
எல்லா விஞ்ஞானிகளுமே கடவுளை மறுத்தவர்கள் இல்லை. பல பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் கடவுளின் படைப்பைப் போற்றியுள்ளனர். பல விஞ்ஞானிகள் ஹிந்து மதம் கூறும் மறு பிறப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
முக்கியமான விஞ்ஞானிகளின் அற்புதமான கருத்துக்களை மட்டும் இங்கு காண்போம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955)
உலகின் ஆகப் பெரிய விஞ்ஞானி. 1921ம் ஆண்டு க்வாண்டம் தியரிக்காக நோபல் பரிசு பெற்றவர். ஜெர்மானியர்.
இவர் கூறியது:
“கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்று அறிய நான் விரும்புகிறேன். இந்த நிகழ்வு பற்றியோ அந்த நிகழ்வு பற்றியோ அல்லது இந்த அல்லது அந்த மூலகத்தின் நிறமாலை பற்றியோ எனக்கு ஒரு வித ஆர்வமும் இல்லை. கடவுளது எண்ணங்களை அறிய விரும்புகிறேன். மற்றவை எல்லாம் விவரங்களே.”
மாக்ஸ் ப்ளாங்க் (1858-1947)
எலிமெண்டரி க்வாண்டா பற்றிய ஆராய்ச்சிக்காக 1918ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். ஜெர்மானியர்.
“பூமியில் மனிதர்கள் தோன்றும் முன்னமேயே கடவுள் இருக்கிறார். அவரை நம்பியவர்களுக்கும் சரி, நம்பாதவர்களுக்கும் சரி ஊழிக்காலம் வரை எங்கும் பரவிய தன்மையால் உலகம் முழுவதையும் தன் பிடியில் வைத்திருக்கிறார்”.
மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட அவர் கூறியது;
நமக்கு மேலே உள்ள இன்னொரு உலகில் நாம் எந்த நேரத்திலும் அடைக்கலம் புகலாம்.
எர்வின் ஷ்ரோடிங்கர் (1887-1961)
அணுக் கொள்கைக்காக 1933ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்.
விஞ்ஞானம் என்பது ஒரு விளையாட்டு. அது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற கொள்கையைக் கொண்டவர்.
அவரது கூற்று:
“எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம். இது ஆழங்காண முடியாத கேள்வி. ஒவ்வொருவருக்குமான கேள்வி இது! இதற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை.”
“உயிருள்ள ஜீவிகளான நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். ஒரே 'இருப்பிலிருந்து' அல்லது ஒரே அம்சத்திலிருந்து பிறந்த உறுப்பினர்கள் நாம். மேலை நாட்டில் இதை கடவுள் என்று கூறுகிறார்கள். உபநிடதங்களில் இது ப்ரஹ்மம் என்று கூறப்படுகிறது.”
வெர்னர் ஹெய்ஸன்பர்க் (1901-1978)
க்வாண்டம் மெகானிக்ஸ் ஆய்வுக்காக இவர் 1932ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார். ஜெர்மானியர்.
இவரது கூற்று:
“கிளாஸிலிருந்து முதல் மடக்கைக் குடிக்கும் போது இயற்கை அறிவியல் உங்களை நாத்திகனாக ஆக்குகிறது. ஆனால் கிளாஸின் அடியில் செல்லும் போது கடவுள் அங்கே உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.”
ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (1868-1953)
மின்னூட்டம் பற்றியும் போட்டோ எலக்ட்ரிக் விளைவுக்காகவும் இவர் 1923ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார். இவர் ஒரு அமெரிக்கர்.
இவரது கூற்று:
“ஒரு உண்மையான நாத்திகன் ஒரு விஞ்ஞானியாக இருக்க முடியும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
கடவுளை நம்பாத ஒரு சிந்திக்கும் மனிதனை எனக்குத் தெரியவே தெரியாது.”
சார்லஸ் ஹார்ட் டோனஸ் (பிறப்பு 1915-2015)
லேஸரைக் கண்டுபிடித்தவர். க்வாண்டம் எலக்ட்ரானிக்ஸில் இவரது ஆய்வுக்காக 1964ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
“உள்ளுணர்வு, உலகில் நான் காண்பவை, தர்க்கம் மற்றும் விஞ்ஞான அறிவு ஆகியவற்றின் மூலமாக கடவுள் இருப்பதை நான் மிக வலுவாக நம்புகிறேன்.”
ஆக இப்படி ஆகப் பெரும் விஞ்ஞானிகள் கடவுளைப் பற்றிய உண்மையை ஆராயத் தொடங்கி கடவுள் இருக்கிறார் என்ற தங்கள் வலுவான நம்பிக்கையை புத்தகங்களில் எழுதியுள்ளனர். பேட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலாக அளித்துள்ளனர். முக்கியமான தங்கள் சொற்பொழிவுகளிலும் கூறியுள்ளனர்.
ஆகவே பெரும் விஞ்ஞானிகளின் பார்வையில் - கடவுள் இருக்கிறார்!