

மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த புண்ணிய பூமி திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலம் இது. இங்கு மலையே ஈசனாக எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
திருவண்ணாமலை என்றாலே கிரிவலம்தான் எல்லோருக்கும் நினைவிற்கு வரும். திருவண்ணாமலை கிரிவலம் வருவது மிகவும் பிரசித்தி பெற்றது. கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோவில்கள், ஆசிரமங்கள், மடங்கள் உள்ளன. 14 கிலோமீட்டர் தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனை தரிசிக்க நினைத்தது ஈடேறும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளன்று சிவ பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கிரிவலம் தொடங்கும் பொழுதும், நிறைவு செய்யும் பொழுதும் தீபமேற்றி மலையை வணங்குவது சிறப்பு. மலையைச் சுற்றி வரும்போது இறை சிந்தனையுடன் வலம் வரவேண்டியது அவசியம். அத்துடன் நம் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வதும் நல்ல பலனைத்தரும்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள 14 கிலோமீட்டர் தூரத்தில் எட்டு திசைகளை காக்கும் 'அஷ்ட லிங்கங்கள்' அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்கங்களும் திசைகளின் காவலர்களான அஷ்டதிக் பாலகர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவை ஆகும். பௌர்ணமி கிரிவலத்தின் பொழுது இவற்றை தரிசிப்பது மிகவும் சிறப்பு.
இந்திர லிங்கம்:
கிழக்கு திசை. செல்வம் மற்றும் ஆரோக்கியத்தைத்தரும். கிரிவலப் பாதையின் தொடக்கத்தில் முதன்மை ராஜகோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. தேவர்களின் தலைவனான இந்திரன் வழிபட்ட லிங்கம் இது.
அக்னி லிங்கம்:
தென்கிழக்கு திசை. உடல் வலிமை மற்றும் தூய்மை தரும். செங்கம் சாலையில் உள்ள சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அக்னி தேவன் வழிபட்ட லிங்கம் இது. சந்திரனுக்கு அக்னி வடிவில் காட்சியளித்த லிங்கமே இங்கு குளிர்ந்து அக்னி லிங்கமாகக் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இவரை வழிபட மன உறுதி அதிகரிக்கும்; பயம் நீங்கும்; கண் திருஷ்டி அகலும் என்று கூறப்படுகிறது.
யம லிங்கம்:
கிரிவலப் பாதையின் தெற்கு திசையில் அமைந்துள்ளது. எம தர்மராஜன் வழிபட்ட லிங்கம் இது. தென்திசை அதிபதியான எம தர்மராஜன் தன் பாவங்கள் விலக கிரிவலம் சென்றபொழுது சிவபெருமான் தாமரை மலரில் லிங்கமாகத் தோன்றி அருளினார். இவரை வழிபட மரண பயம் நீங்கும். நீண்ட ஆயுள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
நிருதி லிங்கம்:
கிரிவலப் பாதையின் தென்மேற்கு திசையில் சோணாசலத் தலம் அருகே அமைந்துள்ளது. நிருதி திக் பாலகர் வழிபட்ட லிங்கம் இது. இவரை வழிபட கடன் தொல்லைகள் தீரும். வம்ச விருத்தி உண்டாகும். தீயசக்திகள் மற்றும் தடைகளைப் போக்கும் சிறப்பு பெற்றது.
வருண லிங்கம்:
கிரிவலப் பாதையின் மேற்கு திசையில் அமைந்துள்ளது. மழைக்கு அதிபதியான வருண பகவான் வழிபட்ட லிங்கம் இது. இவரை வழிபட மன அமைதி கிடைக்கும். தீராத நோய்களிலிருந்து காக்கும் லிங்கம் இது.
வாயு லிங்கம்:
கிரிவலப் பாதையின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. காற்றுக்கு அதிபதியான வாயு தேவன் வழிபட்ட லிங்கம் இது. இவரை வழிபட வயிற்று உபாதைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி உண்டாகும் மற்றும் சுவாசக் கோளாறுகளை போக்கும்.
குபேர லிங்கம்:
கிரிவலப் பாதையின் வடக்கு திசையில் அமைந்துள்ளது. செல்வத்தின் அதிபதியான குபேரன் வழிபட்ட லிங்கம் இது. இவரை தரிசிக்க பொருளாதார நெருக்கடிகள் நீங்கி, வியாபார விருத்தியும், செல்வ வளமும் பெருகும்.
ஈசான்ய லிங்கம்:
கிரிவலப் பாதையின் இறுதிப் பகுதியில் வடகிழக்கு திசையில் மயானத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஈசான திக் பாலகர் வழிபட்ட லிங்கம் இது. இவரை வழிபட மன ஒருமைப்பாடு, தியான சித்தி மற்றும் முக்தி அடைவதற்கான ஆன்மீக ஞானம் கிடைக்கும்.
கிரிவலம் செல்லும்போது கவனிக்க வேண்டியவை:
மலையை எப்போதும் இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். கிரிவலம் வரும் பொழுது சாலையின் இடது புறமாக நடந்து செல்வது மரபாகும். கிரிவலத்தின் பொழுது வீண் கதைகள் பேசுவதைத் தவிர்த்துவிடவும். "அருணாசல சிவ சிவ" அல்லது "ஓம் நமசிவாய" மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்தபடி அமைதியாக நடக்க வேண்டும்.
அஷ்ட லிங்கங்கள் தவிர கிரிவலப் பாதையில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆதி அண்ணாமலை கோவிலும் அமைந்துள்ளது. இவற்றையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.