

நவராத்திரியின் நிறைவுப் பகுதியில் வரும் சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும் நம் வாழ்வில் அறிவுக்கும் ஆற்றலுக்கும் புதிய தொடக்கத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திருநாள்கள். 2026 அக்டோபர் 19 அன்று சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையும், அக்டோபர் 20 அன்று விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன. இவற்றின் பின்னணியில் சுவாரஸ்யமான ஆன்மிகச் செய்திகளும் வாழ்வியல் பாடங்களும் பொதிந்துள்ளன.
கலைமகளின் அருள்!
வெண்ணிற ஆடை அணிந்து, கையில் வீணையும் ஏட்டையும் ஏந்தி, வெண்தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி கல்வி, ஞானம், கலைகள் ஆகியவற்றின் அடையாளமாகப் போற்றப்படுகிறாள். சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்ட கல்விக்கும் தொழிலுக்கும் உதவும் பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். அறிவைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அதனை நல்ல வழியில் பயன்படுத்தவேண்டும் என்பதையும் இவ்வழிபாடு நினைவூட்டுகிறது.
புத்தகங்களுக்கு ஓய்வு கொடுக்கும் நாள்!
சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களைப் பூஜையில் வைத்து வழிபடுவதால், அன்றைய தினம் அவற்றைப் படிக்காமல் இருப்பது பல குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படும் மரபு. மறுநாள் விஜயதசமியன்று புத்தகங்களை மீண்டும் எடுத்து வாசிப்பைத் தொடங்குகின்றனர். அறிவைத் தெய்வமாக மதிக்கும் இந்த வழக்கம், கல்வியின் மீது நன்றியுணர்வை வளர்க்கிறது.
ஆயுதங்களும் கருவிகளும் ஏன் வழிபடப்படுகின்றன?
ஆயுத பூஜையன்று வாகனங்கள், தொழில் கருவிகள், இயந்திரங்கள், கணினிகள் என நமது வாழ்வாதாரத்துக்கு உதவும் பொருட்களைச் சுத்தம் செய்து வழிபடுகிறோம். விவசாயி தனது கலப்பையையும், கலைஞர் தனது இசைக்கருவியையும், தொழிலாளர் தனது கருவிகளையும் வணங்குவது உழைப்பின் பெருமையை உணர்த்துகிறது. எந்தத் தொழிலும் இழிவானதல்ல; நேர்மையான உழைப்பே உயர்வுக்கு அடிப்படை என்பதே இதன் அழகிய செய்தி.
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலின் தனிச்சிறப்பு!
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கென்று தமிழகத்தில் தனிச் சிறப்புடன் விளங்கும் திருக்கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்ப் புலவர் ஒட்டக்கூத்தருடன் தொடர்புடைய இத்தலத்தில் விஜயதசமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கு வதற்காகப் பெற்றோர்கள் இங்கு வந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.
முதல் எழுத்து எழுதும் இனிய தருணம்!
விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி " வித்யாரம்பம்" என்று அழைக்கப்படுகிறது. அரிசி நிரம்பிய தட்டில் குழந்தையின் விரலைப் பிடித்து முதல் எழுத்தை எழுதச் செய்வது அழகிய மரபு. இது வெறும் எழுத்துப் பயிற்சி மட்டும் அல்ல.
வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. இசை, நடனம் போன்ற கலைகளைக் கற்க தொடங்குவதற்கும் இந்நாள் சிறப்பானதாக போற்றப்படுகிறது.
பூஜையில் வைக்கப்பட்ட புத்தகங்களை விஜயதசமி அன்று எடுத்து படிப்பது ஏன்?
சரஸ்வதி பூஜை அன்று வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட புத்தகங்களையும் கருவிகளையும் விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துவது வழக்கம். அதனை "பூஜை எடுத்தல்" என்றும் குறிப்பிடுவர். அறிவையும் உழைப்பையும் மதித்து புதிய உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இந்த மரபின் உட்பொருள்.
நவராத்திரியின் நிறைவு நாளாக விளங்கும் விஜயதசமி தீமையை நன்மை வெல்வதையும் அறியாமையை அறிவு வெல்வதையும் நினைவூட்டுகிறது. எனவே இவ்விரு திருநாள்களும் வழிபாட்டுடன் நின்றுவிடாமல் நமது வாழ்வில் கற்றலையும் நல்ல முயற்சிகளையும் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும் உறுதிமொழியாக அமையட்டும்!
விஜயதசமி தரும் வெற்றிப் பாடம்!
விஜயதசமி என்பது தீமையை நன்மை வென்ற நாளாகப் போற்றப்படுகிறது. இராவணனை ராமர் வென்றதும், மகிஷாசுரனை அன்னை துர்கை வென்றதும் இந்நாளுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.
தென்னிந்தியாவில் குழந்தைகளுக்கு முதன்முதலாக எழுத்துப் பயிற்சி அளிக்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சிக்கும் இந்நாள் சிறப்புடையது. அரிசியில் குழந்தையின் விரலைப் பிடித்து முதல் எழுத்தை எழுதச் செய்வது, கல்விப் பயணத்தின் இனிய தொடக்கமாகும்.
புதிய கல்வி, கலை, தொழில் அல்லது முயற்சியைத் தொடங்குவதற்கு விஜயதசமி உகந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆனால் வெற்றி என்பது நல்ல நாளில் தொடங்குவதால் மட்டுமல்ல; தொடர்ந்து முயற்சி செய்வதாலும் நேர்மையாக உழைப்பதாலும் கிடைக்கிறது.
சரஸ்வதி பூஜை அறிவின் அருமையை உணர்த்துகிறது. விஜயதசமி தன்னம்பிக்கையுடன் முன்னேறத்தூண்டுகிறது. இறைவழிபாட்டுடன் உழைப்பையும் முயற்சியையும் இணைத்தால் வாழ்வில் உயர்வு நிச்சயம். அறிவை வளர்த்து, உழைப்பை மதித்து, நல்லவற்றைத் தொடங்குவோம்!