
நாம் அனைவரும் கோயிலுக்குச் செல்லும்போது கையில் கொண்டு செல்லும் பொருட்களில் மிகவும் முக்கியமானது தேங்காய் மற்றும் வாழைப்பழம். கோயில்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் முன் தேங்காய், வாழைப்பழம் வைத்து படைக்கிறோம். அர்ச்சனைக்கு தேங்காய் வாழைப்பழம் அவசியம்தானா என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டும் இயற்கையின் உன்னதமான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. கலப்படம் இல்லாத இயற்கை சார்ந்த பொருட்களாக இது இன்றும் மதிக்கப்படுகிறது. பெரும்பாலான இயற்கை பொருட்கள் விதைகளை உடையதாக இருக்கிறது. அவை மீண்டும் ஒரு செடியை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஆனால் தேங்காயும், வாழைப்பழமும் அப்படியல்ல. இது மட்டுமின்றி, வேறு சில ஆன்மிகக் காரணங்களும் இதற்கு உண்டு.
தேங்காயின் பயன்கள் நாம் பலரும் அறிந்ததே. தேங்காயை சாப்பிட விரும்பினால் அதனை உடைத்துதான் ஆக வேண்டும். அதை சாப்பிட்ட பிறகு அதன் வெளிப்புறத்தை தூக்கி எறிந்து விடுவோம். அதை வைத்து மற்றொரு மரத்தை உருவாக்க இயலாது. மரத்தை உருவாக்க விரும்பினால் ஒரு முழுத்தேங்காயால் மட்டுமே முடியும்.
வாழைப் பழத்தை சாப்பிடும்போது பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை வீசி விடுவோம். வாழை மரத்திற்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கும்போது அது மற்றொரு மரத்தை தானாக உருவாக்குகிறது. வாழைப்பழத்தை கடவுளுக்குப் படைக்கப்படுவதன் அர்த்தம் என்னவெனில் எப்படி இனிமையான பழத்தை சுவையே இல்லாத தோலானது மூடியிருக்கிறதோ, அதேபோல நமக்கு நன்மைகளை வழங்கக்கூடிய நம்முள் இருக்கும் பல நல்ல குணங்களை தேவையே இல்லாத சில தீய குணங்கள் மூடியிருக்கின்றன. அவற்றை துறந்தால் மட்டுமே நம்மால் வாழ்வின் இனிமையை உணர முடியும்.
தேங்காயின் மேல் இருக்கும் வெளிப்புற ஓடுதான் நமக்குள் இருக்கும் கர்வமும், அகங்காரமும் ஆகும். எப்போது நாம் நம்மைச் சுற்றியிருக்கும் கர்வம் என்னும் ஓட்டை உடைக்கிறோமோ அப்போதுதான் நம் மனம் திறந்து அதற்குள் இருக்கும் மென்மையான தேங்காய் போன்ற இனிமையான குணம் வெளிப்படும்.
அதில் இருக்கும் இனிமையான தண்ணீர் நம் மனதில் இருக்கும் பக்தியை குறிக்கும். அதில் இருக்கும் மூன்று கண்களும் நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை குறிப்பதாகும்.
இதை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டார்கள். அதனால்தான் தேங்காய் மற்றும் வாழைப்பழம் வைத்து இறைவனை வழிபடும் வழக்கம் இன்றும் நம் வழிபாட்டு முறையில் உள்ளது.