

உடையவருடைய பாதுகை, தங்கை மகன், த்ரிதண்டம் என மூன்று வகையான உறவுகளால் மிகவும் அவருக்கு நெருக்கமானவர் என்ற பெருமை முதலியாண்டான் ஒருவருக்கு மட்டுமே உண்டு.
முதலயாண்டானின் அவதாரஸ்தலமான பூவிருந்தவல்லிக்கு அருகில் அமைந்த நசரத்பேட்டை எனும் அகரம்மேல் கிராமத்தில் உள்ள பச்சைவாரணப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்வாமி முதலியாண்டானுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. உடையவர் ஸ்ரீஇராமானுஜரின் பரிபூரண அருளைப்பெற்ற முதலியாண்டானை தரிசித்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது ஐதீகம்.
உடையவர் இராமானுஜரின் முக்கியமான இரண்டு சிஷ்யர்களில் ஒருவர் முதலியாண்டான். முதலியாண்டான் இராமபிரானின் அம்சமாக கி.பி.1027 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் அகரமேல் என்ற கிராமத்தில் வாதூலகுல திலக ஸ்ரீ அனந்தநாராயண தீட்சிதர் நாச்சியாரம்மாள் (இராமானுஜரின் தங்கை) தம்பதியினருக்கு திருமகனாய் அவதரித்தார். பெற்றோர் சூட்டிய திருநாமம் இராமபிரானின் திருநாமங்களில் ஒன்றான தாசரதி. தசரதரின் திருமகன் என்பது இதன் பொருள்.
இராமானுசன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவதாசர், திருமருமார்பன், இராமானுச திருதண்டம், நம்வதூல தேசிகன், ஸ்ரீவைஷ்ணவசிரபூஷா, ஆண்டான் முதலிய பல திருநாமங்களால் அழைக்கப்பட்டவர் முதலியாண்டான். ஸ்வாமி முதலியாண்டான் ராமனுஜரின் பாதுகையாக கொண்டாடப்படுபவதால் 'யதிராஜ பாதுகா' என்ற திருநாமம் ஏற்பட்டது.
உரிய வயதில் உபநயனம் முதலான விஷயங்கள் செய்விக்கப்பட்டு சகல வைதீக விஷயங்கள் கற்பிக்கப்பட்டன. முதலியாண்டான் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத்தில் அபார புலமை வாய்க்கப் பெற்றிருந்தார். திருமணமாகி அகரம்மேல் கிராமத்தில் வசித்து வந்தபோது இராமானுஜர் துறவறம் மேற்கொண்டு காஞ்சியில் வைஷ்ணவ ஆச்சார்யராக விளங்கி வைணவம் செழித்தோங்கப்பாடுபட்டார்.
உடையவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று அவருடனே இருந்து ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வந்தார். இராமானுஜருக்கு முதன்முதலில் சிஷ்யர்களாக அமைந்தவர்கள் கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் ஆவர். ஆளவந்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற உடையவர் திருவரங்கத்திற்குச் சென்றபோது முதலியாண்டானும் அவருடனே சென்று திருவரங்கத்தில் தங்கி ஆச்சார்ய கைங்கர்யங்களையும் கோயில் கைங்கர்யங்களையும் எவ்விதக் குறையுமின்றி செய்து வந்தார்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பகவத் கைங்கர்யத்தைவிட ஆச்சார்ய கைங்கர்யமே மிக உயர்வானதாகக் கருதப்படுகிறது. ஒரு குருவை அடைந்து அவருக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தால் பெருமாள் தனது ஸ்ரீவைகுண்டத்தில் தானாகவே உகந்து இடமளிப்பார் என்பது வைஷ்ணவ கோட்பாடு. இதைப் பின்பற்றி முதலியாண்டான் இராமானுஜரைத் தன் ஆச்சார்யராக ஏற்று அவருக்கு ஆச்சார்ய கைங்கர்யங்களைக் குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்.
ஒருசமயம் திருக்கோட்டியூர்நம்பி ஸ்ரீராமானுஜருக்கு சரம ஸ்லோக அர்த்தத்தை உபதேசிக்க இசைந்தபோது அவரிடம் த்ரிதண்டம் பவித்ரமுடன் அவர் மட்டும் வரவேண்டும் என்று தெரிவிக்க ஸ்ரீராமானுஜரோ தன்னுடன் முதலியாண்டானையும் கூரத்தாழ்வானையும் அழைத்துச் சென்றார். திருக்கோட்டியூர்நம்பியிடம் “தங்களின் நியமனப்படியே த்ரிதண்டம் பவித்திரமுடன் வந்துள்ளேன்” எனத் தெரிவிக்க அவர் அதைப் பற்றி வினவ அதற்கு ராமானுஜர் “இதோ முதலியாண்டானே த்ரிதண்டம். கூரத்தாழ்வானே பவித்ரம்” என்று தெரிவித்தார். இவ்வாறாக எம்பெருமான் ஸ்ரீராமானுஜருடைய த்ரிதண்டமாகிற ஸ்தானத்தை அடைந்தவர் முதலியாண்டான்.
இராமானுஜர் துறவறம் மேற்கொண்டபோது ஒவ்வொன்றாகத் துறந்துகொண்டே வந்து ஒரு கட்டத்தில் முதலியாண்டானைத் துறக்கும் நிலை ஏற்பட்டபோது சற்றே கலங்கினாராம். இராமானுஜரின் மனதிற்கு மிகவும் நெருக்கமான அணுக்கத் தொண்டர் முதலியாண்டான் என்பதால் இராமானுஜர் “எல்லா உறவுகளையும் துறந்தேன் முதலியாண்டானைத் தவிர” என்று கூறினாராம்.
ஸ்ரீரங்கம் கோயிலில் கருடமண்டபத்தின் வடகோடியில் அமைந்துள்ள பகுதி “முதலியாண்டான் குறடு” என்று அழைக்கப்படுகிறது. முதலியாண்டான் இந்தக் குறட்டின் மீது அமர்ந்துகொண்டு கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு வந்ததால் இப்பெயரால் அழைக்கப் படுகிறது. முதலியாண்டான் கி.பி.1132 ல் தனது 105 வது வயதில் திருநாடு அடைந்தார்.