
ஒரு சமயம் அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
கிருஷ்ணர் அருகில் இருந்தார். தன் சந்தேகத்தை அவரிடமே அர்ஜுனன் கேட்டான்;
“பகவானே! யார் உண்மையில் சிறந்த கொடையாளி? யுதிஷ்டிரரா அல்லது கர்ணனா?”
“யுதிஷ்டிரரின் கொடை என்பது கவனித்து ஆராய்ந்து செய்யப்படும் கொடை. ஆனால் கர்ணனின் கொடையோ அந்த க்ஷணமே எதையும் எதிர்பார்க்காது செய்யப்படும் கொடை. ஆகவே கர்ணனே சிறந்த கொடையாளி” என்று கிருஷ்ணர் பதில் கூறினார்.
அர்ஜுனன் சற்றுத் தயங்கி நின்றான்.
“என்ன? சந்தேகமா, என் பதிலில்?, வா போவோம்” என்றார் கிருஷ்ணர்.
ஒரு பிராமண வேடம் தரித்துக் கொண்ட கிருஷ்ணர் அர்ஜுனனுடன் யுதிஷ்டிரரை நோக்கிச் சென்றார்.
யுதிஷ்டிரர் அப்போது கங்கையில் குளிக்கச் சென்று கொண்டிருந்தார்.
அந்தணர் அவரை நோக்கி, “ஐயனே! யாசிக்க வந்துள்ளேன். எனக்கு எதையாவது கொடுத்தால் நல்லது” என்றார்.
உடனே யுதிஷ்டிரர், “ ஐயா! நான் இப்போது அசுத்தனாக இருக்கிறேன். குளித்து விட்டு வருகிறேன். வரும் போது தருகிறேன்” என்றார்.
கிருஷ்ணர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
நேராகக் கர்ணனைச் சந்திக்கக் கிளம்பினார்.
கர்ணனும் கங்கையில் குளிப்பதற்காக வந்து கொண்டிருந்தான்.
அந்தணர் கர்ணனை நோக்கி, “ஐயனே! யாசிக்க வந்திருக்கிறேன்” என்றார்.
உடனே கர்ணன், “ஐயா, என் பாக்கியம்! இதோ தருகிறேன்” என்று கூறியவாறே தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் கையில் இருந்த தங்கத்தினால் ஆன கங்கணத்தையும் கழற்றி அவர் கையில் கொடுத்தான்.”
இதைப் பார்த்த அர்ஜுனன் குறுக்கிட்டு, “கர்ணா! நீ குளிக்க அல்லவா போய்க் கொண்டிருக்கிறாய். இப்படி அசுத்தனாக இருக்கும் நீ கொடுக்கலாமா? குளித்து விட்டு வரும் போது இதைக் கொடுக்கலாமே” என்றான்.
“அர்ஜுனா! இவர் கேட்பது என் பாக்கியம்! குளித்து விட்டுத் திரும்பும் போது இவர் இங்கு இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? அது வரை நான் உயிரோடிருப்பேன் என்பது என்ன நிச்சயம்? ஆகவே தான் உடனேயே கொடுத்தேன்” என்றான் கர்ணன்.
அர்ஜுனன் உண்மையான கொடை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டான்.
எதையும் எதிர்பார்க்காது, கொடுப்பதை உடனே கொடுக்க வேண்டும்; அதையும் கர்வமின்றிக் கொடுக்க வேண்டும்!
ஆகவே தான் ‘தானவீரன் கர்ணன்’ என்ற பெயரைப் பெற்றான் கர்ணன்!