

இன்று (நவம்பர் 18ம் தேதி) மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். ஏனெனில், இன்று அங்காரக சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று சிவபெருமானை முறைப்படி வழிபடுபவர்களுக்கு அவர்களது தலையெழுத்தையே மாற்றும் சக்தி உண்டு என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதியை மகா சிவராத்திரியாக நாம் கொண்டாடுகிறோம். இது தவிர, மாதந்தோறும் வரும் சிவராத்திரியிலும் பலர் விரதம் இருந்து, இரவில் கண் விழித்து சிவனை வழிபடுவது உண்டு. பெரும்பாலும் பிரதோஷத்திற்கு அடுத்த நாள் மாத சிவராத்திரி வரும். ஒருசில மாதங்களில் பிரதோஷத்துடன் சேர்ந்தே மாத சிவராத்திரி விரதம் வருவதும் உண்டு.
மகா சிவராத்திரி தினத்தைத்தான் பெரும்பாலானோர் கடைபிடிப்பது வழக்கம். ஆனால், மாத சிவராத்திரியின் மகிமைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. பொதுவாக, மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் 14வது நாளில் தேய்பிறை (கிருஷ்ண பக்ஷ) பாதியில் வழிபடப்படுகிறது.
அதாவது, ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் சதுர்த்தசி திதி இரவே மாத சிவராத்திரியாகும். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வரும் சிவராத்திரியை அங்காரக சிவராத்திரி என்று அழைக்கின்றனர்.
‘அங்காரக சிவராத்திரி’ என்பது சிவபெருமானையும் அங்காரகரையும் (செவ்வாய் கிரகம்) சாந்தப்படுத்தும் வழிபாட்டைக் குறிக்கிறது. அந்த வகையில், இன்று அங்காரக சிவராத்திரி என்பதால் இன்றைய தினம் விரதம் இருந்து சிவனை வழிபடுவது, அங்காரக (செவ்வாய்) தோஷத்தின் தாக்கத்தை குறைக்கும் என்றும் வாழ்வில் தைரியத்தையும், வெற்றியையும் தரும் என்றும் நம்பப்படுகிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்களின் திருமணத்தடை நீங்கும்.
இன்று சிவன் கோயிலுக்குச் சென்று பால் மற்றும் வில்வ இலை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை, நூற்றி எட்டு முறை ஜபிக்கலாம். அதேசமயம், நீங்கள் பகல் மற்றும் இரவு முழுவதும் ‘ஓம் நம சிவாய’ என்ற சிவ மந்திரத்தை உச்சரித்தால், அனைத்து உலக ஆசைகளிலிருந்தும் உங்களை விலக்கி வைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. சிவ தாண்டவ ஸ்தோத்திரம் மற்றும் சிவ சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
ஸ்லோகம், மந்திரம் எதுவும் தெரியாது என்பவர்கள் கூட இன்றைய நாள் முழுவதும் ‘சிவ சிவ’ என்று சொன்னால் போதும், துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.
அங்காரக சிவராத்திரியான இன்று கடைபிடிக்க வேண்டியவை...
* இன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
* இன்று அசைவம் சாப்பிடக் கூடாது, மது, புகை, போதை வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது.
* யாரையும் திட்டவோ, அடிக்கவோ கூடாது. அதேபோல், யாரையும் கோபமான, தவறான வார்த்தைகளால் பேசக் கூடாது.
* உபவாசம் இருக்காதவர்கள் இன்றைய இரவு பால், பழங்களை தவிர வேறு எந்தப் பொருளையும் உண்ணக் கூடாது.
* மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட மறக்கக் கூடாது.
* இன்றைய தினம் உங்களால் முடிந்த மூன்று பேருக்கு உணவை தானமாக வழங்க வேண்டும். முடியாதவர்கள் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.
* சிவராத்திரியான இன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.