சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும் ஸ்ரீ சித்தநாதேஸ்வரர் ஆலயம்!

Sri Siddhanatheswarar Temple
Sri Siddhanatheswarar Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஞ்சை மாவட்டம், திருநறையூரில் அமைந்துள்ளது அருள்மிகு சித்தநாதேஸ்வரர் ஆலயம். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்புரிகிறார். இத்தல ஈசனின் திருநாமம் சித்தநாதீஸ்வரர். அம்பாள் பெயர் அழகம்மை என்கின்ற சௌந்தர்ய நாயகி. தல விருட்சம் பவளமல்லி.

பதிணென் சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு ஒரு சமயம் தேவர்களின் சாபத்தால் சரும வியாதி உண்டாக, அந்நோய் நீங்குவதற்காக அவர் இத்தலம் வந்து ஈசனை வழிபட, சிவன் அவருக்குக் காட்சி தந்து அவரது நோயை நீக்கி அருள்புரிந்தார். சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இத்தல ஈசன், சித்தநாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி கோஷ்டத்தில் சிவ வழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
திருமணத் தடை, பயத்தைப் போக்கும் பஞ்சமுக கஜ சம்ஹார மூர்த்தி!
Sri Siddhanatheswarar Temple

சரும வியாதி உள்ளவர்கள் பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் கோரக்கருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதனை உடலில் பூசிக்கொள்ள நோய் நீங்குவதாக நம்புகின்றனர். மேலும், இக்கோயிலில் சண்டிகேஸ்வரர் சன்னிதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது.

தேவார பாடல் பெற்ற 65வது தலம் இது. மார்கழி திருவாதிரையில் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவமும், ஐப்பசியில் அன்னாபிஷேகமும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அருளும் சண்முகருக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுவது விசேஷம்.

தாயார் மகாலட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டும் என்று கடும் தவம் புரிந்தார் மேதாவி மகரிஷி. அதன் பலனாக அவர் மகாலட்சுமியை மகளாக அடைந்த திருத்தலம் இது. ஈஸ்வரனும் பார்வதியும் மகாலட்சுமியை தங்களது மகளாக பாவித்து மகாவிஷ்ணுவிற்கு மணம் செய்து கொடுத்த பெருமை மிக்க தலம் இது.

இத்தல சிவன் கோயிலில் மகாலட்சுமிக்கு தனிச் சன்னிதி உள்ளது. மகாலட்சுமியின் அவதார தலம் இது என்பதால் குழந்தை வடிவில் தாயார் சிறு பெண் வடிவில் இங்கு காட்சி தருகிறாள். ‘மழலை மகாலட்சுமி’ என அழைக்கப்படும் இவளுக்கு பாவாடை சட்டை அணிவித்து அலங்காரம் செய்வது விசேஷம். இக்கோயிலில் தவம் இயற்றிய மேதாவி மகரிஷியும் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்.

இதையும் படியுங்கள்:
தும்மல் சாஸ்திரம் சொல்லும் செய்தி தெரியுமா?
Sri Siddhanatheswarar Temple

நாச்சியார்கோவிலில் அருளும் சீனிவாச பெருமாளுக்கு மகாலட்சுமியை கன்னிகாதானம் செய்து கொடுத்த சிவனும் அம்பிகையும் இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப் புடைவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல் பானை, வெல்லம் போன்றவற்றை இங்கிருந்து பிறந்த வீட்டு சீராகக் கொடுக்கின்றனர். மேலும், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் நாச்சியார்கோவில் பெருமாள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தயார் மகாலட்சுமிக்கு 108 தாமரை மலர்களால் குபேர மகாலட்சுமி ஹோமம் செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி, இக்கோயிலில் சைவ, வைணவ பேதம் என்பது சிறிதும்  கிடையாது என்பது தனிச்சிறப்பு.

logo
Kalki Online
kalkionline.com