

ஒரு பெண் தன்னந்தனியாக நின்று 171 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட ஒரு கோயில் கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த 18ம் நூற்றாண்டில் இந்த சாதனையை அப்பெண் நிகழ்த்தியது பிரம்மிப்புக்கு உரியது. அந்தப் பெண் ஒரே சித்த புருஷர் ஆவார். பொதுவாக, ஒவ்வொரு சித்தருக்கும் ஒரு குரு இருப்பார்கள். ஆனால், இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். சிவன் மீது சித்தம் வைத்து அந்தப் பெண்மணி நடத்திய அற்புதங்கள் ஏராளம். அவர் பெயர் அம்மணி அம்மாள். அக்னி தலமாகிய திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது. பலர் முயன்றும் அது நடைபெறவில்லை. திருவண்ணாமலை செங்கம் பகுதியில் உள்ள கோபால் பிள்ளை, ஆயி தம்பதிக்கு 1735ம்ஆண்டு அம்மணி அம்மாள் பிறந்தார். இவருக்கு அருணாசலேஸ்வரர் மீது பக்தி ஏற்பட்டது. இவருக்குக் கல்யாண ஏற்பாடு செய்தபோது, அது பிடிக்காமல் சுமார் 2 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்தில் அப்பெண் குதித்து விட்டார்.
மூன்று நாட்கள் கழித்து வெளியில் வந்த அப்பெண்ணைக் கண்டு ஊரே ஆச்சர்யப்பட்டது. குளக்கரை மண்ணை அவர் எடுத்துக் கொடுக்க அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்த புருஷராக மாறி இருப்பதை அவர் பெற்றோர் மற்றும் ஊரார்க்குத் தெரிய வந்தது. தினமும் கிரிவலம் செல்லும் அவருக்கு ஒரு நாள் வடக்கு கோபுரத்தைக் கட்ட ஈசன் உத்தரவிட்டார்.
அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வணிகர்களும் பொதுமக்களும் பணத்தைக் கொடுக்க, கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். ஐந்து நிலைகள் கட்டி முடித்த நிலையில் அவருக்கு மேலும் பொருளுதவி தேவைப்பட்டது. எனவே, அவர் மைசூருக்கு பயணமாகி மகாராஜாவிடம் உதவி கேட்க தீர்மானித்தார். அரண்மனை காவலன் அவரை உள்ளே விடவில்லை. ஒரு ஓரமாக உட்கார வைத்தான். மதியம் வரை அங்கேயே இருந்தார். அதேசமயம் அரண்மனை தர்பாரில் ஒரு சுவாரசியம் நடந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்லும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார்.
பொதுவாக, சித்தர்களுக்கு ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களுக்குச் செல்லும் சக்தி உண்டு. அந்த சக்தியை பயன்படுத்தி அவர் உள்ளே சென்றதும் உரிய அனுமதியின்றி ஒரு பெண் உள்ளே வந்தது கண்டு மகாராஜா ஆச்சர்யப்பட்டார். அவரிடம் யாரென்ற விவரத்தைக் கேட்க அம்மணி அம்மாள் தான் கட்டி வரும் கோபுரப் பணியை முடிக்க உதவி கேட்க வந்ததாகக் கூறியதும், வாயிற்காப்போன் தன்னை விட மறுத்ததால் ஒரே சமயத்தில் இரண்டு உலகங்களில் சஞ்சரிக்கும் சித்த வித்தை மூலம் உள்ளே வந்ததாகக் கூறினார்.
உடனே மகாராஜா வாயிற்காப்போனை அழைத்துக் கேட்க, அவர் அம்மணி அம்மாளிடம் ‘உங்களை நான் உள்ளே விடவில்லையே. எப்படி வந்தீர்கள்’ எனக் கேட்டான். உடனே வாசலில் சென்று பார்க்க அம்மாள் அங்கே உட்கார்ந்திருந்தார். உள்ளே வந்து மகாராஜா பார்க்க அவர் மாயமானார். உடனே அண்ணாமலையாரே அம்மணி அம்மாள் வடிவத்தில் வந்ததாகக் கருதி உபசரித்து அவருக்குப் பட்டுச் சேலை பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை, குதிரை மற்றும் ஒட்டகங்களில் நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து கோபுரத்தைக் கட்டுமாறு கூறினார்.
அதைக்கொண்டு ஏழு நிலைகள் வரை கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்திற்கு என்ன செய்வது என்று அம்மணி அம்மாள் கவலைபட்டபோது அண்ணாமலையாரே கனவில் வந்து, ‘தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.
கோயில் கோபுர திருப்பணி செய்தவர்களுக்கு அம்மணி அம்மாள் விபூதியை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டது. இதன் மூலம் மனதில் துணிச்சலும் இறையருளும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். 171 அடிக்குக் கட்டப்பட்ட இந்த கோபுரம், ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ராஜகோபுரத்திலும், அம்மணி அம்மாள் கோபுரத்திலும் ஒரே மாதிரி 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டதும் அதற்குத் தானே முன்னின்று அம்மணி அம்மாள் கும்பாபிஷேகத்தை நடத்தினார். துறவி போல் வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார். திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற இவர், தனது 50வது வயதில் தைப்பூசம் அன்று பரிபூர்ணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8வது லிங்கமாக ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டது. அங்கு வழங்கப்படும் விபூதி பிரசாதம் மனக் கவலைகளை விரட்டும் சக்தி படைத்தது. அவர் ஜீவசமாதியில் சிறிது நேரம் தியானம் செய்ய மனம் லேசாக ஆவதை உணரலாம்.