3,200 அடி உயரத்தில் சுயம்பு பெருமாள்! தோஷம் நீக்கும் தலைமலை சஞ்சீவிராயன் அதிசய கோவில்!

நாமக்கல் - திருச்சி எல்லையில் சஞ்சீவி மூலிகை நறுமணத்தோடு அருள் பாலிக்கும் அதிசய ஆன்மீகத் தலம்!
தலைமலை பெருமாள் - Namakkal Trekking Temple
தலைமலை பெருமாள் - Namakkal Trekking Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

கிழக்குத் தொடர்ச்சி மலையில் நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் தலைமலை காப்புக்காடு அமைந்துள்ளது. இதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி திருச்சி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. மூலிகை உட்பட பல்வேறு வகையான செடிகள், மரங்கள் நிறைந்ததாக இந்த மலை காணப்படுகிறது.

தலைமலை பெருமாள்;

இந்த காப்புக்காட்டில் சுமார் 3,200 அடி உயர மலையில் சஞ்சீவிராய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. உயரமான தலைமலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மலைக்கோவில் இது. அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச்சென்ற பொழுது மேற்பகுதி விழுந்த இடம் தலைமலையாகக் கருதப்படுகிறது. இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி நாட்களிலும், புரட்டாசி சனிக்கிழமை போன்ற விசேஷ நாட்களிலும் வந்து செல்கின்றனர்.

இங்கு 27 கிலோமீட்டர் தொலைவிற்கு கிரிவலப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கோவில் சிறப்புகள்:

மூலவர்: நல்லேந்திர பெருமாள், தலைமலை சஞ்சீவி ராயன். இக் கோவில் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலில் தானாக வளர்ந்த தலைமலை சஞ்சீவிராயன் என்று சுற்றுவட்டார மக்களால் அழைக்கப்படும் நல்லேந்திர பெருமாள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார்.

மலையடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்து சென்றுதான் மலையின் உச்சியில் அமைந்துள்ள பெருமாளை தரிசிக்க முடியும். அடிவாரத்தில் இருந்து வரும் அனைத்து பாதைகளும் தலைமலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் கீழே உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் ஒன்று சேர்கின்றன. அங்கு குதிரை மீது கம்பீரமாக அமர்ந்து கருப்பண்ணசாமி அருள்புரிகிறார்.

ராமாயண போரின்போது மூர்ச்சை அடைந்து விழுந்த லட்சுமணனை உயிர்ப்பிப்பதற்காக ஆஞ்சநேயர் தூக்கிச் சென்ற மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவி மலையில் இருந்த மூலிகைகளின் வாசத்திலேயே லட்சுமணன் குணமடைந்துவிட்டதாகவும், அந்த மகிழ்ச்சியில் மலையை ஆஞ்சநேயர் வீசி எறிந்ததாகவும், அது 7 துண்டுகளாக சிதறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த தலைமலை என்றும் சொல்லப்படுகிறது. மலையின் தலை போன்ற உச்சி சிகரத்தில் பெருமாள் வீற்றிருப்பதால் தலைமலை எனப் பெயர் பெற்றது.

சிறப்பு வழிபாடு:

இக்கோவிலில் உள்ள சஞ்சீவி நல்லேந்திர பெருமாள், வெங்கடாஜலபதி, அலமேலு மங்கை தாயார், மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், கருப்பண்ணசாமி உள்ளிட்ட அனைத்து தெய்வங் களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இங்கு புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

தலைமலை பெருமாள் - Namakkal Trekking Temple
தலைமலை பெருமாள் - Namakkal Trekking Temple

மலையேற்றம்:

தலைமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் கடினமான செங்குத்தான மலைப்பாதை வழியாக நடந்து செல்லவேண்டும். மலையேறி மேலே செல்வதற்கு சுமார் 2 முதல் 2 1/2 மணி நேரம் ஆகின்றது. பக்தர்கள் கரடு முரடான மலைப்பாதையில் ஏறி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மலையில் ராமர் சுனை மற்றும் கன்னிமார் சுனை என்ற அதிசய நீரூற்றுகள் உள்ளன. ராமர் சுனை என்று அழைக்கப்படும் ஊற்றில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டிருக்கும்.

இங்குள்ள கன்னிமார் சுனையில் நீராடி நல்லேந்திர பெருமாளை வழிபட சனி பகவானின் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீகத் தலம் மதுரை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மலையில் அரிய வகை சஞ்சீவி மூலிகைகள் நிறைந்துள்ளதால் இங்கு வரும் பக்தர்களை விஷப்பூச்சிகளோ அல்லது பாம்புகளோ தீண்டுவதில்லை என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. விவசாயம் செழிப்பாக விளங்கிட தங்களது வயலில் விளையும் காய்கறிகள், நெல், கடலை உள்ளிட்ட தானியங்களை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்துச் சென்று வழங்குகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஈரோட்டில் அமர்ந்த கோலத்தில் அருளும் லட்சுமி நாராயணர்: பிரிந்த தம்பதியரை சேர்க்கும் அதிசயம்!
தலைமலை பெருமாள் - Namakkal Trekking Temple

கோவில் திறந்திருக்கும் நேரம்:

கோவில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். வெயிலின் தாக்கத்தை தவிர்க்க அதிகாலை 6:00 மணிக்கே மலையேற்றத்தை தொடங்குவது நல்லது.

மலைப்பாதையில் கடைகள் எதுவும் பெரிய அளவில் இருக்காது என்பதால், தேவையான குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அடிவாரத்திலேயே வாங்கிச் செல்வது நல்லது.

எப்படி செல்வது?

நாமக்கல்லில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து முக்கொம்பு, முசிறி வழியாக 59 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து குணசீலம், முசிறி, தொட்டியம் வழியாக நீலியம்பட்டி கிராமத்தை அடைந்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் மலையடிவாரத்தை அடையலாம்.

இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலின் புராண சிறப்புகள், மலையேற்றத்திற்கான நடைமுறை வழிகாட்டிகள் மற்றும் ஏழரை சனி தோஷ நிவர்த்தி செய்வதற்கான சரியான வழிபாட்டு முறைகளை தெளிவாக அறிந்து, திட்டமிட்டு பாதுகாப்பாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும் ரகசிய பெருமாள் கோவில்: 5300 அடி உயரத்தில் ஒரு பரவச பயணம்!
தலைமலை பெருமாள் - Namakkal Trekking Temple
logo
Kalki Online
kalkionline.com