

ஷிவ்கோரி (Shiv Khori ) என்பது இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் (Reasi) உள்ள ஒரு புகழ்பெற்ற இந்து குகைக் கோவிலாகும். ஷிவ் என்றால் சிவன், கோரி என்றால் குகை. எனவே 'ஷிவ்கோரி' என்றால் சிவனுடைய குகை என்று பொருள். இந்தப் புனிதமான தலம் இயற்கையான குகையில் அமைந்துள்ளது.
இந்த குகை சுமார் 200 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் 2 முதல் 3 மீட்டர் உயரமும் கொண்டது. குகையின் வெளிப்புறம் அகலமாகவும் உட்புறம் குறுகலாகவும் அமைந்துள்ளது. சில இடங்களில் பக்தர்கள் குனிந்தோ அல்லது தவழ்ந்தோதான் செல்லமுடியும்.
இந்த குகை துவாபர யுகம் அல்லது அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. நீண்ட காலம் மக்கள் பார்வைக்குத் தெரியாமல் மறைந்திருந்த இந்த குகை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் வாழ்ந்த ஒரு ஆடு மேய்க்கும் இடையரால் மீண்டும் கண்டறியப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆன்மீகத் தொன்மை கொண்ட குகைக் கோவில் இது.
சுயம்பு லிங்கத்தின் சிறப்பு:
குகையின் உள்ளே மையப் பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கமும், சிவபெருமானின் தியானக்கோல வடிவமும் காணப்படுகின்றன. இந்த லிங்கம் சுமார் 4 மீட்டர் உயரம் கொண்டது. லிங்கத்திற்கு மேலே குகையின் கூரையிலிருந்து இயற்கையாகவே பால் போன்ற நீர் சொட்டுச் சொட்டாக விழுந்து அபிஷேகம் செய்வது போன்ற காட்சி இக்கோவிலினுடைய மிகப்பெரிய அதிசயமாகும்.
மேலும் குகையின் உள்ளே சிவலிங்கத்திற்கு அருகில் பார்வதி தேவி, விநாயகர், முருகன் மற்றும் நந்தி போன்ற தெய்வங்களின் இயற்கையான பாறை வடிவங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள விநாயகர் ஐந்து தலையுடன் காணப்படுவது அதிசயமாகும். குகைக்குள் நுழைந்து ஈசனை வணங்கிவிட்டு பின்புற வாயிலின் வழியாக வெளியேறும் வசதியும் உள்ளது.
குகையின் முதல் நுழைவாயில் மிகவும் அகலமாக இருப்பதால் ஒரே நேரத்தில் 300 பக்தர்கள் வரை செல்ல முடியும். ஆனால் போகப் போக அடுத்துள்ள குகையின் உள்பகுதி மிகவும் குறுகலாகவும், தாழ்வாகவும், சிறியதாகவும் உள்ளது. கருவறையை அடைவதற்கு ஒருவர் குனிந்து செல்லவேண்டும்.
சில இடங்களில் தவழ்ந்து அல்லது உடலை பக்கவாட்டில் வளைத்துச் செல்லவேண்டும். குகையின் கூரையில் பாம்பு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியே நீர் சிவலிங்கத்தின் மீது வழிந்து விழுகிறது. சுவாமி அமர்நாத் குகைப் போலவே இங்கும் அதிகம் புறாக்கள் காணப்படுகின்றன.
புராண வரலாறு:
புராணங்களின்படி பஸ்மாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் புரிந்துதான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாக (சாம்பலாக) போக வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். வரம் பெற்றவுடன் அதை சிவபெருமானிடமே சோதிக்க முயன்றான். அவனிடமிருந்து தப்பிக்க சிவபெருமான் இந்தக் குகைக்குள் வந்து மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சிவபெருமானை விடாமல் துரத்தி வந்த பஸ்மாசுரனைக் கண்ட மகாவிஷ்ணு மோகினி வடிவம் கொண்டு அசுரனின் எதிரில் வர மோகினி அழகில் பஸ்மாசுரன் மயங்கினான்.பின்னர் மகாவிஷ்ணு தந்திரமாக அவனிடம் பேசி அவன் தலைமேலேயே கை வைக்கச் செய்தார். பஸ்மாசுரனும் எரிந்து சாம்பல் ஆனான். இந்த புராண நிகழ்வு நடந்த இடம் இதுதான் என்கிறார்கள்.
இந்த குகைக்குள் வேறொரு வழியும் உள்ளது. அது அமர்நாத் குகையில் சென்று முடிவதாகக் கூறப்படுகிறது. இந்த வழியாகச் சென்ற சில சாதுக்கள் திரும்பி வராததால் தற்பொழுது இந்த குகை வழியை அரசாங்கம் தடை செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு பிண்டி வடிவத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சித்தர்களும் ரிஷிகளும் தவமிருந்த இந்த மிகப் பழமையான குகைக் கோவிலை 2003 ஆம் ஆண்டு முதல் ஒரு திருப்பணிக் குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார்கள். பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்கவும் இந்த வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. குகைக்கு மின் வசதி, தங்குமிட கொட்டகைகள், நீர் வசதிகள், நிரந்தர பேருந்து சேவைகள் மற்றும் சுகாதார வசதிகளையும் வழங்கி உள்ளது.
வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் அமர்நாத் புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் இந்த ஷிவ்கோரி குகைக்கும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று 3 நாட்கள் பெரிய திருவிழா மற்றும் மேளா நடைபெறுகிறது. அந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள்.
தரிசன நேரம்:
கோடைக் காலத்தில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், குளிர்காலத்தில் தரிசன நேரம் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் ஆகும்.
எங்குள்ளது?
ஜம்முவிலிருந்து வைஷ்ணவி தேவி கோவில் (கத்ரா) செல்லும் பாதையின் அருகில் இந்தத் தலம் அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள பவுனி (Pouni) என்ற இடத்தில் உள்ள சங்கர் கிராமத்திற்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.
பேருந்துகள் சிவகோரி மலைக் கோயிலின் அடிவாரம் ரன்சூ வரை செல்கிறது. அதன்பின் ரன்சூ கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு வரை மலை மீது நடந்து சென்று சிவகோரி குகையில் அமைந்துள்ள சிவலிங்கத்தை வழிபட வேண்டும்.