சைவ வழிபாட்டிலிருக்கும் 'அர்த்தநாரீஸ்வரர்' உருவம் போன்று வைணவ வழிபாட்டில் 'வைகுந்த கமலயா' உருவம் பற்றித் தெரியுமா?

Ardhanareeswarar and Vaikuntha Kamalaya
Ardhanareeswarar and Vaikuntha Kamalaya
Published on

சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் ஒன்றாக இருப்பது, அர்த்தநாரீஸ்வரர் (Ardhanarishvara) உருவம். சைவ சமயத்தவர்கள் வழிபடும் உருவ திருமேனிகளில் அர்த்தநாரிசுவரர் சிறப்பிடம் பெறுகின்றது. இதில், அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும், பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும். தேவாரப் பதிகங்களிலும் அர்த்தநாரீஸ்வரரை "வேயுறு தோளி பங்கன்" எனவும் "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவனர்" எனவும் குறிப்பிடுகின்றனர்.

சைவ சமயத்தினரின் வழிபாட்டிலிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் எனும் மாதொருபாகன் வடிவம் போன்று, வைணவ சமயத்தினரின் வழிபாட்டில் ‘வைகுந்த கமலயா’ எனும் உருவம் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் உருவவியலே இதற்கு மூலமாக இருக்கின்றது என்ற போதும், அர்த்தநாரீஸ்வரர் வடிவம் போல, வைகுந்த கமலயா வடிவம் இந்திய வழக்கில் பெரிதாகப் பேசப்படவில்லை. அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்துக்குரியவை போல, எந்த விதமானப் புராணக் கதைகளும், வைகுந்த கமலயா வடிவத்துக்குக் கிடைக்கவில்லை. எனினும், "சாரதாதிலகம்" எனும் பதினோராம் நூற்றாண்டு தந்திரம், பதினாறாம் நூற்றாண்டு "சில்பரத்தினம்", பதினேழாம் நூற்றாண்டு கிருஷ்ணானந்த தந்திரசாரம் முதலான பாஞ்சராத்திரம் சில தந்திரங்கள் குறித்த நூல்களில் இத்திருவுருவம் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன.

கயையில், சீதள கயா ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டொன்று, பதினோராம் நூற்றாண்டின் பிற்பாகத்தைச் சேர்ந்த "யக்சபாலன்" எனும் சிற்றரசன் "கமலார்த்தாங்கின நாராயணன்" (திருமகள் ஓரு பாகமான திருமால்) உள்ளிட்ட பல தெய்வங்களின் திருவுருவங்களை அக்கோயிலில் நிறுவியமை பற்றிக் குறிப்பிடுகின்றது. கிழக்கிந்தியாவிலிருந்து இவ்வாறு தோன்றிய வைகுந்த கமலயாவின் சிற்பம், மெல்ல மெல்ல, காசுமீரம், நேபாளம் பகுதிக்குப் பரவியது எனும் ஒரு கருத்தியல் முன்வைக்கப்படுகின்றது. இன்னொரு கருதுகோள், இவ்வுருவின் பிறப்பிடம் காசுமீரமே என்கின்றது.

அரியானாவின் ஜெயந்திபூரிலுள்ள கி.பி 1204 ஆம் ஆண்டைச் சேர்ந்த இமாச்சலப் பிரதேசத்தின் பையநாத் ஆலயம், பூரி ஜகன்னாதர் ஆலயத்திலுள்ள "சயன தாகூரன்" என்பன, கிழக்கிந்தியாவின் வைகுந்த கமலை சிற்பங்கள் கிடைக்கும் முக்கியமான சில இடங்கள் ஆகும். கி.பி 1263 ஆம் ஆண்டில் கிடைத்த நேபாளத்தைச் சேர்ந்த, மிகப் பழைமையான வைகுந்த கமலை சிற்பம், இன்று கொல்கத்தா இராமகிருஷ்ண மிசன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வைகுந்த கமலயா என்ற பெயரானது, திருமாலின் வசிப்பிடத்தால் அவர் பெற்ற "வைகுந்தன்" என்ற பெயரையும், திருமகளின் வசிப்பிடமான தாமரை (கமலம்) மூலம் அவள் பெற்ற "கமலயா" எனும் பெயரையும் இணைப்பதன் மூலம் உருவான பெயர் ஆகும். இதேப் போன்று, அர்த்தநாரி நாராயணன், அர்த்தநாரி விஷ்ணு, அர்த்தலக்ஷ்மி நாராயணன், வாசுதேவ கமலயா, வாசுதேவ லக்ஷ்மி, அர்த்தலட்சுமி ஹரி என்று வேறு சில பெயர்களும் சொல்லப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
வளங்களைப் பெருக்கும் வசந்த நவராத்திரி
Ardhanareeswarar and Vaikuntha Kamalaya

சாரதா திலகம், கிருஷ்ணானந்த தந்திரசாரம் என்பன விவரிப்பது போல், வைகுந்த கமலயா சிற்பமானது, பரம்பொருளின் இரண்டன்மையையும் ஆண் - பெண் பேதமின்மையையும் குறிக்கின்றது. சில்பரத்தினம் நூல், திருமால் - திருமகளின் வேறுபாடின்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. அர்த்தநாரீஸ்வரர் போலவே, திருமால் வலப்புறமும், திருமகள் இடப்புறமும் சித்தரிக்கப்படுகின்றனர். கருடனில் அமர்ந்திருப்பதாகவோ, அல்லது தாமரையில் நின்றிருப்பதாகவோ, ஆமையில் அமர்ந்திருப்பதாகவோ இச்சிற்பம் காட்சியளிக்கும். திருமகளின் ஊர்தியாக சில வேளைகளில் சொல்லப்படும் ஆமையொன்றும், கருடனொன்றும், வைகுந்த கமலயாவின் இருபுறமும் நிற்பதுண்டு. வைகுந்த கமலயா எண் கரங்கள் கொண்டவர். வலப்புறம் திருமாலுக்குரிய சக்கரம், சங்கு, கதை, தாமரை என்பனவும், இடப்புறம் கலசம், கண்ணாடி, ஏட்டுச்சுவடி, தாமரை என்பனவும் காணப்படும். வலப்ப்புறம் ஆண்மையின் மிடுக்கும், இடப்புறம் பெண்மையின் நளினமும் காணப்படும். தோடு, கையணிகள், மகுடம் என்பனவற்றில் இருபுறமும் சிறிது வேறுபா்டு இருப்பதுண்டு.

இதையும் படியுங்கள்:
நரசிம்மரின் உக்கிரம் தணித்த பானகம் - தயாரிப்பது எப்படி?
Ardhanareeswarar and Vaikuntha Kamalaya

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com