

சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான அடர்ந்த காட்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சிவன் கோவில் தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவிலாகும். இந்த ஆலயம் திருநெல்வேலியில் உள்ள தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. புன்னை மரங்கள் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் காட்டில் அமைந்துள்ள தென்மலை கோவில் மிகவும் சக்தி பெற்றது.
மூலவர்: திரிபுர நாதேஸ்வரர் - அம்பிகை: சிவபரிபூரணியம்மாள்
சிறப்பு: தென்பாண்டி நாட்டின் பஞ்சபூதத் தலங்களில் நான்காவது தலமான 'காற்று' தலம் எனப் போற்றப் படுகிறது. இக்கோவில் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது மற்றும் இதன் எதிரில் தென்மலை குளம் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு பழமையான சிவன் கோவிலாகும். பாரம்பரியமாக சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான மற்றும் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஒன்று இது.
தல வரலாறு:
சிவகிரி பாளையக்காரர்கள் (ஜமீன்தார்கள்) தங்கள் படைகளுடன் இந்த வழியே சென்ற பொழுது சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தை ஜமீன்தார் கண்டெடுத்தார். பின்னர் உக்ர பாண்டியனின் கனவு உத்தரவின்படி, இந்த அடர்ந்த காட்டில் ஜமீன்தார் ஒரு பிரம்மாண்டமான கோவிலை எழுப்பினார்.
இதேபோல் சிவகிரி ஜமீன்தார் பரம்பரையினரால் நிர்வகிக்கப்படும் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோவில் கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலாகும். இதுவும் சிவகிரி பகுதியில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகும்.
ஸ்ரீ சிவபரிபூரணி அம்பாள் சமேத திரிபுரநாதேஸ்வரர் (முப்புரம் எரித்த சிவன்) கோவில் தென்மலை சிவகிரி தாலுகா. காளகஸ்திக்கு இணையான சக்திகொண்ட புகழ்பெற்ற கோவில் இது. சிவபெருமானின் வீரச்செயல்களைப் போற்றும் தசவீராட்டாண ஆலயங்களில் இது ஏழாம் ஆலயமாக கருதப்படுகிறது.
வரலாற்று பின்னணி:
சிவகிரி பாளையக்காரர்கள் தொடக்கத்தில் தென்மலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். பின்னரே தங்களின் அரண்மனையை சிவகிரிக்கு மாற்றினர். சிவகிரி பாளையக்காரர் தென்மலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த காலத்தில், இப்பகுதியில் இறைவன் தோன்றி தனக்கு கோயில் எழுப்பக் கட்டளையிட்டதாக வரலாறு கூறுகிறது. பகைவர் பயம் போக்கும் பரிகாரத் தலமாக இது விளங்குவதால், சிவகிரி ஜமீன்தாரர்கள் போருக்குச் செல்லும் முன்பும் எந்த ஒரு முக்கிய காரியத்தைத் தொடங்கும் முன்பும் இங்கு வந்து ஈசனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கோவிலின் சிறப்புகள்:
பஞ்சபூத தலங்களில் நான்காம் தலம் இந்த தென்மலை. இந்தக் கோவிலை காற்று தலம் என்றும் அழைக்கிறார்கள். சிவராத்திரி அன்று பல அடியார்கள் ஒன்று கூடி பஞ்சபூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள்.
தென்மலையைத் தவிர்த்து பஞ்சபூத தலங்களில் மற்ற தலங்களும் அருகிலேயே உள்ளன. சங்கரன்கோவில் மண் தலமாகவும், தருகாபுரம் நீர் தலமாகவும், தேவதானம் ஆகாயத்தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் அக்னித் தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் சிவராத்திரி அன்று பக்தர்கள் நடந்தே சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.
பரிகார ஸ்தலம்:
இங்குள்ள சிவலிங்கம் மூச்சு விடுவது போன்ற அதிசயத் ன்மை உடையது என்றும், இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. காளஹஸ்தியைப் போலவே சர்ப்பதோஷம் நீக்கும் தலம் இது. எதிரிகளின் பலம் குறைவதற்கும் இங்குள்ள இறைவனை வேண்டுகிறார்கள்.
திருவிழாக்கள்:
ஆலயத்தில் புரட்டாசி நவராத்திரி விழா, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை விழா, திருவாதிரை போன்ற நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி கிரிவலம் போன்றவை இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சிவராத்திரி அன்று பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இக்கோவிலை தரிசித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களில் இருக்கும். மலையை ஒட்டி கோவில் இருப்பதால் பக்தர்கள் மாதம் தோறும் பௌர்ணமி கிரிவலம் வருகிறார்கள். இந்த கிரிவலப் பாதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளது.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள கரிவலம் வந்த நல்லூரில் இருந்து இடது புறமாக சுமார் 6 கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும். ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள சிவகிரியில் இருந்தும் இக்கோவிலுக்கு ஆட்டோ வசதிகள் உள்ளன.