

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) நடக்கிறது.
திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட ‘தான்’ என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே காத்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணமாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படம் 2,668 அடி உயர மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் கார்த்திகை தீபத்தன்று இந்த மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
தமிழகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய கோபுரமான 217 அடி உயரம் கொண்ட அருணாசலேஸ்வரா் கோவில் ராஜகோபுரத்துக்கு 217 அடி உயர பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 50 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா தீபக் கொப்பரை விவரங்கள்:
மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் அணையாமல் எரிவதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் ஆவின் நிறுவனத்திடமிருந்து சுமார் 4,500 கிலோ (சுமார் 3,500 லிட்டர்) சுத்தமான நெய் கொள்முதல் செய்யப்பட்டு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர, பக்தர்களும் காணிக்கையாக நெய் வழங்குகின்றனர்.
தீபம் ஏற்றுவதற்கு சுமார் 1,000 முதல் 1,200 மீட்டர் (சில ஆண்டுகளில் 1,500 மீட்டர் வரை) நீளமுள்ள புதிய பருத்தி காடா துணி திரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் வாசனைக்காகவும் தீபம் நன்கு பற்றி எரிவதற்காகவும் கற்பூரமும் சேர்க்கப்படுகிறது.
மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் பிரம்மாண்ட கொப்பரை சுமார் 5.5 அடி 9 அங்குலம் உயரமும், 310 முதல் 320 கிலோ எடையும் கொண்டது.
இந்த கொப்பரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கும் வகையில் மூன்று அடுக்குகளைக் கொண்ட பஞ்சலோகத்தால் (5 உலோகங்கள்) செய்யப்பட்டது.
கொப்பரையில் சிவ சிவ என எழுதியும், நந்தி, சிவலிங்கம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அணையாமல் எரியும் இந்த மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.
மகா தீபம் ஏற்றும் பாரம்பரிய உரிமை:
திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் பாரம்பரிய உரிமை, மீனவ சமூகத்தைச் சேர்ந்த பர்வத ராஜகுல (பரத்வாஜ குல) மரபினருக்கு மட்டுமே உரியது. பொதுமக்கள் யாரும் கொப்பரையைத் தூக்கிச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தப் பணியில் ஈடுபடும் பர்வத ராஜகுல வம்சாவளியினர், கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கிய நாள் முதலே (சுமார் 10 நாட்கள்) மிகக் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
விரத காலத்தில் அவர்கள் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு, தூய்மையுடனும், இறை சிந்தனையுடனும் இருப்பார்கள். மலை மீது ஏறும்போது காலணிகள் அணியாமல் (வெறுங்காலுடன்) 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொப்பரை, நெய் மற்றும் திரி ஆகியவற்றைச் சுமந்து செல்வார்கள்.
மகா தீபம் ஏற்றப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் தங்கியிருந்து, தீபம் அணையாமல் நெய் ஊற்றிப் பராமரிக்கும் வரையிலும் இவர்கள் விரதத்தைத் தொடர்வார்கள்.
மலை உச்சிக்கு கொண்டு செல்லும் முறை:
தீபத் திருவிழாவிற்கு முந்தைய நாள் (நேற்று) அதிகாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொப்பரை, நெய் மற்றும் திரிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
பூஜைக்குப் பிறகு, சுமார் 310 முதல் 320 கிலோ எடையுள்ள இந்தப் பஞ்சலோகக் கொப்பரையை நீண்ட மரக்கம்புகளைக் கட்டி, சுமார் 7 கிலோமீட்டர் கரடுமுரடான மலைப்பாதை வழியாக சுமார் 40 முதல் 65 பேர் கொண்ட கோவில் பணியாளர்கள், பர்வதராஜகுல சமூகத்தினர் மற்றும் அனுபவம் வாய்ந்த தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் சுழற்சி முறையில் தங்கள் தோள்களில் சுமந்தபடியே, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சிக்குக் கொண்டு செல்கின்றனர்.
செங்குத்தான பாறைகள் மற்றும் மிகவும் கடினமான மலைப்பாதை வழியாக, பணியாளர்கள் கயிறுகள் மற்றும் கம்புகள் உதவியுடன் "அண்ணாமலையானுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன் இதை உச்சிக்கு எடுத்துச் செல்கின்றனர்.
சுமார் 7 கிலோமீட்டர் தூரமுள்ள கரடுமுரடான மலைப்பாதை வழியாக, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சிக்கு இக்கொப்பரை பத்திரமாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது.