தாய்லாந்து மன்னர் முடிசூட்டலின் போது பாடப்படும் பாடல்கள் - திருப்பாவை, திருவெம்பாவை!

தாய்லாந்து மன்னர் முடிசூட்டலின் போது பாடப்படும் பாடல்கள் - திருப்பாவை, திருவெம்பாவை!
Published on

மார்கழி மாதம் என்றாலே, சைவ சமயத்தின் இளம் பெண்கள் திருவெம்பாவைப் பாடல்களையும், வைணவ சமயத்தின் இளம் பெண்கள் திருப்பாவைப் பாடல்களையும் பாடும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய, திருப்பாவையில் மொத்தம் 30 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 474 ஆம் பாடல் முதல் 503 வரை திருப்பாவைப் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் பாவை நோன்பு நோற்கின்றனர். இந்நோன்பின்படி, விடியும் முன்பே எழும் இளம் பெண்கள், பிற பெண்களையும் எழுப்பிக் கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் பக்தி மிகுந்த இளம் பெண்களால் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. வைணவ சமய வழிபாட்டில் ஒன்றாகக் கலந்து விட்ட திருப்பாவை, மாதவனாகிய பெருமாளுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப் பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுகிறது.

இந்தியாவில் எங்கெல்லாம் பெருமாளின் திருக்கோயில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம், பாடலியற்றிய கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளார். வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, திருமால் வழிபாட்டில் திருப்பாவை வேண்டுதல்கள் இடம் பெறுகின்றன.

திருப்பாவையின் சிறப்புக்கு, அப்பாடலில் இடம் பெற்றிருக்கும் பக்தி மட்டுமல்ல. அதில் இடம் பெற்றிருக்கும் கோதை, மாதவன் மேல்கொண்ட தூய காதலும், அதன் விளைவாய் அடியவர்கள் அனைவருக்கும் அரும் பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணமும் என்று சொல்லலாம்.

இதேப் போன்று, சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பே திருவெம்பாவை என்பது. இந்தத் திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாகக் கொண்டுள்ளனர். இளம் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்தப் பாடல்களைப் பாடுவது வழக்கத்திலுள்ளது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது. ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையைத் தரிசிக்கும் போது பாடப் பெற்ற திருவெம்பாவை, சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது 'எம்பாவாய்' என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் திருவெம்பாவை என்றே வருவதால், அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த 'ஏலோர் எம்பாவாய்' என்ற தொடர் பொருளற்றது என்றும், 'பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய்' என்று பொருள் தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன.

இதையும் படியுங்கள்:
மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
தாய்லாந்து மன்னர் முடிசூட்டலின் போது பாடப்படும் பாடல்கள் - திருப்பாவை, திருவெம்பாவை!

சிவசக்தியின் அருட்செயலையும், மனோன்மணி, சர்வ பூததமணி, பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளான நவசக்திகள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.

பெண்கள் நோன்பு நோற்பதற்கு காலையில் செல்லும் போது தூங்கும் பெண்ணை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி, நீராடி, சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

இதையும் படியுங்கள்:
இடது கையால் பிறருக்கு தானம் செய்வது முறையா?
தாய்லாந்து மன்னர் முடிசூட்டலின் போது பாடப்படும் பாடல்கள் - திருப்பாவை, திருவெம்பாவை!

தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டலின் (பதிவியேற்பு நிகழ்வின்) போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுவது இன்றும் வழக்கத்திலிருக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com