

திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாக வந்து குருந்த மரத்தடியில் உபதேசம் செய்த திருத்தலம்தான் திருப்பெருந்துறை. இக்கோயிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை வகை வகையாக அமைத்துள்ளார்கள். 27 நட்சத்திர தீபங்களை கருவறையில் ஏற்றுவதும், மும்மூர்த்திகளை குறிக்கும் வகையில் மூன்று தீபங்களை கருவறையில் மஞ்சள், பச்சை, சிவப்பு நிற கண்ணாடி பெட்டியில் வைப்பதும், 36 தத்துவங்களை குறிப்பதாக 36 தீபங்களை தீப மாலையாக தேவ சபையில் ஏற்றியும் வைப்பார்கள்.
ஐந்து வகை கலைகளைக் குறிக்க 5 தீபங்களை கருவறையில் ஒன்றின் கீழ் ஒன்றாக ஏற்றுவதும், 51 எழுத்துக்களைக் கொண்டது வர்ணம். இதைக் குறிக்க 51 தீபங்களை கருவறை முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் ஏற்றி வைப்பதும், 11 மந்திரங்களை குறிக்க பதினொரு விளக்குகளை நடன சபையில் ஏற்றி வைப்பதும் என இக்கோயிலில் அதிசய அமைப்பு தீபங்களை இக்கோயிலில் ஏற்றுகிறார்கள். இந்த அதிசய அமைப்பு தீபங்களை ஆவுடையார் கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின்பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் விளக்குகளை ஏற்றுவார்கள். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் கோயில் இது. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நாளான திருக்கார்த்திகை அன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் அண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். கோயில் வளாகம் முழுவதும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிரும்.
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தில் காலையில் 108 சங்காபிஷேகம் செய்வதும், மாலையில் லட்ச தீப விழா நடத்துவதும் சிறப்பு. பின்பு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிக்கும் லட்ச தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்தன்று வளாகம் மற்றும் பொற்றாமரைக் குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. இத்திருவிழாவின்பொழுது பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமிகள் வீதி உலா வருவார்கள்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் லட்ச தீப விழாவின்பொழுது திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். இங்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் வெகு விமரிசையாக நடைபெறும்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நட்சத்திரத்தின்பொழுது லட்ச தீப வழிபாடு நடைபெறும்.
பிரான்மலை, மங்கைபாகர் தேனம்மை கோயிலில் கார்த்திகை மாதத்தில் லட்ச தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.
தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஐந்து நாட்களில் லட்ச தீப உத்ஸவம் நடைபெறும்.
வைணவ மரபில் கார்த்திகை மாதம் என்பது துவாதச மூர்த்திகளில் தாமோதரனை வழிபடும் மாதம். இந்த மாதத்தில் தாமோதரனை வழிபட, பல நூறு யாக பலன்கள் செய்த புண்ணியம் கிடைக்கும். வைஷ்ணவ ஆகமத்திலும் கார்த்திகை மாதத்தை தீபமேற்றி கொண்டாட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
காரணம், பெருமாள் தீப பிரகாசராக அவதரித்தார். காஞ்சியில் திருத்தண்கா பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்று பெயர். ஒரு சமயம் பிரம்மா யாகம் செய்யும்போது, அசுரர்கள் மாய சக்தியால் யாகம் செய்ய முடியாத அளவுக்கு இருட்டை ஏற்படுத்தியதாகவும், யாகம் நடைபெறும்பொழுது பிரம்மன் பிரார்த்திக்க, பெருமாள் தீப பிரகாசராகத் தோன்றினார் என்றும் வரலாறு கூறுகிறது. இது நடந்தது கார்த்திகை மாதம் கிருத்திகையில் என்பதால் தாயாருக்கும் பெருமாளுக்கும் தீபம் ஏற்றிக் கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது.