

முன்னொரு காலத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன், பூலோகம் வந்தபோது, சிவபூஜை செய்ய விரும்பினான். அருகே சிவலிங்கம் எதுவும் இல்லை. காலை நேரப் பூஜைக்கான நேரம் குறைவாகவே இருந்தது. சிவபெருமான் அருளும் திருத்தலத்தைத் தேடிச் சென்று பூஜை செய்யும் அளவுக்கு நேரம் இருக்கவில்லை. அதனால் சட்டென்று காவிரி ஆற்றின் மணலை அள்ளி லிங்கமாகப் பிடித்து பூஜை செய்தான்.
சிவபெருமானின் நடனக் காட்சியைத் தரிசிக்க விரும்பி, பாடல் பாடி இறைவனை நினைந்து உருகினான். இந்திரனின் பக்தியால் மகிழ்ந்த ஈசன், நடனக்காட்சி தந்து அருளினார். எனவே இவருக்கு ‘கானநர்த்தன சங்கரன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. பூஜை முடிந்ததும் லிங்கத்தை அங்கேயே விட்டுச் சென்றான் இந்திரன். அந்த இடத்தில் பிற்காலத்தில் ஆலயம் எழுப்பப்பட்டது. அதுவே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருநீடூர் சோமநாதர் ஆலயம். இங்குள்ள லிங்கத்திருமேனியில் இந்திரனின் விரல் தடம் இப்போதும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தன்மசுதன் என்ற அசுரன், முன்வினைப்பயனால் நண்டாகப் பிறந்தான். அவன் தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தினான். நண்டாகப் பிறந்த தன் பாவங்களுக்கு விமோசனம் பெற விரும்பினான். நாரதரிடம் தன் மனக் குமுறலைச் சொல்லி ஆலோசனை கேட்டான். திருநீடூர் சிவபெருமானை வழிபடுமாறு ஆலோசனை வழங்கினார் நாரதர்.
அவரின் ஆலோசனையை ஏற்று, தன்மசுதன் இத்திருத்தலம் வந்து, காவிரி ஆற்றில் நீராடி, சிவபெருமானை வழிபட்டான். ஈசனும் அசுரனுக்குக் காட்சி தந்து அருளினார். நண்டு வடிவில் இருந்த அசுரன் தன்னுள் ஐக்கியமாவதற்கு வசதியாக, தன் லிங்கத் திருமேனியில் துளை ஏற்படுத்திக்கொடுத்தார். அசுரனும் அந்தத் துளை வழியாகச் சென்று இறைவனோடு ஐக்கியமானான். நண்டு சென்ற துளை லிங்கத் திருமேனியில் இப்போதும் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் இங்கு ‘கற்கடக பூஜை’ நடக்கிறது. நண்டு இறைவனை வணங்கி விமோசனம் பெற்றதால், இத்திருத்தலம் கடக ராசிக்காரர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது. கடக ராசிக்காரர்கள் இங்கு வந்து சிவபெருமானை வேண்டினால், துன்பங்கள் விலகி நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் அம்பிகை ‘வேயுறு தோளியம்மை’ என்ற திருநாமத்தில் அருள்கிறார். சூரிய பகவான் இத்தல அம்பிகையை வழிபட்டுள்ளார். அதனால் அம்பிகைக்கு ‘ஆதித்ய அபயவரதாம்பிகை’ என்றும் பெயர் உண்டு. இங்கு நவக்கிரகங்களுக்கு சந்நிதி இல்லை. ஆனால் சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. அம்பிகையின் சந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் சனி பகவானின் சந்நிதி இருப்பதால், அன்னையையும் சனி பகவானையும் ஒரே இடத்தில் இருந்து தரிசிக்கலாம். இதனால் சனி தோஷம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
எல்லா சிவாலயங்களிலும் விநாயகப் பெருமான் இருப்பார். இங்கு சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்று மூன்று திருநாமங்களில் அருள்கிறார். இந்த மூன்று விநாயகரையும் பெரியவர், பழையவர், புனிதமானவர் என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். புதிதாக ஏதாவது செயலோ, தொழிலோ தொடங்கும் முன் இந்த விநாயகரை வணங்கி ஆலோசனை கேட்ட பின்பே தொடங்கு கிறார்கள். அதனால் இவருக்கு ஆலோசனை சொல்லும் விநாயகர் என்றும் திருநாமம் உள்ளது.
பிரளய காலத்திலும் அழியாமல் நிலைத்து நீடித்திருக்கும் தலம் என்பதால் நீடூர் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். அதேபோல், கிருத யுகத்தில் தேவேந்திரனும், திரேதா யுகத்தில் சூரிய பகவானும், துவாபர யுகத்தில் பத்ரகாளியும், கலி யுகத்தில் நண்டும் இத்தலத்தில் இறைவன் சோமநாதரைப் பூஜித்து அருள் பெற்றுள்ளதால், மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாக இது விளங்குகிறது.