

திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனாலையே இத்தலத்துக்கு "வீரபாகு பட்டினம்" என்று ஒரு பெயர் உண்டு. தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. சிவபெருமானின் சக்தியிலிருந்து தோன்றிய 9 நவவீரர்களில் முதன்மையானவர் மற்றும் முருகப்பெருமானின் தளபதி இவர்.
சூரபத்மனுடன் போர் செய்வதற்கு முன்பு சிறைப்பட்டுள்ள தேவர்களை விடுவிக்க முருகப்பெருமானின் தூதுவராக மகேந்திரபுரிக்குச் சென்றவர் வீரபாகு தேவர்.
இரண்டு மூலவர் சன்னதிகள்:
திருச்செந்தூரில் இரண்டு மூலவர் சன்னதிகள் உள்ளன. ஒன்று பாலசுப்பிரமணியசுவாமி, மற்றொன்று சண்முகர். பாலசுப்பிரமணியசுவாமி தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்குப் பின்னால் சிவலிங்கம் உள்ளதால், இங்கு சிவனுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பு சிறப்பிக்கப்படுகிறது.
மற்றொரு மூலவரான சண்முகர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் கடலைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கோ சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
நான்கு உற்சவ மூர்த்திகள்:
பொதுவாக கோவில்களில் ஒரு மூலவருக்கு ஒரு உற்சவர் மட்டுமே இருப்பார். ஆனால் இங்கு நான்கு உற்சவர்களுக்கும் தனித்தனி சன்னதிகளும் சிறப்பு விழாக்களும் இருப்பது தனிச்சிறப்பாகும். ஷண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாயுகந்த பெருமான் என 4 உற்சவர்கள் காணப்படுகின்றனர்.
ஆறுமுக நயினார் என்று அழைக்கப்படும் சண்முகர் ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். மாசி மற்றும் ஆவணித் திருவிழாக்களில் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி அலங்காரங்களில் வீதியுலா வருவார்.
மாப்பிள்ளை சுவாமி:
குமரவிடங்கரை பக்தர்கள் அன்புடன் 'மாப்பிள்ளை சுவாமி' என்று அழைக்கிறார்கள். திருக்கல்யாண உற்சவங்களில் தெய்வானையை மணம் முடிக்கும் கோலத்தில் எழுந்தருளும் உற்சவர் இவர். அலைவாயுகந்த பெருமான் நவராத்திரி விழா காலங்களில் 9 நாட்களும் அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் உற்சவம் மூர்த்தி இவர். கந்த சஷ்டி விழாவின் பிரதான நாயகர் இந்த ஜெயந்திநாதர்தான். சூரபத்மனை சம்ஹாரம் செய்து வெற்றிவாகை சூடியதால் இவருக்கு ஜெயந்திநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.
சண்முக விலாசம் மண்டபம்:
திருச்செந்தூர் முருகன் கோவிலின் பிரதான வாயிலுக்கு முன்பாக அமைந்துள்ள பிரம்மாண்டமான கல் மண்டபம் சண்முக விலாசம் எனும் மண்டபம். இந்த மண்டபம் 120 அடி நீளமும், 86 அடி அகலமும் கொண்டது. சிக்கலான வேலைப் பாடுகளுடன் கூடிய 124 கல் தூண்கள் இதைத் தாங்குகின்றன. மாசி மற்றும் ஆவணித் திருவிழாக்களின் பொழுது சண்முகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இடமாகத் திகழ்கிறது. அத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூடும் இடமாகவும், பல்வேறு சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் நடைபெறும் முக்கிய பகுதியாகவும் இது விளங்குகிறது.
கோவில் கோபுரம்:
பொதுவாக கோவில்களில் கிழக்கு திசையில் ராஜகோபுரம் இருக்கும். ஆனால் திருச்செந்தூர் கோவிலின் கிழக்கே கடல் அமைந்துள்ளதால் மூலவருக்கு மேற்கு திசையில் பிரம்மாண்டமான ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிய மூர்த்தி சுவாமிகளால் கட்டப்பட்டது. கோவிலின் கோபுரம் 9 அடுக்குகளைக் கொண்டு 157 அடி உயரம் கொண்டது.
திருச்சீரலைவாய்:
இத்திருக்கோவில் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்றும், திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படுகிறது.
நைவேத்தியங்கள்:
மூலவர் தவக்கோலத்தில் இருப்பதால் இவருக்குரிய நிவேதனத்தில் காரம், புளி சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்கு உரிய பிரசாதங்களில் புளி, காரம் உண்டு. உச்சிக்கால பூஜைக்கு முன்பு இலை போட்டு சோறு, மோர் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டு தீர்த்தம் தெளித்த பின்பே மூலவருக்கு பூஜைகள் தொடங்குவார்கள். இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர் ஆகியவை நிவேதனம் செய்யப்படுகிறது.
கங்கை பூஜை:
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் சென்று கடலில் கரைக்கும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.
பிரம்மாண்ட மணி:
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனால் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மணி இது கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்து மணி அடித்த பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. 250 ஆண்டுகள் பழமையான 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான மணி இது. ராஜகோபுரம் ஒன்பதாம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் தங்கத்தேர்:
தங்கத்தேரில் அறுங்கோண வடிவில் அறுபடைவீட்டு முருகன் சிலைகள் உள்ளன.