
கோயிலுக்குச் செல்லுதல் என்பது, இறைவனிடம் வேண்டுதல்களை வைக்க மட்டுமல்லாமல், மனதிற்கும் அமைதியைத் தரும் இடமாகவும் இருக்கிறது. அதனால்தான் கோயிலுக்குச் செல்வதை தியானத்தோடு ஒப்பிடுகிறோம். இன்றைய எந்திர வாழ்க்கையில் வேலைகள், இலக்குகள், டார்ச்சர்கள், குழந்தைகளின் கல்வியை பற்றிய கவலைகள், பொறுப்பு என்னும் மன அழுத்தம் என இதயத்தை கணக்க வைக்க ஏராளமான மனச்சுமைகள் அனைவருக்கும் உண்டு. அந்த சுமையை இறக்கி வைக்கும் ஒரு இடமாக கோயில்கள் உள்ளன. மனதில் உள்ள பாரத்தை இறக்கி விட்டால், மனது இதமாகும்.
பலரும் மனதை லேசாக்க யோகா, தியானம் போன்றவற்றை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், கோயிலுக்குச் சென்றால், தியானம் செய்த பின்னர் கிடைக்கும் அதே உணர்வு மனதுக்குக் கிடைக்கிறது.
அமைதியான சூழல்: ஒரு கோயிலுக்குள் நுழையும்போது உயரமான மதில் சுவர்களைக் கடந்தவுடன், இதமான காற்று வீசும் திறந்தவெளிகள் நம்மை உள்ளே வரவேற்கிறது. நேர்த்தியான பாதைகள், சிறிய தீப ஒளி, சாம்பிராணி, ஊதுபத்தியின் திவ்ய மணங்கள், கருவறையில் இருந்து வரும் வாசனைகள், பூசாரியின் மந்திர உச்சாடனம் எல்லாம் மனதை அமைதியான சூழலுக்குக் கொண்டு செல்கின்றன. கோயிலின் சுற்றுப்புறங்கள் நமது மனநிலையை அமைதியாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கோயில்கள் இயற்கையாகவே அமைதியான சூழலை வழங்குகின்றன.
தியானப் பயிற்சி: கோயிலுக்குள் வெறும் காலுடன் நடந்து செல்வது, படிகளில் ஏறி இறங்குவது, இறைவனைப் பார்த்து இரு கைகளைக் கூப்பி வணங்குவது, தோப்புக்கரணம் போடுவது, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவது, முட்டி போட்டு வணங்குவது பின்னர் கோயிலை மூன்று முறை வலம் போன்றவை யோகப் பயிற்சிக்கு இணையானவைதான்.
கோயிலை வலம் வந்த பின்னர், கோயில் படிகளிலோ, பிராகாரத்தின் கட்டைகளிலோ, கோயில் தரைகளிலோ சிறிது நேரம் அமர்ந்து விட்டால், அந்தச் சூழல் உங்களை அப்படியே அமைதியாக்கும். அமைதியான இடம், இதமான காற்று, மனதினை லேசாக்கும். அமர்ந்து இருக்கும்போது தியானம் செய்வதைப் போன்ற உணர்வு வரும். ஒருசிலரோ கண்களை மூடி நிஜ தியானத்திற்கு சென்று விடுவார்கள். உண்மையில் அதற்கு ஏற்ற இடம் இதுதான். இதனால், பலரும் நிம்மதியைத் தேடி, மன அமைதியை தேடி கோயிலுக்கு வருகின்றனர்.
கோயில் ஓலி: மனதை அமைதிப்படுத்துவதில் ஒலி ஒரு சக்தி வாய்ந்த பங்கை வகிக்கிறது. கோயிலில் உள்ள சிறிய மணி ஓசைகள், லேசாக இறக்கைகளை அடித்து ஓசைகளை உண்டாக்கும் புறாக்கள், ரீங்கார சப்தம் எழுப்பும் பெரிய மணி ஓசைகள் அனைத்தும் இசை போன்றே மனதை லயிக்க வைக்கும். மணிகளின் அதிர்வு, பஜனைகளின் இனிமையான பாராயணம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் ஆகியவை ஒரு தியான தாளத்தை உருவாக்குகின்றன. இந்தச் சூழல் அமைதியற்ற மன ஓட்டத்தை சீராக்குகிறது. கோயில்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்க உதவுகிறது.
பலன்கள்: தியானத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, மனம் தொடர்ச்சியான எண்ணங்கள் மற்றும் பதற்றங்களிலிருந்து விலகி இருக்கக் கற்றுக் கொள்கிறது. வழக்கமான மன அழுத்தங்களிலிருந்து விடுபட ஒரு சூழலை உருவாக்குகிறது. ஒரு சிறிய தியானப் பயிற்சி போலவே கோயிலில் அமர்வது இருக்கிறது. இதனால்தான் ஆழ்ந்த மத நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, கோயிலுக்குச் சென்ற பிறகு மன அமைதி கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
தனிமையான தியானத்தைப் போலல்லாமல், கோயில்கள் பெரும்பாலும் மக்களை ஒன்றிணைக்கின்றன. மற்றவர்கள் பிரார்த்தனை செய்வது, அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் அந்த இடத்தின் ஆற்றலை அதிகரிக்கிறது. ஒழுங்காக மனதினை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று 20 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே, தியானத்தின் முழு பலனைப் பெற்று விடுகிறார்கள்.