
சாப்பிட்ட உணவு எப்படி மலமானது? உயிரோடுதான் இருந்தேன் எப்படி இறந்தேன்? மலமே உணவாக இருந்ததா? மரணமே வாழ்வாக இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளையா இத்தனைக் கண்கள் வட்டமிட்டன? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற வாழ்வைதானா? இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருக்க வேண்டும்.
காலம் கடந்த ஞானம் பெற்று பலனில்லை. பாயும், நோயும் தவிர யாரும் துணை வரப்போவதில்லை. பிணமானப்பின் வீடும் பணமும் நமதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும்? சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கப்போவதில்லை.
மண்ணில் பிறந்த நமக்கு இறந்தபின்னர் மண்ணே சாசுவதம். "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று தழுவிக்கொள்ளும் மண். அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.
மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கின்றன. எந்தப் பறவையும் வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.
நான் சம்பாதித்தேன், காப்பாற்றினேன், வீடு கட்டினேன், உதவி செய்தேன், வேலை வாங்கி கொடுத்தேன் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே! 'நான் தான் என் இதயத்தை, என் மூளையை இயக்குகிறேன்' என்று சொல்ல முடியுமா? 'சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து நான் தான் இரத்தத்தில் சேர்க்கிறேன்' என்று சொல்ல முடியுமா? இவைகள் அனைத்தையும் யார் செய்கிறாரோ, இயக்குகிறாரோ அவர் ஒருவனுக்கே 'நான்' என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.