பிரபல விஞ்ஞானியான சத்யேந்திரநாத் போஸ் அறிவியலில், ‘போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்ஸேட்’ (Bose-Einstein condensate) என்பதைக் கண்ட விஞ்ஞானி. இவரது பல கண்டுபிடிப்புகள் க்வாண்டம் இயற்பியல் தோன்றிய ஆரம்ப காலத்தில் அனைவரையும் வியக்க வைத்தன!
1-1-1894ல் பிறந்த இவர் 4-2-1974ல் மறைந்தார்.
இவரது வாழ்க்கையில் பல சுவையான சம்பவங்கள் உண்டு.
அவை அனைத்தும் இந்திய சாஸ்திரங்கள் கூறும் கொள்கைகளை விளக்கும் சம்பவங்களை, மெய்ப்பிக்கும் சம்பவங்களாகும்.
அவற்றில் ஒன்று இது.
ஒரு நாள் காலையில் அவரிடம் பெருமதிப்பு கொண்டவரும் அவரது மாணாக்கருமான பிரபல இயற்பியல் பேராசிரியரான பார்த்தா கோஸ் (Partha Gose) அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சின் இடையில் ஜோதிடம் மற்றும் கைரேகை பார்ப்பது போன்றவை எல்லாம் எவ்வளவு குருட்டுத்தனமானது என்பதை உற்சாகத்துடன் கூறிக் கொண்டிருந்தார் பார்த்தா கோஸ்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சத்யேந்திரநாத் போஸ் பேசலானார்.
“நான் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன், கேள்.. எனது இளமைப் பருவத்தில் ஒரு ஜோதிடர் எனது கைரேகையைப் பார்த்து விட்டு ஒரு ரேகையைச் சுட்டிக் காண்பித்து, நான் படிப்பில் சுமாராகத் தான் இருப்பேன் என்று கூறினார்.
பின்னர் ஐரோப்பா சென்று உயர் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினேன்.
வால்டேருக்கு (விசாகப்பட்டினம்) ஒரு முறை நான் தேர்வு அதிகாரியாகச் சென்றேன். அங்கு பல பேராசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது எனது கைரேகையைக் கணித்த இந்தப் பழைய சம்பவத்தைப் பற்றிக் கூறினேன். எல்லா பேராசிரியர்களும் சிரித்தனர் – ஒருவரைத் தவிர!
அவர் எனது கைரேகையைப் பார்க்க விரும்பினார். நானும் காண்பித்தேன்.
அவர் எனது கைரேகையை நன்கு பார்த்து விட்டு, இந்த ரேகை ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறது.” என்று சொல்லி விட்டு நிறுத்தி விட்டார்.
‘என்ன சொல்கிறது’, என்று நான் வலியுறுத்திக் கேட்டபின் அவர், “ உங்களது குழந்தைகளில் ஒன்று பிறந்த பிறகு இயற்கையற்ற விதத்தில் மரணம் அடைவதைக் குறிக்கிறது” என்றார்.
நான் திடுக்கிட்டேன்.
தொலைதூரத்தில் வால்டேரில் இருந்த ஒருவர் என்னைப் பற்றி முழுதுமாக அறிவதற்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? சில நாட்களுக்கு முன்னர் தான் எனது அண்டைப்புறத்து பெண்மணி ஒருவர் எனது குழந்தையை அவரது மடியில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தக் குழந்தை கொதிக்கும் பாலில் தவறி விழுந்து உடனே இறந்து விட்டது.”
இதை அவர் கூறி முடித்தவுடன் அனைவரும் பிரமித்தனர்.
“இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்க அனைவரும் மௌனமாக இருந்தனர்.
ஆக, கைரேகை சாஸ்திரம் உண்மைதான் என்பதையும், ரேகையைச் சரியாகப் பார்ப்பவர் உண்மைகளை நுணுக்கமாக ரேகைகளின் மூலமாகக் கண்டறிய முடியும் என்பதையும் அவர் கூறிய இந்தச் சம்பவம் விளக்குகிறது!