நட்பின் ஆழம் உணர்த்தும் இராமாயணம்: வலிமையான வாலி இருக்க சுக்ரீவனை ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

நண்பரை இவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இராமாயணம் கூறும் வாழ்வியல் செய்தி!
Ramayana Teach about Friendship
Lord SRI ram and Sugrivan Image : AI
Updated on

ராமாயணம் படித்த பலருக்கும் இந்த கேள்வி எளிதில் தோன்றலாம். ராவணனை வீழ்த்துவதற்கு முழு வலிமையும் கொண்ட மாவீரனான வாலியை நண்பனாக தேர்ந்தெடுப்பதற்கு பதில், அரசாட்சி இழந்த வேறு இடத்திற்கு செல்ல பயந்த, சுக்ரீவனை எதற்காக ராமர் தன் நண்பனாக தேர்ந்தெடுத்தார் ?

போருக்கு தயாராக இருப்பவன் தனக்கு துணையாக, வலிமை வாய்ந்த ஒரு நபரையே தேர்ந்தெடுப்பான். அப்படி இருக்கையில் வலிமை குன்றிய விரட்டப்பட்ட ஒரு வானரத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும்.

வாலி மிகப்பெரிய வீரனாக இருக்கலாம் , அவன் ராவணனை தனது வாலில் கட்டி, அங்குமிங்கும் பந்தாடி கதற வைத்திருக்கலாம். ராமர் வாலியிடம் உதவி கேட்டிருந்தால் அவர் , விரைவிலேயே ராவணனை சிறை பிடித்து சீதையை மீட்டு ராமனிடம் கொடுத்திருப்பார். ஆனால், சுக்ரீவன் அப்படியல்ல , அவனிடம் எதுவும் இல்லை அனுமன் என்ற உண்மையான நண்பனை தவிர.

சுக்ரீவன் வலிமை மிக்கவனாயினும் ராவணனிடம் அதற்கு முன்னர் சண்டை செய்து தன் வலிமையை நிரூபித்ததும் இல்லை. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் சுக்ரீவன் "தன்னை மீட்கவும் தன் அரசாட்சியை பெற்றுத் தரவும் ஒரு ரட்சகன் வருவார்" என்று நம்பி, நீண்ட காலமாக வாலியால் நுழைய முடியாத ரிஷிமுக பருவதத்தில் தங்கி இருந்தான்.

ராமர் இது பற்றி கபந்தனிடம் ஆலோசனை பெற்றார். அவரோ உங்களது சூழ்நிலையை உண்மையாக புரிந்து கொள்பவர்களுடன் நட்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். ராமர் வலிமை மிக்க அதிகாரம் கொண்ட ஒரு நண்பரை பெறுவதைவிட, தனது வலிகளை உணர்ந்து கொண்டு, தனது இலக்கை அடைய தோள் கொடுக்கும் நண்பனை தேர்ந்தெடுக்கிறார்.

ஒரு விஷயத்தில் ராவணனும் வாலியும் ஒன்றுதான், அவர்கள் இருவரும் மற்றொருவரின் மனைவியை கடத்திச் சென்றவர்கள். அப்படி இருக்கையில் தம்பியின் மனைவியை அபகரித்தவனின் நட்பை பெற்று, தன் மனைவியை மீட்பது முரண்பாடு கொண்ட கூட்டணியாகவே இருக்கும். அவ்வாறு செய்தால் வாலியின் குற்றத்தினை ஆதரித்தது போலாகும்.

இதையும் படியுங்கள்:
ராமன் ஏன் வென்றான்? மண்டோதரி தந்த விளக்கம்!
Ramayana Teach about Friendship

ஒரு போர்க்குடியில் பிறந்த வீரனுக்கு முன்னின்று போரிடுவது தானே அழகு. எதிரியை எதிர்கொள்வது. அதற்கு நண்பரை துணைக்கு அழைப்பதும் , ஆலோசனைக் கேட்பதும் உதவிக்கு படைகளை கோருதல் என்ற அளவில் இருக்கவேண்டும். ஆனால் , போர் முனையில் எப்போதும் தலைவனே முன்னே நின்று அனைவரையும் வழி நடத்திச் செல்ல வேண்டும்.

சுப்ரீவனின் நட்பை தேர்ந்தெடுக்க காரணம்?

ராமரைப் போலவே சுக்ரீவனும் மனைவியையும் , ராஜ்ஜியத்தையும் இழந்ததால் இருவருக்கும் இருப்பது ஒரே வித வலிதான். அதனால் , ராமர் சுக்ரீவனுக்கு உதவுவதுதான் பரஸ்பர உதவியை பெறுவதற்கு நேர்மையான வழி. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் உண்மையான நட்புடன் உறுதுணையாகவும் இருந்தனர். தனது போராட்டத்தில் முதற்கட்டமாக சுக்ரீவனுக்கு நியாயம் வாங்கி தர ராமர் முடிவு செய்தார்.

சுக்ரீவனின் நட்பு கிடைத்ததும் ராமர் வாலியை வதம் செய்து, சுக்ரீவனின் மனைவியையும் ராஜ்ஜியத்தையும் மீட்டு தருகிறார். ராமர் இலங்கை செல்ல வானரப் படையையும் தன் உயிர் நண்பன் அனுமனையும் ராமரிடம் அர்ப்பணித்தான் சுக்ரீவன். இறுதியில் ராமரின் நோக்கம் வெல்வதற்கு சுக்ரீவன் கொடுத்த படையும் அனுமனும் பெரும் காரணமாக இருந்தனர். இந்த கூட்டணி இணைந்தது அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலை நாட்டுவதற்காகத்தான்.

இதையும் படியுங்கள்:
மரண தண்டனையைவிடக் கொடுமையான தண்டனை எது?
Ramayana Teach about Friendship

உண்மையான நட்பு என்பது வலிமை , பணம் , செல்வாக்கு ஆகியவற்றை வைத்து தேர்தெடுக்க கூடாது. ஒரு கூட்டணி என்று நாம் தொடங்கும் போது அதில் வலிமை வாய்ந்த நபர்களை இணைப்பதைவிட , மனதளவில் ஒத்த உறுதி வாய்ந்த நபர்களையும், தர்மத்தின் படி நடப்பவர்களையும் இணைப்பதுதான் சிறந்த தேர்வாக அமையும்.

உண்மையான கூட்டணி என்பது வலிமையால் இணைக்கப்படுவது இல்லை, மாறாக புரிதல், நீண்டகால ஒத்துழைப்பு, ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவி செய்தல், ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நண்பரை தேர்வு செய்ய வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com