பாறைகளில் ஒளிந்திருக்கும் சப்தஸ்வரம்: தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலின் ஆச்சரியமூட்டும் இசை ரகசியம்!

கல்லில் சப்தஸ்வரம் மீட்டிய சோழர் அதிசயம்! தாராசுரம் கோயிலின் இசைப் படிக்கட்டு ரகசியம்!
தாராசுரம் கோயில் - Darasuram Temple
தாராசுரம் கோயில் - Darasuram Temple
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

சோழர்களின் கட்டடக்கலை இன்றளவும் சிற்ப வேலைப்பாடுகளுக்காகவும் நுணுக்கமான கட்டிடக் கலைக்காகவும் உலகப்புகழ் பெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் மட்டுமல்லாது, தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில், சோழர்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்க கோயில்களை கட்டி தங்களது பெயரினை நிலைநாட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலை போலவே இந்த தாராசுரம் கோயில் யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ராஜ ராஜ சோழன் கட்டிய இந்த கோயில், அவரது தனித்துவமான ரசனையை எதிர்கால சந்ததிகளுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்தக் கோயில் சோழர்களின் தனித்துவமான சிற்பக் கலைகளாலும் நுணுக்கமான வேலைப்பாடுகளாலும் உலக புகழ் பெற்று விளங்குகிறது.

இந்தக் கோயிலின் விமானங்கள் மற்றும் கோபுரங்கள் சோழர்களின் மற்றும் இராஜராஜனின் முன்னோர்கள் பின்பற்றிய பாணியை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததுமே இந்த கோவில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்டது என்ற எளிய புரிதலை வழங்கிவிடும்.

மன்னர் இரண்டாம் ராஜராஜ சோழன் கிபி.1166 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயிலை கட்டினார். இந்தக் கோயில் பார்ப்பதற்கு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தை போன்ற வடிவத்தில் இருந்தாலும், ஒவ்வொரு கட்டிடத்திலும் தங்களது தனித்துவ கலைத்திறனை காட்டியுள்ளனர். அதேவேளை பிரம்மாண்டத்திற்கு குறையில்லாத வகையிலும் , சிற்பக் கலைக்கு அதிகளவு முக்கியத்துவத்தை கொடுத்தும் உள்ளனர்.

ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள தேர் மண்டபம் காண்பவரின் கண்களை விரியவைக்கும் வகையில் சிற்பங்கள் நிறைந்தது. இதன் படிக்கட்டுகள் இருபுறமும் அழகிய யானை சிற்பத்துடன் கூடிய கைப்பிடி தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே அழகிய குதிரை சிற்பமும் காணப்படுகிறது. இவற்றின் நடுவே உள்ள தேர் சக்கரம் இந்த காட்சிகளை மிகவும் அழகாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
தாராசுரம் கோயில் - Darasuram Temple

ஐராவதேஸ்வரர் கோயிலின் இன்னொரு சிறப்பாக இங்கு உள்ள தூண்களில் சிவபுராண கதைகள் அழகுற சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த தேர் மண்டபம் ஒரிசாவின் புகழ் பெற்ற சூரிய கோயிலான கோனார்க் கோயிலுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வரலாற்றுப்படி தற்போது உள்ள கோயிலின் அளவைவிட அது பன்மடங்கு பெரியதாகவும் பிரமாண்டமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. முன்பு இந்த கோவிலில் ஏழு பிரதான சன்னதிகள் இருந்தாலும், தற்போது அதில் ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது.

தாராசுரம் கோயில் - Darasuram Temple
தாராசுரம் கோயில் - Darasuram TempleFacebook

மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இந்த நந்தி மண்டபம் அருகில் வழக்கமாக காணப்படும் பலிபீட அமைப்பு அருகே புகழ்மிக்க பாடும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த இசைப் படிக்கட்டுகளுக்கு பாதுகாப்பாக சிறிய கம்பிகளால் ஆன தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் அல்லது பார்வையாளர்களால், அவர்களின் ஆர்வம் மிகுதியினால் இசை படிக்கட்டுகளுக்கு எந்த ஊறும் நேர்ந்திடக் கூடாது என்று அரண் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த படிக்கட்டில் சப்தஸ்வரங்களை குறிக்கும் வகையில் ஏழு படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொரு விதமான இசை ஒலிகளை எழுப்ப முடியும். இந்த படிகளை பயன்படுத்தும்போது அழகான இசை ஒலிகள் எழுகின்றன. இந்த படிகள் இந்த கோயிலின் முக்கியமான சிறப்பு அம்சங்களில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது.

இசை படிக்கட்டுகள் சாதாரண பாறைகளில் இருந்து உருவாக்கப்படுவதில்லை. இதற்கென்று பிரத்யேகமான பாறைகளை கண்டறிவதற்கு திறன் மிகுந்த கட்டிட கலைஞர்கள் அந்தக் காலத்தில் இருந்துள்ளனர். அவர்கள் ஏராளமான பாறைகளை சோதனை செய்து, தங்களது நீண்ட கால தேடலில் இசை ஒலிகளை எழுப்பும் அரிய வகை பாறைகளை கண்டறிந்து கோயில் கட்டிடத்தில் சேர்த்துள்ளனர்.

இது போன்ற இசை தூண்கள் ஹம்பி கோயிலில் இருந்துள்ளது. அந்த தூண்களை உடைத்து பிரிட்டிஷ்காரர்கள் ஆராய்ந்தும் , இசை ஒலி எழும்பும் அறிவியல் காரணத்தை கண்டறியும் அளவிற்கு அவர்களுக்கு திறன் இல்லை. ஆயினும் , சோழர் காலத்தில் சிற்பக் கலைஞர்களுக்கு இசை எழுப்பும் பாறைகளை கண்டறியும் திறன் இருந்தது.

ஐராவதேஸ்வரர் கோயிலின் அழகிய சிற்பங்களும் பிரம்மாண்டமான கட்டிடக்கலைகளும் அந்த கோயிலுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்று தந்தது. 2004 ஆம் ஆண்டு ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலையும் பட்டியலில் சேர்த்தது.

இந்தக் கோயிலுக்கு செல்ல தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் கும்பகோணம் செல்ல ரயில் மற்றும் பேருந்து வசதி உண்டு. திருச்சி விமான நிலையத்திலிருந்து கூட கும்பகோணம் செல்ல பேருந்து வசதி உள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம் செல்ல பஸ், கார் , ஆட்டோ வசதி உள்ளது.

இதையும் படியுங்கள்:
குடுமியான்மலை இசைக் கல்வெட்டு: 1300 ஆண்டு பழமையான பல்லவர் கால இசை அதிசயம்!
தாராசுரம் கோயில் - Darasuram Temple