகுடாவில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களின் அழகிய மணல் சிற்பங்களை இக்கடற்கரையில் அடிக்கடி காணலாம்.

இதையும் படியுங்கள்:
ஏரிகளின் நகரம் போபால்: ஒரு முழுமையான ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பயணம்!
பூரி ஜெகந்நாதர்

சுதர்சன் மணல் சிற்ப அருங்காட்சியகம்:

பூரி ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அருங்காட்சியகம் இது. மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களால் நிறுவப்பட்டது. மணலால் செய்யப்பட்ட அழகான சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலை ஆர்வலர்கள் பார்வையிட இது மிக உகந்த இடமாகும்.

ரகுராஜ்பூர் பாரம்பரிய கைவினைக் கிராமம்:

பூரியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம். இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் மரபுவழி ஓவியர்களான 'படாசித்ரா' கலைஞர்கள் வாழ்கிறார்கள். துணிகள் மற்றும் பனை ஓலைகளில் வரையப்படும் பாரம்பரிய ஒடிசா ஓவியங்கள் மற்றும் மரப் பொம்மைகள் ஆகியவை இங்கு தயாரிக்கப்படுகின்றன. இவை ஒடிசாவின் கலாச்சாரத்தைப் பறைசாற்றுபவையாகும்.

சிலிகா ஏரி (Chilika Lake):

பூரிக்கு அருகில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரி இதுவாகும். இங்கு டால்பின்களைப் பார்ப்பதும், குளிர்காலத்தில் புலம்பெயரும் பறவைகளைக் காண்பதும் சிறந்த அனுபவமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சென்னை டு ஸ்ரீலங்கா: நான்காம் பகுதி!
பூரி ஜெகந்நாதர்

கொனார்க் சூரியனார் கோயில்:

பூரியிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள உலக பாரம்பரியச் சின்னமான 'தேர் வடிவில்' அமைந்த பிரம்மாண்டமான சூரியனார் கோயில். 13-ஆம் நூற்றாண்டில் நரசிம்ம தேவ மன்னரால் கட்டப்பட்ட இக்கோயில், 24 மாபெரும் கல்லாலான சக்கரங்கள் மற்றும் 7 குதிரைகளுடன் கலிங்கச் சிற்பக்கலையின் உச்சமாகத் திகழ்கிறது. சூரியனின் முதல் கதிர்கள் நேரடியாகக் கருவறையை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயில் 'கருப்புப் பகோடா' என்றும் அழைக்கப்படுகிறது.

பூரி ஜெகந்நாதர் கோயிலின் கட்டிடக்கலை மேன்மை, அங்கு நடக்கும் ஆன்மீக அதிசயங்கள் மற்றும் பூரியைச் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்களைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com