1008 சிவலிங்கங்கள் அமைந்த அரியனூர் திருக்கோவில்: சேலத்தின் அற்புத ஆன்மீக அதிசயம்!

ஓம் வடிவில் அமைக்கப்பட்ட குன்றுக்கோவில்; ஆன்மீக அமைதியும் அழகும் நிறைந்து வழியும் அருள்தலம்!
சிவலிங்கம் கோவில் - Salem 1008 Shivalingam Temple
சிவலிங்கம் கோவில் - Salem 1008 Shivalingam Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

சேலம் மாவட்டம் அரியனூரில் அமைந்துள்ள 1008 சிவலிங்கம் கோவில் மிகவும் சிறப்பு மிக்க அமைதியான ஒரு ஆன்மீகத் தலமாகும். இது சேலம்-கோவை, சேலம்-ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நகரிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் அரியானூர் பகுதியில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.

இக்கோவிலில் மையப் பகுதியில் ஒரு பிரதான பெரிய சிவலிங்கமும், அதனைச் சுற்றிலும் பாதையின் இருபுறமும் 1007 சிவலிங்கங்களும் அழகாக வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் எதிரே அழகாக நந்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 1008 சிவலிங்கங்கள் சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களைக் (சகஸ்ர நாமங்கள்) குறிக்கும் வகையில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கஞ்சமலை அடிவாரத்தில் விநாயகா மிஷன் நிறுவனத்தால் விநாயகா மிஷன் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் ஒரு சிறிய குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதனை இதன் கல்வி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்தினர் மிகச்சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்து வருகின்றனர். இது மாங்கனி நகரமான சேலம் மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விசேஷமான தலமாகும்.

பாதை எங்கும் வரிசையாக 1007 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, குன்றின் உச்சியில் உள்ள முதன்மை சன்னதியில் 1008வது பிரதான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மை லிங்கத்தின் முன்புறம் ஒரு பெரிய நந்தி சிலையும் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்தில் பெரிய விநாயகர் சிலை மற்றும் மலைப்பாதையில் முருகனின் அறுபடைவீடு வடிவச் சிலைகள், அஷ்டலஷ்மி, ஆஞ்சநேயர், ஐயப்பன் மற்றும் பெருமாள் சன்னதிகளும் உள்ளன.

உலகிலேயே பிரம்மாவுக்குத் தனியாக சன்னதி உள்ள சில அரிதான ஆன்மீகத் தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் குன்றின் மீது அமைந்துள்ளதால், சுற்றிலும் உள்ள சங்ககிரி மலைகளின் அழகையும் இயற்கை பசுமையையும் கண்டு ரசிக்கலாம்.

சிவலிங்கம் கோவில் - Salem 1008 Shivalingam Temple
சிவலிங்கம் கோவில் - Salem 1008 Shivalingam Temple

1008 சிவலிங்கங்களையும் ஒரே இடத்தில் தரிசிப்பது பெரும் ஆனந்தமாகும். மலை உச்சியில் ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரர் அருள் புரியும் இத்தலத்தில் அம்பிகை சிவபெருமான் இணைந்த திருக்கோலத்தை தரிசிப்பது இத்தலத்தின் முக்கியமான ஆன்மீக அனுபவமாகும். பிரதான சிவலிங்கம் 17 மீட்டர் உயரம் கொண்டது.

அருணாச்சல சுந்தரேஸ்வரராக காட்சியளிக்கும் ஈசன் உம்மை அம்பிகையுடன் அருள்புரியம் தலம் இது. சிவபெருமானின் சிவ சகஸ்ர நாமாவளி பெயர்களின் அடிப்படையில் 1008 லிங்கங்களும் நிறுவப்பட்டுள்ள இக்கோவில், ஓம் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ஓம் வடிவம் இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாகும் இது பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் குறிக்கிறது. இக்கோவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகவும் திகழ்கிறது.

விழாக்கள்:

இங்கு மகா சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை தீபம், ஆனித் திருமஞ்சனம் போன்றவை மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினங்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், வழிபாடுகளும் விசேஷமாக நடைபெறுகின்றன. 1008 சிவலிங்கங் களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்வது மிகுந்த புண்ணிய பலன்களைத் தரும்.

திறந்திருக்கும் நேரம்:

காலை 7:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
கேட்ட வரம் தரும் ஆர். குன்னத்தூர் வைகுண்ட பெருமாள்! இதுவரை அறியாத ஆன்மீக தகவல்கள்!
சிவலிங்கம் கோவில் - Salem 1008 Shivalingam Temple

குன்றின் உச்சிக்கு செல்வதற்கு வாகனங்களுக்கான தார்ச்சாலை வசதியும், வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. எனினும் ஆன்மீகச் சூழலை முழுமையாக அனுபவிப்பதற்கும், ஒவ்வொரு லிங்கத்தையும் தரிசிப்பதற்கும் அடிவாரத்தில் இருந்து நடந்து செல்வதே சிறந்த அனுபவமாக இருக்கும். குன்றின் உச்சியில் இருந்து பார்க்கும் பொழுது சுற்றியுள்ள பசுமையான வயல் வெளிகளும், தூரத்தில் தெரியும் சங்ககிரி மலைகளின் அழகிய காட்சியையும் கண்டுக்களிக்கலாம்.

எப்படி செல்வது?

சேலத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சங்ககிரி, ஈரோடு அல்லது கோவை செல்லும் பேருந்துகளில் ஏறி அரியலூர் அல்லது விநாயகா மிஷின் அருகில் இறங்கலாம். நிறைய பேருந்துகளும், ஆட்டோ வசதிகளும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கேரள சுவரோவியங்களில் இத்தனை ரகசியங்களா? இதுவரை வெளிவராத ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
சிவலிங்கம் கோவில் - Salem 1008 Shivalingam Temple
logo
Kalki Online
kalkionline.com