சூரியக் கதிர்கள் வணங்கும் உப்பூர் வெயிலுகந்த விநாயகர்: அதிசயங்கள் மற்றும் வழிபாட்டு சிறப்புகள்!

சூரியனின் ஒளிபடும் விந்தை மற்றும் ராமபிரான் வழிபட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட புகழ்பெற்ற ஆலயம்!
வெயிலுகந்த விநாயகர் - Uppur Vinayagar Temple,
வெயிலுகந்த விநாயகர் - Uppur Vinayagar Temple,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ள வெயிலுகந்த விநாயகர் கோவில் சூரிய ஒளி தன் மீது படும் விசேஷ சிறப்பைக் கொண்ட புகழ் பெற்ற பழமையான கோயிலாகும்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள உப்பூர் சத்திரம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சூரியபுரி, தவசித்திபுரி, பாவவிமோசனபுரம், வன்னி மந்தாரபுரம் என இத்தலத்திற்கு பல வரலாற்றுப் பெயர்கள் உண்டு. சூரியன் இங்கு வழிபட்டதால் சூரியபுரி என்றும், சூரியனின் தவம் இங்கு பலித்ததால் தவசித்தபுரி என்றும், சூரியனின் பாவங்கள் இங்கு நீங்கியதால் பாவவிமோசனபுரம் என்றும், வன்னி மற்றும் மந்தார மரங்களின் காடாக விளங்கியதால் வன்னிமந்தார வனம் என்றும் இத்தலத்திற்கு பல பெயர்கள் உண்டு.

உப்பூர் புராணம் என்ற தலபுராண வரலாற்று நூலில் இத்தலத்துக்கு ஆதியில் லவணபுரம் என்று பெயர் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. லவணம் என்பது வடமொழில் உப்பை குறிப்பதாகும். இரண்டு யுகங்களுக்கு முன்னர் இலங்கை வேந்தன் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீதா பிராட்டியை மீட்டு வருவதற்கு, ராமபிரான் சேதுக்கரை செல்லும் வழியில் இத்தலத்து விநாயகரை வழிபட்டதாக கூறப்படுகிறது.

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோவில் விமானம் வேசர வடிவில் உள்ளது. இங்கு காசி விஸ்வநாதர், விசாலாட்சி, தக்ஷிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், காலபைரவர், சனீஸ்வரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

சூரிய பூஜை அதிசயம்:

தட்சனின் யாகத்தால் சாபம் பெற்ற சூரிய பகவான், இங்கு விநாயகரை நோக்கி தவம் செய்து தன் சாபம் நீங்கப் பெற்றார். சூரியனின் ஒளிக்கதிர்கள் ஜனவரி-பிப்ரவரி முதல் ஜூன்-ஜூலை வரையிலான 6 மாத காலமான உத்தராயண காலத்தில் விநாயகரின் வடபுறத்திலும், ஜூலை- ஆகஸ்ட் முதல் டிசம்பர்-ஜனவரி வரையிலான 6 மாத காலமான தட்சிணாயன காலத்தில் விநாயகரின் தென்புறத்திலும் விழும் இயற்கை விந்தை இக்கோவிலின் முக்கிய அம்சமாகும்.

வெயிலுகந்த விநாயகர் - Uppur Vinayagar Temple,
வெயிலுகந்த விநாயகர் - Uppur Vinayagar Temple,

பெயர்க் காரணம்:

சூரியன் தன் கதிர்களால் விநாயகரை வழிபட்டு அருள் பெற்றதால் இவ்விநாயகர் 'வெயிலுகந்த விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். ராமபிரான் லங்கா செல்வதற்கு முன்பு இங்கு விநாயகரை வழிபட்டுச் சென்றதாகவும் நம்பப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் காலத்திற்குப் பிறகு 1905 ஆம் ஆண்டில் பாஸ்கர சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

திருக்கல்யாணம்:

ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். பத்து நாட்களும் சுவாமி புறப்பாடு மற்றும் 8ஆம் நாளில் சித்தி புத்தி விநாயகப் பெருமான் திருக்கல்யாண வைபவமும், 9ஆம் நாளில் திருத்தேரோட்டமும் நடைபெறும். 10ஆம் நாளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடலில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும்.

பொதுவாக விநாயகர் பிரம்மச்சாரியாகக் கருதப்படும் நிலையில், இங்குள்ள பிரகாரத்தில் விநாயகர் தனது தேவியரான சித்தி மற்றும் புத்தியுடன் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் இக்கோவிலில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சதுர்த்தி விழா துவங்கும். தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி உலா நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்: அபூர்வ சம்மோகன கிருஷ்ணர் ரகசியம்!
வெயிலுகந்த விநாயகர் - Uppur Vinayagar Temple,

அத்துடன் சித்தி, புத்தி தேவியர்களுடன் விநாயகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். வடமாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில் இங்கும் நடப்பது சிறப்பாக சொல்லப்படுகிறது.

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் விநாயகப் பெருமானிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

விழாக்கள்:

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி விழாவை ஒட்டி கொடியேற்றம் மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

கோவில் காலை 6:00 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எங்குள்ளது?

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகாவில் உள்ள தொண்டியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், சேது கடற்கரை சாலையில் உப்பூர் சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஈரோட்டில் அமர்ந்த கோலத்தில் அருளும் லட்சுமி நாராயணர்: பிரிந்த தம்பதியரை சேர்க்கும் அதிசயம்!
வெயிலுகந்த விநாயகர் - Uppur Vinayagar Temple,
logo
Kalki Online
kalkionline.com