
பொதுவாக நாம் கொண்டாடும் சில விசேஷ தினங்களை டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர், கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடுவதுண்டு. ஆனால், அதன் பருவ காலங்கள் மாறிவரும். அதேபோல், அதன் பெயர்களும் மாறிவரும். ஆனால், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கும். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
காரடையான் நோன்பும்; கர்வா சௌத்தும்:
சாவித்திரி தேவியைக் குறித்து விரதம் மேற்கொண்டு, எமனிடம் இருந்து தனது கணவன் சத்தியவான உயிரை மீட்டார் சாவித்திரி என்பதை நாம் அறிவோம். ஆதலால் மாசி - பங்குனி மாதத்தில் ‘மாசிக் கயிறு பாசிப்படியும்’, உருக்காத வெண்ணையும் ஓர் அடையும் நான் நூற்பேன். ஒருகாலும் என் கணவர் என்னை பிரியாதிருக்க வரம் தாரும் தாயே!’ என்று கூறி அன்று முழுவதும் விரதம் இருந்து படையல் இட்டு, சரடு கட்டிக்கொண்டு, கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தித்துக் கொள்வது உண்டு. இதை, ‘காரடையான் நோன்பு’ என்று கூறுவது உண்டு.
இதேபோல், வட மாநிலங்களில் ‘கர்வா சௌத்’ என்ற விரதத்தை திருமணமான பெண்கள் கடைபிடிக்கிறார்கள். தனது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்பதுதான் இதனுடைய தத்துவம். ராணி வீரவதி என்பவள் ஏழு அண்ணன்மார்களுடன் பிறந்து செல்லமாக வளர்ந்தவள். இந்த விரதத்தை கடைப்பிடித்தபொழுது பசியால் தவித்தாள். அதை உணர்ந்த அவளின் சகோதரர்கள் ஒரு மரத்தில் நிலவு போல் செய்து பின்புறத்தில் நெருப்பை எரித்து அவற்றைப் பார்க்க வைத்து தங்கையை உணவு உண்ண தூண்டினர்.
அவள் ஒரு வாய் அன்னத்தை வைத்தபொழுது தும்மினாள். இரண்டாவது முறை உணவை வாயில் வைத்தபொழுது முடி கிடந்தது. மூன்றாவது முறை சாப்பிட முனைந்தபொழுது அவள் கணவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அப்பொழுது கணவரைக் காண ஓடியவளை பார்வதி - பரமசிவன் தடுத்து நிறுத்தி, ‘அந்த விரதத்தை சரியான முறையில் நிவர்த்தி செய்துவிட்டு போ’ என்று கூற, அவளும் செய்துவிட்டு திரும்பியபொழுது, பார்வதி தேவி தனது சுண்டு விரலை அறுத்து ரத்தம் கொடுக்க, அதை இறந்த கணவர் மீது தெளித்து எமனிடம் இருந்து வீரவதி தனது கணவனை மீட்டார் என்பது இந்தக் கதை.
இதனால் கார்த்திகை மாத பௌர்ணமி கழிந்த நான்காம் நாள் சூரிய உதயத்திற்கு பின் விரதம் தொடங்கி, சந்திர உதயம் பார்த்துவிட்டு விரதம் கழிப்பது அவர்களது வழக்கம். கை நிறைய வளையல் அடுக்கி, அவரவர்களின் பாரம்பரிய உடை அணிந்து, மங்கலகரமாகக் காட்சி தருவதை கண்டு களிக்கலாம். ஆக, எந்த விரதத்தையும் சிரத்தையாக மேற்கொள்ள வேண்டும். நம்புபவர்களிடம் சத்தியமாக, உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் இறைவன் கேட்டதைக் கொடுப்பார் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான் திருவள்ளுவரும், ‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்று கூறியுள்ளார்.
சகோதரன் நலனும்: கணுப்பிடி ராக்கியும்:
வட இந்தியாவில் பிறந்த பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ரக்ஷா பந்தன் அன்று ‘ராக்கி' கட்டுவதைப் போல் தமிழ்நாட்டிலும் ஒரு பழக்கம் உண்டு. பொங்கலுக்கு மறுநாள் பெண்கள் விடியற்காலையில் எழுந்து முதல் நாள் செய்த பொங்கல், கரும்பு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் எல்லாவற்றையும் வாழை இலையில் வைத்து காக்கைகளுக்குப் படைப்பார்கள். இது 'கணுப்பிடி' எனப்பெறும். இப்படிப் படைப்பதால் தங்கள் சகோதரர்களுக்கு நன்மை பல உண்டாகும். தீமைகள் விலகிடும் என்பது நம்பிக்கையாகும்.
இதற்காகவே வெளியூரில் இருக்கும் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் அனுப்புவது உண்டு. கணுப்பிடிக்காக இல்லை என்றாலும், சகோதரிக்கு பொங்கல் சீராக பணம் அனுப்புவது இன்று வரை வழக்கத்தில் உள்ளது. அதேபோல், உள்ளூரில் உள்ள பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்குச் சென்று சகோதரனை சந்திப்பது நடைமுறையில் உள்ள வழக்கம். அவரவர்கள் அவர்கள் வீட்டில் விளைந்த பொருட்களையும், புது துணிமணிகளையும் எடுத்துக் கொடுத்து, நல்ல விருந்து உபசரணை செய்து அனுப்பி வைப்பார்கள்.
மகாபலி வரவேற்பு; ஓணம், பலி பாடமி - சாணியால் ஏழு கோட்டைகள்:
கேரளத்து மக்கள் மகாபலி சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்வதைப் போல் கர்நாடகத்தில் தீபாவளிக்கு மறு தினம் சாணியால் ஏழு சதுர கோட்டைகள் கட்டி அதில் எள்ளுப்பூ, பூசணிப்பூ இவற்றால் அலங்காரம் செய்து, நடு வீட்டில் மகாபலியை வரவேற்கிறார்கள். இன்று பண்டிகை சமையலோடு போளியும் உண்டு. தீபாவளியை விட பலி பாடமிதான் இங்கு முக்கியம் அவர்களுக்கு. புதிய ஆடைகளை பலி பாடமி தினத்தில் அணிகிறார்கள். பட்டாசும் அன்றுதான் நிறைய வெடிக்கிறார்கள். இதற்காக மாடு வைத்திருப்பவர்களிடம் சாணம் வாங்கி, அதனால் கோட்டை கட்டிக் கொண்டாடுகிறவர்கள் இன்று வரையில் நகர்ப்புறத்திலும் இருக்கிறார்கள்.
இப்படி இந்தியா முழுவதும் மொழி, நடை, உடை, பாவனைகளில் வேற்றுமைகள் இருந்தாலும், பண்டிகைகள் தேசிய ஒற்றுமையை உண்டாக்கி வருகின்றன.