பழனி முருகன் கோவில் முதலிடம் பிடிக்க இதுதான் காரணமா? திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புகள்!

தமிழகத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மருத்துவ ரகசியங்கள் மற்றும் வரலாற்று தகவல்கள்.
பழனி முருகன் - Palani Murugan Temple
பழனி முருகன் - Palani Murugan Temple
கோவீ.ராஜேந்திரன்

கோவீ.ராஜேந்திரன், அடிப்படையில் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியர். தமிழகத்தின் முன்னணி இதழ்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், பொது அறிவு சார்ந்த 12 புத்தகங்களும் எழுதியுள்ளார். கல்கி ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி, வித்தியாசமான தகவல்களை வழங்கி வருகிறார்.

Updated on: 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அதிக வருமானம் ஈட்டும் முதல், 10 முன்னணி கோவில்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், 233.50 கோடி ரூபாய் வருவாயுடன், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள முதல், 10 கோவில் களின் ஒட்டு மொத்த ஆண்டு வருமானம், 941.99 கோடி ரூபாயாகும்.

தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக திகழ்கிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

அதிலும், விசேஷ நாட்கள் மற்றும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா உள்ளிட்ட திருவிழாக் காலங்கள் மற்றும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் வருகை என பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கணக்கு வழக்கின்படி, கோயிலின் அனைத்துச் சேவைகளின் மூலமும் வரும் வருமானம் 'பசலி ஆண்டு' (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

பழனி ஆண்டவரை பற்றிய ஆச்சரிய தகவல்கள்;

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடும், ஆண்டி கோலத்திலும், ராஜ கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள் பல அவற்றுள் சில...

* தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி) மட்டும்தான் உபயோகிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகப் படுத்தப்படுகிறது.

இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும்தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

பழனி முருகன் - Palani Murugan Temple
பழனி முருகன் - Palani Murugan Temple

ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள். அது மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுகிறது.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும், நவபாஷாணத்தில் சிலை செய்த இந்த கோவில் இன்றளவும் பிரசித்தி பெற்றிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமைதான்.

தண்டாயுதபாணி சுவாமி கோவிலை பக்தர்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம் அங்குள்ள முருகப்பெருமானின் சிலையாகும். நவபாஷாணம் எனப்படும் அரிய கலவையைப் பயன்படுத்தி சித்தர் போகர் என்பவரால் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது என்று மரபு கூறுகிறது. அதில் ஒன்பது சக்திவாய்ந்த மருத்துவக் கனிமங்கள் அடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கோயம்புத்தூர் புலியகுளம் முந்தி விநாயகர்: ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கலை அதிசயம்!
பழனி முருகன் - Palani Murugan Temple

இதன் காரணமாக, கோயிலின் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் பிரசாதத்திற்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாகப் பல பக்தர்கள் நம்புகிறார்கள். பழனி முருகன் கோவிலில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் வேறு எங்கும் கிடைப்பதை விட வித்தியாசமான சுவையுடையது. 2019-2020-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு (GI Tag) பெற்ற முதல் கோயில் பிரசாதம் என்ற பெருமையை இது பெற்றது. பஞ்சமிர்த சுவைக்கு காரணமாக இருக்கும் வாழைப்பழத்திற்கு மட்டுமே ஒரு கோடிக்கு டெண்டர் விடுகிறது கோயில் நிர்வாகம்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும். இந்த சிலையை போகர் செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆயிற்று.

அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின்தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்ததாகவும், இதற்காக 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து, 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர் என்கிறது வரலாறு.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது . அருணகிரிநாதர் போலவே, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை பழநி மலையில் இருந்து உருண்டு விழும் போது இத்தல முருகன் பிடித்ததாக வரலாறு.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: 31-ல் கொடியேற்றம், 9-ல் தேரோட்டம் - முழு விவரம்!
பழனி முருகன் - Palani Murugan Temple

தைப்பூச திருவிழா நாட்களில் 10 நாட்கள் 10 விதமான அலங்காரங்கள் கொண்ட வாகனங்களில் முருகன் வலம் வருவது இங்கு மட்டுமே. அதேபோல கடம்ப மலருக்கு என சித்திரை மாதம் விழா எடுப்பதும் இங்கு மட்டுமே.

தமிழ்நாட்டில் முருகன் கோவில்களில் முதன்முதலில் தங்கத்தேர் அமைக்கப்பட்டது பழனி மலைக்கோவிலில் தான். தமிழகத்தில் பக்தர்களின் வேண்டுதலுக்காகவும், வழிபாட்டிற்காகவும் தினசரி அல்லது அதிக அளவில் தங்கத் தேர் உலா வரும் முதன்மையான கோயில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில்தான்.