

எதிரிகளின் தொல்லையா? கவலையே வேண்டாம். இந்தப் பிரச்னை நீங்க அமாவாசையில் ஒரு பரிகாரம் செய்தால் போதும், எதிரிகள் காணாமல் போவார்கள். எதிரிகளால் வரும் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியமும் நீங்கும். வாழ்க்கையில் படிப்படியாக சீக்கிரமாக நல்ல முன்னேற்றத்தை அடையம்போது நம் கண்ணுக்குத் தெரிந்த சில எதிரிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத சில எதிரிகள் வரத் தொடங்கி விடுவார்கள். வாழ்க்கையில் எதிரியே இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டம். ஆனால், எதிரியை நண்பனாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு சில சூட்சுமமான விஷயங்களைக் கையாண்டாலே போதும், எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
எதிரிகளை நம் வசப்படுத்த, எதிரிகளை வீழ்த்த, எதிரிகளிடமிருந்து வரக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை, கண் திருஷ்டிகளை நீக்க ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இப்பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம்.
அம்மன் கோயில் தானம்: உக்கிர தெய்வங்களான துர்கை, பைரவி, பிரத்யங்கிரா, வாராகி, காளி போன்ற தெய்வங்களை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்க அமாவாசையில் துர்கை அம்மனை வழிபட வேண்டும். அமாவாசை அன்று அருகில் இருக்கக்கூடிய துர்கை அம்மன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய துர்கை அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய இயலாதவர்கள் சாதாரண 108 முறை அர்ச்சனை செய்யலாம்.
மேலும், குங்குமத்தால் அர்ச்சனை செய்வது சிறப்புக்குரியது. இப்படிச் செய்வதன் மூலம் எதிரிகளால் ஏற்படும் பிரச்னை தீரும். அர்ச்சனை செய்த குங்குமத்தை வீட்டிலும் தொழில் செய்யும் ஸ்தானபத்தின் நிலை வாசலில் வைப்பதோடு அல்லாமல், நெற்றியில் தினமும் வைக்க எதிரிகளின் தொல்லை நீங்கும். இது மட்டுமல்ல, பவளமல்லி மலரால் துர்கை அம்மனை அர்ச்சனை செய்யும்போது எதிரிகளே இல்லாத வாழ்க்கை ஏற்படும். இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து 5 அமாவாசைகள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்யப்படும் ஒரு பரிகாரமும் உண்டு. இந்தப் பரிகாரம் செய்யும் முன்பு 11 ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க வேண்டும். கோயிலுக்குச் செல்லும்போது 8 தேங்காய், 8 எலுமிச்சை பழம், 8 ஊமத்தங்காய், 8 கும்மட்டிக்காய் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். தேங்காயின் மீது உங்கள் பிரச்னையை எழுத வேண்டும். பிறகு, ஒரு சிறிய கத்தி கொண்டு கோயில் பிராகாரத்தில் தேங்காய், எலுமிச்சை, ஊமத்தங்காய், கும்மட்டிக்காய் இவற்றை இரண்டாக வெட்டி குப்பைத் தொட்டியில் போட்டுவிடவேண்டும்.
பிறகு, 2 அர்ச்சனைத் தட்டுகளை வாங்கி ஒன்று உங்கள் பேரிலும், இன்னொன்று எதிரி பெயரிலும் அர்ச்சனை செய்து எதிரிக்கு செய்த அர்ச்சனை தட்டை அர்ச்சகரிடம் கொடுத்துவிட வேண்டும். நம் பெயரில் செய்த அர்ச்சனை தட்டை எடுத்து வர வேண்டும். இந்த வழிபாட்டை 11 நாட்கள் தொடர்ந்து செய்து வர, எதிரிகளின் தொல்லை நீங்கும். திண்டுக்கல் செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றும் இந்தப் பரிகாரத்தை செய்யலாம்.