
இந்து தொன்மவியல்படி பிரம்ம தேவன் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைக்கிறார், மகாவிஷ்ணு அந்த உயிர்களைக் காக்கிறார், சிவபெருமான் உயிர்களை அழிக்கிறார். எதற்காக மூவரும் வேறு வேறு தொழிலைத் தேர்ந்தெடுத்தனர். இதன் நோக்கம் என்ன என்பதை இப்பதிவில் அறிவோம்!
முதலில் சிவபெருமான் தன்னிலிருந்து சக்தியை பிரித்து ஆதிசக்தியை உருவாக்கினார். பிறகு அவர் மகாவிஷ்ணுவை படைத்தார். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்ம தேவர் தோன்றுகிறார். படைத்தல் தொழிலை முதலில் ஆரம்பித்தது சிவபெருமான்தான். பின்னர் அந்தத் தொழில் பிரம்ம தேவருக்கு சென்றது. இப்போது கடவுள்கள் இருக்கின்றனர். அவர்கள் கடவுளாகக் கொள்வது யார்? எதற்காக அவர்கள் பிரபஞ்சத்தைப் படைக்க எண்ணினர்.
படைப்பு கடவுள் பிரம்மா: பிரம்ம தேவர் முதலில் பிரபஞ்சத்தை உருவாக்கினார். விண்வெளி, அண்ட சராசரம், பூமி உள்ளிட்ட கிரகங்களை எல்லாம் படைத்தார். அதன் பின்னர் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் அவர் படைத்தார். காஷ்யப முனிவர் - அதிதி மூலம் பல நேர்மறை உயிரினங்கள் உலகில் தோன்றின. காஷ்யப முனிவர் - திதி மூலம் பல எதிர்மறை உயிரினங்களும் உலகில் தோன்றின. தேவர்களும் அசுர்களும் படைக்கப்பட்டனர். கருடனும் நாகமும் கூட படைக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு உயிருக்கும் அதற்கு எதிரான உயிர்கள் படைக்கப்பட்டன.
ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் இந்த உலகத்தை உய்விக்க முடியாது. உணவுச் சங்கிலியில் முதலில் புல் தோன்றுகிறது. புல்லினை தாவர உண்ணிகள் மேய்கின்றன. தாவர உண்ணிகளை புலி, சிங்கம் போன்ற மாமிச உண்ணிகள் கொன்று சாப்பிடுகின்றன. அந்த மாமிச உண்ணிகள் இறந்த பின் கழுகு, காக்கை, நரி, புழு, பூச்சி உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவாகிறது. மீதமுள்ள எச்சங்கள் மண்ணுக்கு உரமாகின்றன. அந்த மண்ணில் மீண்டும் புற்கள் முளைக்கின்றன. மீண்டும் அதைத் தாவர உண்ணிகள் உண்ணத் தொடங்குகின்றன. உலகில் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை கட்டாயம் சார்ந்து இருக்கும்படியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியினை பிரம்ம தேவர் செய்கிறார். படைத்தல் மட்டுமல்ல, ஒருவரின் அறிவையும், அவருக்கு உண்டான விதியையும் பிரம்ம தேவர் உருவாக்குகிறார்.
காக்கும் கடவுள் விஷ்ணு: பிரம்ம தேவர் படைத்த உயிர்களுக்குள் அடிக்கடி எதிர் கருத்துகள் தோன்றும். ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நிகழ்ந்தது. கருடனுக்கும் நாகத்திற்கும் சண்டை நிகழ்ந்தது. ஒவ்வொரு உயிரும் சண்டையிடும்போது தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படாவிட்டால் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். அதனால் அசுரர்களை அழித்து, மகாவிஷ்ணு தேவர்களைக் காத்தார். கருடனும் நாகமும் மகாவிஷ்ணுவுக்கு வாகனமும் படுக்கையும் ஆனது. இயற்கை சமநிலைக்கு இரண்டு உயிர்களும் அழிந்து விடாமல் பாதுகாக்கிறார்.
ஒவ்வொரு உயிரும் காக்கப்படாமல் அழிந்தால், அதன் பின்னர் பிரபஞ்சத்தில் எந்த உயிர்களும் இருக்காது. இதனால் உயிர்களைக் காப்பதற்காக மகாவிஷ்ணு ஒவ்வொரு முறையும் அவதாரம் எடுக்கிறார். பூமியைக் காக்க அவர் வராஹ அவதாரம் எடுத்தார், தர்மத்தை உரைக்க கிருஷ்ண அவதாரம் எடுத்தார், வாழ்வியலைக் கற்பிக்க ராம அவதாரம் எடுத்தார். உயிர்களின் துன்பம் அதிகரிக்கும்போது அவர்களைக் காக்க மகாவிஷ்ணு வருவார்.
அழித்தல் கடவுள் ஈசன்: சிவபெருமான் அனைத்து படைப்புக்கும் மூலகாரணமாக இருந்தாலும் அழித்தல் தொழிலை அவர் செய்கிறார். அவர் ஏன் அழிக்க வேண்டும்? தேவர்கள், அசுரர்கள் சண்டையில் அழிவு நடைபெறாமல் இருந்தால் அவர்களே பெருகி இருப்பார்கள். மற்ற உயிர்கள் தோன்றியிருக்காது. டைனோசர்கள் அழியாவிட்டால் மனித இனம் தோன்றி வாழ்ந்திருக்க முடியாது.
சிவபெருமான் ஒரு சமயம் எமதர்ம ராஜாவை எட்டி உதைத்து உலகில் உயிர்கள் இறக்காதபடி செய்து விட்டார். அதற்குள் பூமியில் மக்கள் கூட்டம் நிரம்ப, உணவு பஞ்சம் ஏற்பட பூமியும் பாரம் தாளாமல் ஆட்டம் கண்டது. அதன் பின்னர் பூமா தேவியின் வேண்டுகோளின்படி சிவன் எமனை மீண்டும் உயிர்ப்பித்து உயிர்களை பறிக்கும் வேலையை கொடுத்தார். அழிவு என்பதும் தேவைக்குரிய ஒரு செயலாகும். அதை செய்யாவிட்டால் உலகின் சமநிலை பாதிக்கப்படும். ஒரு உயிர் அழியும்போதுதான் மற்ற உயிர்கள் தோன்ற வாய்ப்பு கிடைக்கும். அதனால் அழித்தலை சிவபெருமான் செய்கிறார்.