

22-11-1985 அன்று ஶ்ரீ சத்யசாயி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் லேர்னிங்-இல் நான்காவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைகழக வேந்தரான ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரையின் ஒரு பகுதியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
"ஒரு நாள் சுபத்ரையிடம் அர்ஜுனன் போர்க்கலை பற்றியும் பத்மவியூகம் பற்றியும் கூற ஆரம்பித்தான். அவள் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் அபிமன்யுவை கர்ப்பத்தில் கொண்டிருந்ததை அவன் அறியவில்லை. சுபத்ரையின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை, அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கிருஷ்ணர் சுபத்திரை கர்ப்பிணியாக இருக்கிறாள் என்றும் அவன் கூறுவது குழந்தையின் மீது பெரும் செல்வாக்கை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
பாரதத்தில் கர்ப்பமாக உள்ள பெண்மணிகளிடம் வீரர்கள், மகான்களைப் பற்றிச் சொல்வது பண்டைய கால வழக்கமாகும். இதனால் அந்த நல்ல கதைகளினால் நல்ல அதிர்வுகளைப் பெறும் தாயிடமிருந்து அவற்றை கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளும் பெறுவார்கள். இதை பழங்கால ரிஷிகள் நன்கு அறிந்திருந்தனர்.
மார்க்கண்டேயர், துருவன், ப்ரஹ்லாதன் போன்ற அருமையானவர்களைப் பற்றி கர்ப்பிணிகளிடம் சொல்வது வழக்கம்.
இன்று என்ன நடக்கிறது? கர்ப்பிணிகள் டெலிவிஷன், சினிமா மற்றும் அபத்தமானவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குற்றங்களும் செக்ஸும் தான் இருக்கின்றன. இதனால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் தேவையற்ற போக்கைக் கொள்கிறார்கள்.
இன்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் மஹாபாரதம் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறார்கள். அமெரிக்காவில் கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்ட் ஹெல்த் அண்ட் ஹ்யூமன் டெவலப்மெண்ட் குழந்தைகள் எதனால் செல்வாக்குக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அந்தோணி கேஸ்பர் (Anthony Casper) என்னும் ஒரு திறமையான விஞ்ஞானி பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். அவர் கிருஷ்ணர் சொன்னது அனைத்தும் உண்மை என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். கிருஷ்ணரின் உபதேசங்களை நமது கெட்ட வாசனைகளைக் கொண்ட மனங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.
அந்தோணி கேஸ்பர் 1984ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி தனது கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகளின் மாநாட்டில் அறிவித்தார். ஒரு கர்ப்பிணி உண்ணும் உணவும் அவள் கேட்கும் வார்த்தைகளும், எண்ணும் எண்ணமும் அவள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள உண்மைகளை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய முன்வந்திருப்பது வரவேற்க வேண்டிய ஒரு அம்சமாகும்.
இதற்கு நேர்மாறாக பெரும் பண்பாட்டைக் கொண்ட இந்த மாபெரும் தேசத்தில் பிறந்தவர்கள் இந்த இலட்சியத்திற்கு எதிராக நடந்து கொண்டு தங்கள் வாய்ப்புகளை வீணடிக்கிறார்கள்.
அமெரிக்க விண்வெளி வீரரான மிட்செல் (Mitchell) சந்திரனில் இறங்கியவுடன் அங்கிருந்து பூமியைப் பார்த்தார். அவர் பூமியை நீல வெல்வெட் கம்பளத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜொலிக்கும் பெரிய வைரமாகக் கண்டார். இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவர் உணர்ச்சி வசப்பட்டார்.
“இந்த அற்புதமான பூமியில் பிறந்தோர் ஏன் இப்படி ஒன்றும் அறியாமல் கெட்ட மனதுடன் இருக்கிறார்கள்? ஒரு வைரத்திலிருந்து தான் இன்னொரு வைரம் உருவாகும். ஒரு கல்லிலிருந்து அல்ல. புனிதமான மண்ணைக் கொண்ட அன்னை பூமியிடமிருந்து ஏன் இப்படி கெட்ட மனிதர்கள் உருவாக வேண்டும்” என்று இப்படி அவர் கேட்டார்.
அவர் தனது கேள்விக்கான விடையை மனிதர்கள் நல்ல பண்புகளைக் கொள்ளாமல் உலோகாயத வேடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதே காரணம் என்று அறிந்து கொண்டார்.
எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் சரி, தர்மத்துடன் கூடிய நடத்தை வேண்டும். இல்லையேல் மற்ற அனைத்தும் வீண் தான்.
உண்மையான கல்வி நல்ல இதயத்தைப் பண்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்க்கையைக் கொண்ட மனிதர்களே இந்த தேசத்தின் இன்றைய தேவையாகும்."