

ஓண நாயகனான திருக்கோவில் உலகளந்த பெருமாள் விண்ணையும் மண்ணையும் அளந்தவர். ஓணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது முதலில் மகாபலி சக்கரவர்த்தியும், அவருக்கு அருள்புரிந்த மகாவிஷ்ணுவின் வாமன அவதாரமும்தான். அந்த வாமனரே விஸ்வரூபம் எடுத்து விண்ணையும் மண்ணையும் அளந்த திருவிக்கிரம திருக்கோலத்தில் காட்சி தரும் மகத்தான 108 திவ்யதேசங்களில் ஒன்றுதான் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில். ஆண்டாள் திருப்பாவையில், "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்று போற்றப்படும் பேரருளாளன் இவர்.
மாறுபட்ட சங்கு சக்கர அமைப்பு:
சங்கும் சக்கரமும் மாறி இருக்கும் அபூர்வ கோலத்தில் காட்சி தரும் பெருமாள் இவர். பொதுவாக மகாவிஷ்ணு தன்னுடைய வலக்கரத்தில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் ஏந்தி இருப்பார். ஆனால் திருகோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாளின் வலது கரத்தில் சங்கும் இடது கரத்தில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.
மூலவர் திருவிக்கிரமர்
தாயார் பூங்கோவல் நாச்சியார்
தலவிருட்சம் புன்னை மரம்
தல தீர்த்தங்கள் பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம்
விமானம் ஸ்ரீசக்ர விமானம்
11 அடுக்குகள் கொண்ட 192 அடி உயர ராஜகோபுரம், 2000 ஆண்டுகள் பழமையான கோவில்
விண்ணை அளந்த திருவடி
ஆலயத்தின் சிறப்புகள்:
108 திவ்யதேசங்களில் உயரமான மரத்திருமேனி கொண்டவர். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோவில். ராஜகோபுரம் 11 நிலைகளைக் கொண்டு 192 அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகிறது. பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று.
முதலாழ்வார்கள் சந்திப்பு தலம்:
வைணவ மரபில் முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வர், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒரு மழைக்கால இரவில் இக்கோவிலின் குறுகிய இடைகழியில் (தாழ்வாரம்) ஒன்று கூடினர். அங்கு பெருமாள் அவர்கள் நடுவே நெருக்கியபடி தோன்றி ஞான விளக்கேற்றி முதன்முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் திருவந்தாதிகளைப் பாட வைத்த திருத்தலம் இது.
பொய்கையாழ்வார் பூதத்தாழ்வர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனிகளும் இப்பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவில் சோழர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களால் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணி செய்து விரிவுபடுத்தப்பட்டது.
பிரம்மாண்டமான மூலவர் திருவுருவம்:
கருவறையில் மூலவர் திரிவிக்கிரமப் பெருமாள் தன் இடது காலை வான் நோக்கி தூக்கி உலகை அளந்த கோலத்தில் பிரம்மாண்டமாக நின்ற நிலையில் காட்சி தருகிறார். இவர் 35 அடிக்கும் மேல் உயரமுடையவர். தாரு மரத்தாலானவர். இவ்வளவு உயரமான பெருமாள் தமிழ்நாட்டுக் கோயில்களில் வேறு எங்கும் இல்லை. சாளக்கிராம கல்லால் ஆன கிருஷ்ண பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார்.
ஓண நாயகனான உலகளந்த பெருமானை நாம் ஏன் தரிசிக்க வேண்டும் தெரியுமா?
ஓணம் என்பது விழா மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கைப் பாடம். மகாபலி மிகச்சிறந்த தர்மவான். ஆனால் அகந்தை கொண்டதன் காரணமாக இறைவன் வாமனராக வந்து அவரது அகந்தையை அகற்றினார். உயர்ந்தாலும் பணிவாக இருக்கவேண்டும் என்றும், செல்வம் வந்தாலும் தர்மத்தை மறக்காமல் இருப்பதும், புகழ் சேர்ந்தாலும் அகந்தை கொள்ளாமல் இருக்கவேண்டும் என்ற தத்துவத்தையும், நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறையருளால் கிடைத்தவை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 42வது தலமாகும். இத்தலத்தில் பெருமாள் ஒரு காலில் நின்று, மறு காலை வானத்தை நோக்கி உயர்த்தி உலகளந்த கோலத்தில் காட்சி தருகிறார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்து அந்தாதி பாடிய வரலாற்று சிறப்புமிக்க தலம் இது.
பஞ்சகிருஷ்ணன் க்ஷேத்திரம்:
கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடைய 5 முக்கிய புண்ணியத் தலங்களில் இது முதலாவது தலமாகப் போற்றப்படுகிறது. இங்குள்ள கோபாலன் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாள் சன்னதிக்கு அருகிலேயே விஷ்ணு துர்க்கை எனும் பெயரில் சுயம்புவாக விஷ்ணு துர்க்கை அமைந்து அருள்பாலிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
முக்கிய திருவிழாக்கள்:
தமிழ் மாதம் பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) நடைபெறும் 15 நாட்கள் பிரம்மோற்சவம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வாமன ஜெயந்தியும், வைகுண்ட ஏகாதசியும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 5.30 மணி முதல் 12:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.