
காஞ்சி காமாட்சி அம்மன் (காமகோடி பீடம்), மதுரை மீனாட்சி அம்மன் (மந்திரிணி பீடம்), திரிபுரசுந்தரி திருவொற்றியூர் (இஷி பீடம்), பிரம்ம வித்யா திருவெண்காடு (பிரணவ பீடம்), ஸ்ரீ லலிதா ஈங்கோய்மலை (சாயா பீடம்), பராசக்தி திருக்குற்றாலம் (பராசக்தி பீடம்), மகாகாளி திருவாலங்காடு (காளி பீடம்), அபிராமி திருக்கடையூர் (கால பீடம்), பகவதி கன்னியாகுமரி (குமரி பீடம்), அபீதகுஜாம்பாள் திருவண்ணாமலை (அருணை பீடம்), அகிலாண்டேஸ்வரி திருவானைக்கா (ஞானபீடம்), பர்வதவர்த்தினி ராமேஸ்வரம் (சேது பீடம்), விமலை உலகநாயகி பாபநாசம் (விமலை பீடம்), தர்மசம்வர்த்தினி திருவையாறு (தர்ம பீடம்), மகிஷமர்த்தினி தேவிபட்டணம் (வீரசக்தி பீடம்), மங்களாம்பிகை கும்பகோணம் (விஷ்ணு சக்தி பீடம்). தமிழ்நாட்டில் உள்ள இவற்றுடன் இந்தியா முழுவதும் பக்தர்கள் வழிபாட்டுக்குரியதாக 51 சக்தி பீடங்கள் உள்ளன. இத்தலங்களுக்கு மற்ற அம்மன்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உண்டு. ஆம், இங்குதான் அம்பிகையின் உண்மையான அம்சம் உறைந்துள்ளது.
சக்தி பீடங்கள், அம்பாள் உபாசகர்கள் மற்றும் பக்தர்களால் மிகவும் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு சென்று வழிபட்டால் அம்பிகையின் கடைக்கண் அருளினால் தீமைகள் நீங்கி வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
சக்தி பீடங்கள் என்பது பார்வதி தேவியின் 51 உடல் பாகங்கள் விழுந்த இடங்களாகும். புராணங்களின்படி, தட்சனின் யாகத்தில் பார்வதி தேவி அவமானம் அடைந்து தீயில் விழுந்து உயிர் நீத்த பிறகு, சிவன் அவளது உடலை சுமந்து செல்லும்போது, அவரது உடல் பாகங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விழுந்தன என்றும் இந்த இடங்களே சக்தி பீடங்களாக வழிபடப்படுவதாகக் கூறப்படுகிறது. அது என்ன வரலாறு என்பதை இப்பதிவில் காண்போம்.
இந்தக் காலம் மட்டுமல்ல, அந்தக் காலத்திலும் பெண்கள் ஏதேனும் அவமானம் அல்லது மனம் உடைத்த சமயத்தில் தற்கொலை என்னும் ஆயுதத்தை கையில் எடுப்பது பழக்கமாகவே இருந்திருக்கிறது. இதற்கு சான்றுதான் பார்வதி தேவி. தெய்வம் எனினும் பெண்ணாக இருந்த காரணத்தினால் பார்வதி தேவியும் தற்கொலைக்குத் தூண்டப்பட்டுள்ளதை இந்தப் புராண வரலாறு மூலம் அறியலாம்.
பிரம்மாவின் புதல்வனாக அவதரித்த தட்சன், சிவபெருமான் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து அதன் பலனாக, 'பிரஜாபதி' எனும் பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வரத்தையும் பெற்றான். மேலும், தனது அவாவின்படி அம்பிகையைப் புதல்வியாகப் பெறும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.
இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய தட்சனுக்குள், ‘தானே ஈஸ்வரன்’ எனும் கர்வம் மேலிட, தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி தீமைகளை செய்யத் துவங்கினான். ஒரு கட்டத்தில் வரமளித்த சிவனிடமே பொறாமை, வன்மம் கொண்டு மாப்பிள்ளையான சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான். தந்தையின் சதியை அறிந்த அன்னை பார்வதி தேவி, தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி, யாகசாலையில் தோன்றி சிவனின் பெருமைகளை எடுத்துக் கூற அருள, தட்சனோ மகளை அவமதித்ததோடு நில்லாமல், ஈசனையும் நிந்தித்துப் பேசினான்.
சிவனை சிறுமைப்படுத்தி பேசிய தட்சனின் வார்த்தைகளைப் பொறுக்காத அன்னை, தட்சனின் ஹோம குண்டத்தில் கொழுந்து விட்டு எழுந்த ஹோமத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதையறிந்த சிவபெருமானின் சினத்தால் தட்சனும், அவன் யாகசாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதாக சிவ புராணம் தெரிவிப்பதாகக் குறிப்புகள் உண்டு. தனது உயிர், உடல் இரண்டிலும் சரிபாதியான சக்தி இறந்த துக்கம் தாளாமல் சிவபெருமான் பார்வதி தேவியின் திருவுடலைச் சுமந்தபடி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, உலகில் மகாபிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. அவ்வமயம் உலகைக் காக்கும் பொருட்டு சக தேவர்களுடன் ஆலோசித்த ஸ்ரீ மகாவிஷ்ணு தன்னிலை மறந்த சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தனது சுதர்சன சக்கரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவையே பின்னாளில் 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன என்ற வரலாறும் உண்டு.
இந்த 51 சக்தி பீடங்கள் சமஸ்கிருதத்தில் உள்ள 51 எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் நம்பப்படுவதால் இவை, 'அட்சர சக்தி பீடங்கள்' என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் இந்த சக்தி பீடங்கள் சென்று பராசக்தியின் அருளைப் பெற்று வரலாம்.