திருமால் மருகனே போற்றி!முத்துக்குமரா போற்றி! முருகனுக்கு அரோகரா!

11-02-2025 தைப்பூசம்
Lord Muruga
Lord Muruga
ரேவதி பாலு

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாடகம் மெரீனா தியேட்டர்ஸால் மேடையேற்றப்பட்டது. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

Updated on

திருமால் மருகனை, நம் தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டு, அவர் திருவருளைப் பெறுவதற்கு ஏற்ற நாட்களில் மிக முக்கியமானது வரப் போகும் தைப்பூசத் திருநாளாகும். தை மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் இணையும் நாளை தைப்பூசம் நாளாகக் கொண்டாடுகிறோம். இந்தத் திருநாள் எல்லா முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டாலும், பழனியில் தான் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மட்டும் பழனியில் 5 லட்சம் பக்தர்கள் வரை கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஊர்களிலிருந்து ஒரு மண்டலம் விரதமிருந்து பச்சை உடை தரித்து, பாதயாத்திரையாக காவடி எடுத்துக் கொண்டு பழனிக்கு வருவார்கள்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்று உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்டவற்றை ஏந்தி வந்து முருகனை இந்த நாளில் வழிபடுவார்கள்.

தைப்பூசம் என்பது முருகப்பெருமான் தீமையை வென்றதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் ஒரு பிரம்மாண்டமான வண்ணமயமான திருவிழா. இந்தத் திருநாளின் சிறப்பம்சங்களாக, முனிவர்களுக்கு பலவிதமான துன்பங்களைக் கொடுத்து வந்த தாராகாசுரனை முருகன் வதம் செய்ததும், முருகப்பெருமான் தனது தந்தைக்கே பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்ததும் புராணங்களில் கூறப்படுகிறது. வள்ளியை மணமுடித்ததால் தெய்வானையுடன் ஏற்பட்ட ஊடலை சமாதானம் செய்து வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளித்ததும் தைப்பூசத்திருநாளில் தான் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா?
Lord Muruga

தைப்பூசத் திருநாள் சிவன் மற்றும் பார்வதி தேவிக்கும் விசேஷமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி திருவாதிரையில் சிதம்பரத்தில் சிவபெருமான் தனித்து நடனம் ஆடியதை கண்ட பார்வதிக்குத் தானும் இதே போல ஆனந்த தாண்டவம் நிகழ்த்த வேண்டும் என்னும் அவா ஏற்பட்டதாம். பராசக்தி தனியாக தாண்டவம் ஆடியதும் ஒரு தைப்பூசத் திருநாளன்றுதான்.

அதே போல சிதம்பரத்தில் சிவன் பார்வதி இருவரும் இணைந்து தெய்வீக ஆனந்த தாண்டவம் ஆடியதும் ஒரு தைப்பூசத் திருநாளில் தானாம்.

இதையும் படியுங்கள்:
தைப்பூசம் 2025: எப்போது தெரியுமா? வழிபாடும் விரதமும்
Lord Muruga

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டில் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு பூமாலை அணிவித்து வெறும் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம் போன்ற சிறப்பான துதிகளால் முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூசத் திருநாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்கள். குழந்தை வரம், திருமணம், குடும்ப ஒற்றுமை ஆகியவை கிடைக்கும். தைப்பூசத்தன்று முருகனுக்கு நடக்கும் பூஜை அபிஷேகங்களைக் கண்டாலே சகல பாவங்களும் நீங்கும். தோஷங்கள் நிவர்த்தியாகும். நினைத்த காரியங்கள் கைகூடும்.

இதையும் படியுங்கள்:
'விஸ்வ ரூப தரிசனம்' அர்த்தம் தெரியுமா?
Lord Muruga

அளவில்லாத அற்புத பலன்களை அள்ளித் தரும் இந்த தைப்பூசத் திருநாள் இந்த வருடம் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று வருகிறது. நாமும் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை அன்றைய தினம் வழிபட்டு வாழ்வில் சகல வளங்களையும் அடைவோம்.

logo
Kalki Online
kalkionline.com