திருச்செந்தூர் ஆதி முருகன் கோவில்: சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் வியக்கவைக்கும் வரலாறு!

சூரபத்மனை வதம் செய்ய முருகப்பெருமான் வேல் வாங்கிய திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் அபூர்வ ரகசியங்கள்.
ஆதி முருகன் - Adhi Murugan Temple,
ஆதி முருகன் - Adhi Murugan Temple,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

திருச்செந்தூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் ஆன்மீக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலமாகும். இது "ஆதிமுருகன் கோவில்" என்றும் ஆய்வாளர்களாலும் ஆன்மீகப் பெரியோர்களாலும் பரவலாகக் குறிப்பிடப் படுகிறது.

கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு முன்பாகவே இத்தலம் தோன்றியதால் ஆய்வாளர்களாலும் பக்தர்களாலும் இத்தலம் ஆதி முருகன் கோவில் என்று போற்றப்படுகிறது. இக்கோவில் உள்ளூர் மக்களிடையே "மேலக்கோவில்" அல்லது "டவுன் கோவில்" என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோவிலின் மூலவராக சிவக்கொழுந்தீஸ்வரர் லிங்க வடிவிலும், அம்பாள் ஆனந்தவல்லி தனி சன்னதியிலும் வீற்றிருக்கின்றனர்.

தல வரலாறு:

சூரபத்மனை வதம் செய்வதற்காகப் புறப்படுவதற்கு முன்பாக முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானை இத்தலத்தில் வழிபட்டு ஆசி பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவர்களின் சேனாதிபதியாக பொறுப்பேற்று சூரனை வதம் செய்யப் புறப்பட்ட முருகனுக்கு வேலை ஆயுதமாகக் கொடுத்து சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆசீர்வதித்த திருத்தலம் இது.

அதன் காரணமாகவே இது ஆதி முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் கருவறையில் மூலவராக இருக்கும் சிவபெருமான் சுயம்பு லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள் புரிகின்றார். இக்கோவிலில் முருகனுக்குரிய வாகனமான இந்திர மயில்களும் முருகன் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ளன.

இக்கோவில் புகழ்பெற்ற கடற்கரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது மற்றும் முற்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்கோவிலின் மண்டபம் முழுவதும் அக்கால சிற்பங்களால் அழகுற மிளிர்கின்றன.

இதையும் படியுங்கள்:
பழனி முருகன் கோவில் முதலிடம் பிடிக்க இதுதான் காரணமா? திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புகள்!
ஆதி முருகன் - Adhi Murugan Temple,

திராவிட கட்டடக்கலை பாணியில் அமைந்த கோபுரம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் அழகுற காட்சி அளிக்கிறது. பிரதான முருகன் கோவிலில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் வேளையில், இந்த சிவ ஆலயம் மிகவும் ஆரவாரமற்ற, மன அமைதியைத் தரக்கூடிய ஒரு தியானக் கூடமாக திகழ்கிறது.

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை தற்போதைய கடற்கரைக் கோயிலில் இருக்கும் முருகன் விக்கிரகம் இந்த சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தான் இருந்தது என்றும், பிற்காலத்தில் தான் அது கடற்கரைக்கு மாற்றப்பட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆதி முருகன் - Adhi Murugan Temple,
ஆதி முருகன் - Adhi Murugan Temple,

கோவில் கட்டப்பட்ட சுவாரசியமான கதை மற்றும் பெயர்க் காரணம்:

இக்கோவில் உருவானதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான உள்ளூர் வரலாறு உள்ளது. சிவக்கொழுந்து செட்டியார் என்ற வணிகர் தான் சேமித்து வைத்திருந்த உளுந்து மூட்டைகள் அனைத்தும் இறைவனின் அருளால் தங்கமாக மாறியதைக் கண்டு, அதற்கு நன்றிக்கடனாக இந்த ஆலயத்தைக் கட்டினார் என்ற சுவாரசியமான கதை உண்டு.

இதனாலேயே இங்குள்ள ஈசனுக்கு சிவக்கொழுந்தீஸ்வரர் என்ற திருநாமம் அமைந்தது. திருச்செந்தூர் செல்பவர்கள் கடற்கரை முருகனை தரிசிப்பதோடு, ஊரின் மத்தியில் இருக்கும் இந்த ஆதித் தலத்தையும் தரிசிப்பது சிறந்த பலனைத் தரும்.

பச்சை சாத்தி உலா:

ஆண்டுதோறும் ஆவணி மூலம் மற்றும் மாசி மகம் ஆகிய பெருவிழா நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து ஆறுமுகப்பெருமான் இக்கோவிலுக்கு எழுந்தருளுவார். இங்கு அவருக்கு 48 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகத்திற்குப் பிறகு ஆறுமுகனார் பச்சை சாத்தி(பச்சை நிற ஆடைகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு), பச்சை சப்பரத்தில் மகாவிஷ்ணு கோலத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

திருச்செந்தூர் முருகன் கோவில் மேற்கு நுழைவு வாயிலுக்கு எதிரே சன்னிதித் தெருவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிப்பதற்கு முன்பு இந்த அமைதியான சிவத்தலத்தையும் தவறாமல் தரிசிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏன் 2 மூலவர்கள், 4 உற்சவர்கள்?
ஆதி முருகன் - Adhi Murugan Temple,

முக்கிய திருவிழாக்கள்:

பிரதோஷம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகியவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

தரிசன நேரம்:

காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.