அவணி முழுவதும் இடைவிடாது ஒருசில நாட்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது, ‘அயோத்யா’ எனும் நகரத்தின் பெயரும், அந்நகரத்தின் நாயகனான ஸ்ரீராமரின் திரு நாமமும். கல்யாண ராமா, பட்டாபிஷேக ராமா, சீதா ராமா, தசரத குமரா ராமா என இப்படி எத்தனை எத்தனையோ திருப்பெயர்களைக் கொண்டு ஸ்ரீராமபிரானை அழைத்து மகிழ்கிறோம் நாம். ஸ்ரீராமரின் கல்யாண குணங்களை எடுத்துச் சொல்லும் திரு நாமாக்களில் முக்கியமான ஒரு திருநாமம், ‘சரணாகத வத்சலன்’ என்பது.
‘எனக்கு வேறு எதுவும் கதி கிடையாது. வேறு யார் திருவடியையும் நாடி போகும் மதி என்னிடம் இல்லை… நீயே எனக்கு கதி ராமா… நான் செய்த தவறுகளை தயவு செய்து மன்னித்து என்னை நீ ஏற்றுக்கொள்’ என்று சரணாகதி செய்து விட்டால் போதும் ஸ்ரீராமபிரான் நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டு நமக்கு நற்கதி அருளியே தீருவார் என்பதற்கு சாட்சியாக ராமாயணத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளை நாம் படித்திருப்போம்.
‘ராமா’ என்று சொல்லி விட்டால் போதுமே, நம் பாவ வினைகள் எல்லாமே ஒழிந்து விடுமே. மிக சுலபமாக நாம் செய்யக்கூடிய மிக பெரிய தவம் என்பது, ராம நாம ஸ்மரனைதான். ‘ராமா ராமா ராமா’ என்று சதாசர்வ காலமும் நாமும் அந்த ராமரின் திருநாமத்தை மனதில் நிறுத்தி, நம் வாக்கால் சொல்லிக்கொண்டே வரும்போது நம் வாழ்க்கையில் பல இடறுகள் தானாகவே நீங்கி விடும்.
‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
‘சென்மமும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராமவென்றிரண்டெழுத்தினால்’
என்கிறாரே கம்பரும் தமது கம்ப ராமாயணத்தில்.
கருணைக்கடல் ஸ்ரீராமபிரான். அவன் கருணைக்கு அத்தாட்சியாய் அல்லவா அழகாய் நம் கண்முன்னே இன்றும் நடமாடி கொண்டிருக்கின்றன அணில்கள்? அணில்களின் முதுகில் அழகாய் தன் அன்பின் அடையாளமாய், கருணையின் ஊற்றாய், மூன்று விரல்களால் தடவிக் கொடுத்தவன் அல்லவா அந்த மூவுலகிற்கும் அதிபதியான பெருமாள்?
ராமன், சீதையை தேடி இலங்கைக்கு செல்ல எத்தணிக்கும் போது ஹனுமனின் தலைமையில் அத்தனை வானரங்களும் சேது பாலம் கட்ட பல விதங்களில் உதவி புரிந்துகொண்டே இருந்ததை, அணில்கள் பார்த்துக்கொண்டே இருந்ததாம். அடடா, இந்த வானரங்கள் எல்லாம் ராமபிரானுக்கு இவ்வளவு அழகாக உதவிகள் (கைங்கர்யங்கள்) செய்கிறதே, நாம் இப்படி ஒன்றுமே செய்யாமல் இருக்கிறோமே என்று வருத்தப்பட்டு ஏதாவது ஒரு உதவியை நாம் செய்தே ஆக வேண்டும் என்று கூடி பேசி முடிவெடுத்ததாம்.
நம்மால் என்ன செய்ய முடியும்? என்று ஒரு கணம் யோசித்து விட்டு நம்மாலும் ராமபிரானுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று எண்ணி வானரங்கள் பெரிய பெரிய பாறைகளை கொண்டு போய் கடலில் போடுகிறதே. அந்தப் பாறைகள் அப்படியே இருக்க வேண்டுமென்றால், அதன் இடுக்கில், பூச்சு வேலை போல மண் சேர வேண்டுமே… நாம் கடலில் சென்று நீராடி இதோ இந்த மணற்பரப்பிற்கு வருவோம். கடலில் சென்று நீராடுவதால் நம் உடலில் நீர் அப்படியே இருக்கும் அந்த நீரோடு நாம் மண்ணில் புரளும்போது அந்த மண் அப்படியே நம் உடலில் ஒட்டிக்கொள்ளும். அந்த மண்ணை அப்படியே அந்த பாறைகளின் இடுக்கில் போய் தட்டி விட்டு வருவோம் என்று எண்ணி, அதன்படியே செய்து முடித்ததாம் அணில்கள்.
அணில்கள் செய்தது சிறிய வேலை என்றாலும் அவை சீரிய வேலை அன்றோ? சீராமனின் பரிபூரண கிருபா கடாட்சத்துக்குத் தேவை அன்புதானே? அந்த இறைவன் மீது அணில்கள் அன்று காட்டிய அன்பைத்தான் நாம் பக்தி என்கிறோம். அன்பை மெச்சி அல்லவா ஸ்ரீராமபிரான் அந்த அணில்களின் உடலின் மீது தம் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்து அந்த மூன்று விரல்களின் அடையாளங்களை நமக்கு பாடமாக இன்றும் காட்டிக் கொண்டிருக்கிறார்?
‘சரணாகத வத்சலா ராமா… கருணா மூர்த்தியே ராமா’ என்றே நாமும் ஸ்ரீராமரை துதிப்போம். ஸ்ரீராமரை நம் மனக்கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்வோம், வாருங்கள்.