

நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் (வேளாங்கண்ணி பேராலயம்) அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி (இன்று) முதல் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கத்தோலிக்க திருத்தலமாகும் (Basilica of Our Lady of Good Health). இவ்வாலயம் 'கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
வங்கக் கடலோரம் இயற்கை எழில் சூழ்ந்த சூழலில் அமைந்துள்ள இவ்வாலயம் கோதிக் கட்டிடக்கலை நேர்த்தியுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.
16-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று அருள் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களை (இடைச்சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலம் பெற்றது போன்ற நிகழ்வுகள்) அடிப்படையாகக் கொண்டு இத்தலம் உருவானது.
சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் வந்து வழிபடும் ஆன்மிகத் தலமாகவும், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சா்வ மதத்தினரும் வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது.
இந்த திருத்தலத்திற்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் சார்ந்த லட்சகணக்கான மக்கள் திரண்டு வந்து, அன்னையின் அன்பைப் பருகி செல்கிறார்கள்.
அதன்படி, இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
பொதுவாக இந்த பேராலயம் நாள்தோறும் பக்தர்கள் வழிபாட்டிற்காக அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு முடப்படுவது வழக்கம்.
இதனால் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து நள்ளிரவு மற்றும் ஒற்றைப்படை நேரங்களில் வரும் பக்தர்கள், பயணிகள் கோவிலுக்குள் செல்ல முடியாமல், புனித ஆரோக்கிய மாதாவை வழிபட முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். எனவே வேளாங்கண்ணி பேராலாத்தில் மாதாவை வழிபட ஏதுவாக 24 மணி நேரமும் பேராலயத்தை திறந்து வைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சனிக்கிழமை (அக்டோபர் 3) முதல் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் முதன்மைக் கோவில் (Main Shrine) மற்றும் பிரதான பீடம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் (Day and Night) பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்திருக்கும் என்று தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் (பேராலய நிர்வாகம்) அறிவித்துள்ளார்.
வெளியூர்களில் இருந்து நள்ளிரவு மற்றும் ஒற்றைப்படை நேரங்களில் வரும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் வெளியே காத்திருக்கும் சிரமத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாவின் அருளைப்பெற வரும் பக்தர்கள் எந்த நேரத்திலும் பேராலயத்திற்கு வந்து அன்னையை வழிபட்டு, பிரார்த்தனை செய்யும் வகையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேராலயத்தின் இந்த அறிவிப்பு பக்தர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேராலயத்தின் இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தொடர்ந்து தெரிவித்து வருவதாக பேராலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.