
பிறவியெடுத்த அனைத்து உயிர்களுக்கு அவரவர் செய்யும் கர்ம வினைக்கு ஏற்ப ஜாதக அமைப்புகள் இருக்கும். நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள் அனைத்தும் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் அமையும். நாம் செய்யும் கர்ம வினைக்கு ஏற்ப நம் வாழ்க்கை துணையும் அமையும். ஒருவரின் திருமண வாழ்க்கையில் கிடைக்கும் இன்பம் அவரவர் செய்யும் முன் ஜன்ம கர்ம வினையின் அடிப்படையில் அமைகின்றது.
ஒருவரின் வாழ்க்கையில் மற்றவர்களின் இணைவால் அவரவர் வாழ்க்கையில் கிடைக்கும் மாற்றமுள்ள உறவுகள் யாவும் முன்ஜன்மத் தொடர்பு உடையதாகும். நமது வாழ்க்கையில் முன் ஜன்மத்தில் மிக நெருங்கிய தொடர்புடைய ஒருவரால் மட்டுமே இந்தப் பிறவியில் ஒருவருக்கு வாழ்க்கைத் துணையாக அமைவதற்கான வாய்ப்புகள் ஏராளம் ஆகும். இதில் எள்ளளவும் எவ்விதமான சந்தேகமும் இன்றி இன்றளவும் நிரூபணம் ஆகியுள்ளது. திருமணத்திற்கு முன்பு அவரவர்களின் தனிப்பட்ட ஜாதகம் மட்டுமே செயல்படும். திருமணத்திற்கு பின்பு கணவர், மனைவியின் ஜாதகம் என இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஜாதகங்களை இரு வகையாகப் பிரிக்கின்றனர். ஒன்று சுத்த ஜாதகம், மற்றொன்று குடும்ப ஸ்தானங்களில் ராகு, கேது, செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அது, ‘தோ ஜாதகம்’ என்று அழைக்கப்படுகின்றது. சுத்த ஜாதகம் என்பது குடும்ப பாவகங்களில் இயற்கை பாவிகள் இல்லாமல் இருப்பதாகும். திருமண பாவகங்களை இயற்கை பாவிகளால் பாதிக்கப்படாமல் இருப்பதே சுத்த ஜாதகம் ஆகும்.
ஏக லக்ன பொருத்தம்: புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல் இவை இரண்டையும் தரவல்லது ஏக லக்னப் பொருத்தமாகும். மேலும் 5, 9ம் இட லக்னங்களும் திருமண வாழ்க்கைக்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏக லக்னத்தில் இணைந்த இனிய இல்லற தம்பதிகள் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெறுகின்றனர். வாழ்வின் அனைத்து வசதி வாய்ப்புகள், மன ஒற்றுமை, குழந்தைகள் என சகல சம்பத்துகளும் பெறுகின்றனர். ஏக லக்னம் இருவரிடமும் ஒத்த எண்ணங்களையே தூண்டுகின்றன. இதுபோன்ற ஒத்த எண்ணங்கள் ஒன்றையொன்று வலுவூட்டிக் கொண்டு தங்களின் இலக்கை அடைகின்றன.
லக்னம் என்பது ஜாதகக் கட்டத்தில் முதல் வீடாகும். ஜன்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் உள்ளதோ அந்த ராசி மண்டலம் லக்னமாக செயல்படும். ராசியை விட உயர்ந்த லக்னத்தைக் கொண்டு திருமணப் பொருத்தம் பார்ப்பது சிறப்பாக இருக்கும். ஜாதகர் தனது லக்னத்திற்கு தீமை செய்யும் 4, 6, 8, 12 லக்னம் இல்லாதவரை திருமணம் செய்தால் நன்மை ஏற்படும்.
ஆணின் ஜன்ம லக்னத்திற்கு எந்த ஸ்தானத்தில் (1, 2......12) பெண்ணின் பிறப்பு லக்னமாக வருகிறதோ, அந்த ஸ்தானத்திற்கு சொல்லப்பட்ட பலன்கள், அந்தப் பெண்ணை மணம் முடித்ததிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும். இதுவே லக்னப் பொருத்தத்தின் பொது விதி ஆகும்.
ஏழாமிட லக்னம்: மேஷ லக்ன ஆணிற்கு ஏழாமிடம் துலா லக்னப் பெண்ணை இணைக்கலாம். இருவரின் லக்னாதிபதிகளாகிய செவ்வாயும், சுக்கிரனும் பகை அல்ல. எனவே, நல்ல ஒற்றுமை இருக்கும். ரிஷப லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு ஏழாமிட விருச்சிக லக்ன பெண் அல்லது ஆணை திருமணம் செய்யலாம். இருவருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கும்.
மிதுன லக்ன ஆண் அல்லது பெண்ணிற்கு ஏழாமிட தனுசு லக்ன பெண் அல்லது ஆணை கண்டிப்பாகத் திருமணம் செய்தல் கூடாது. ஏனென்றால், லக்னாதிபதிகள் குருவும், புதனும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகள். எனவே, மிதுன லக்னத்திற்கு ஏழாமிட தனுசு லக்னத்தை பொருத்துதல் கூடாது.