
‘சாதுர்மாஸ்யம்’ என்றால் நான்கு மாதங்கள் என்று பொருள். சாதுர்மாஸ்ய விரதம் என்பது ஆஷாட மாத சுக்லபட்ச ஏகாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி நாளில் (ஜூலை 6 முதல் நவம்பர் 1 வரை) கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த விரதம் முக்கியமாக துறவிகள் மற்றும் ஆன்மிகவாதிகளால் அனுசரிக்கப்படுகிறது. இந்நாட்களில் உணவில் கட்டுப்பாடு, தியானம் மற்றும் ஆன்மிகப் பயிற்சிகளில் அதிகம் ஈடுபடுவார்கள். பிரம்மச்சாரிகள், கிரகஸ்தர்கள், வானப்பிரஸ்தர்கள் மற்றும் சன்னியாசிகள் ஆகிய அனைத்து நபர்களும் இந்த காலத்தில் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
சாதுர்மாஸ்ய விரதம் என்பது சன்னியாசிகள் மழைக்காலத்தின் நான்கு மாதங்களில் (சாதுர்மாஸ்யம்) ஒரே இடத்தில் தங்கி வழிபாடு, தியானம் மற்றும் புனித காரியங்களில் ஈடுபடுவதற்கான விரதமாகும். இது ஆன்மிக வளர்ச்சிக்காகவும், பயணத்தின்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவும் கடைபிடிக்கப்படுகிறது. சன்னியாசிகள் நாடு முழுவதும் ஆன்மிகப் பணிக்காக பயணம் செய்யக் கூடியவர்கள். ஆனால், மழைக்காலமான ஜூலை முதல் அக்டோபர் வரை அவர்கள் பயணம் எதுவும் மேற்கொள்ளாமல் ஒரே இடத்தில் தங்கி அந்த இடத்தில் உள்ள மக்களை ஆன்மிக ரீதியாக நல்வழிப்படுத்தும் பணியைச் செய்கிறார்கள்.
சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கிய அம்சங்களாக, சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்ப்பதும், மழைக்காலங்களில் வெளியில் வந்தால் பூச்சிகளுக்கு தங்களால் துன்பம் நேரிடும் என்று கருதி ஒரே இடத்தில் இருந்து கொண்டு தங்களுடைய குருமார்களை வழிபடுவது, தியானம் செய்தல், உபதேசம் செய்வது, பூஜைகள், மந்திர ஜபங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். இவை உலகம் முழுமைக்கும் பல மடங்கு பலம் தரக்கூடியதாகும்.
மழைக்காலமான அந்த நான்கு மாதங்களில் பல்வேறு ஜீவராசிகள் இடம் பெயர்ந்து வாழும். அவற்றிற்கு தொல்லை கொடுக்காமல் ரிஷிகள், சன்னியாசிகள், ஆச்சாரியர்கள் ஆஷாட பௌர்ணமி அன்று வியாச பூஜை செய்து, ஒரே இடத்தில் நான்கு மாதங்களுக்கு தங்கி இருப்பார்கள். ஆடி மாத பௌர்ணமி அன்று வேதம் மற்றும் வேதாந்த கல்வியை கற்பித்த குருமார்களை நினைவு கூறும் வகையில் துறவிகள் வேதவியாசரை வழிபட்டு விரதத்தை துவக்குவார்கள்.
சன்னியாசிகளின் வாழ்வில் சாதுர்மாஸ்ய விரதம் என்பது மிகவும் முக்கியமானது. ஆதிசங்கரர் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது சிருங்கேரி சாரதா பீடம். காஞ்சி காமகோடி பீடத்திலும், சிருங்கேரி சாரதா பீடத்திலும் வியாச பூஜை, சாதுர்மாஸ்ய விரதம் சங்கல்பத்துடன் அனுஷ்டிக்கப்படுகிறது. சாதுர்மாஸ்ய முதல் மாதத்தில் சன்னியாசிகள் தங்கள் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களையும், இரண்டாவது மாதத்தில் பாலையும், மூன்றாவது மாதத்தில் தயிர், மோரையும், நான்காவது மாதத்தில் பருப்பு வகைகளையும் தவிர்க்கிறார்கள்.
சன்னியாசிகள் மட்டுமின்றி, இல்லறவாசிகளும் இந்த நான்கு மாதமும் விரதத்தை கடைபிடிப்பது நல்லது. இதன் மூலம் வாழ்வில் எதிர்ப்படும் பிரச்னைகள் தீரவும், மன அமைதி மற்றும் சந்தோஷம் ஏற்படவும் இந்தக் காலகட்டத்தில் செய்யும் வழிபாடுகள் பலனளிக்கும்.