
புரட்டாசி மாதம் வந்து விட்டாலே, அனைவரும் பெருமாளை வழிபட்டு விரதம் அனுசரித்து, மாவிளக்கு ஏற்றி, தளிகை படைத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம், துன்பங்கள் நீங்கி வளமும், செழிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்பதி ஏழுமலையானை மனதார நினைத்து மந்திரங்கள் சொல்வதும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதும் பெருமாளின் அருளைப் பெற உதவும்.
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு: சூரிய பகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கக்கூடிய மாதம் புரட்டாசி. ஆதலால், இந்த மாதம் கன்னி மாதமென்றும் அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதுவும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவையாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் பெருமாளின் நாமாவளிகளைப் பாடி, துளசி மாலை அணிவித்து மனதார பெருமாளை வேண்டுகையில், வளமான வாழ்வு மற்றும் குறையாத செல்வம் கிடைக்கும். வைஷ்ணவர்கள் மட்டுமல்லாது, பிறரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் கடைப்பிடிக்கின்றனர்.
மாதந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது பலனைத் தரும். வீடுகளில் தளிகை செய்து மாவிளக்கு போட்டு, பெருமாளை வணங்குவது மரபாக உள்ளது. புரட்டாசி மாதத்தில், இதர தெய்வங்களும் ஒருங்கே சங்கமிப்பதால், பெருமாள் அருளுடன் மற்றைய தெய்வீக அருள் கடாட்சமும் பரிபூரணமாகக் கிடைக்கின்றன. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் குறித்த கதை என்ன?
திருப்பதி வேங்கடாசலபதி கோயில் பகுதியில், பீமன் என்ற குயவர் வசித்து வந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோயிலுக்குப் போக நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று தெரியாது. ‘பெருமாளே, நீயே எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.
ஒரு சமயம் அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ‘பெருமாளைப் பார்க்க கோயிலுக்குப் போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?’ என்று யோசித்தார். படபடவென களி மண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, வேலை செய்து முடிந்ததும் மீந்து விட்ட மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.
அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒரு நாள் இப்படி அணிவித்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.
அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்தக் குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டு மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுந்தப் பதவியை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரை கௌரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாத திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட முக்கியமான தினம். அதேநேரம், புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன் காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது மரபாகி விட்டது.
மாவிளக்கு வழிபாடு: கொஞ்சம் பச்சரிசி மாவுடன் வெல்லம், ஏலப்பொடி சேர்த்து, சிறிதளவு நெய் விட்டு பிசைந்து மாவாக தயாரிக்க வேண்டும். சுத்தமான வாழை இலை ஒன்றை எடுத்து, வெல்லம் கலந்த பச்சரிசி மாவை விளக்கு வடிவில் அமைக்க வேண்டும். மாவின் நடுவே குழியமைத்து நெய்விட்டு, பஞ்சுத்திரி போட்டு தீபமேற்ற வேண்டும். மாவிளக்கைச் சுற்றி பிரதட்சணமாக வந்து, பிரார்த்தனை செய்து மனதார வேண்டிக்கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும்.
நெய் முழுவதும் உருகி மாவில் கலந்த பின், அதை பிரசாதமாக பிறருக்கு அளிக்க வேண்டும். மாவிளக்கு வழிபாட்டை வீடு மற்றும் கோயில்களிலும் செய்யலாம். சிறப்புகள் வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமையில் மாவிளக்கு போட்டு பெருமாளை வணங்கி வழிபடுவோம்.