

ஆன்மீகம், சமையல் மற்றும் ஆரோக்கியம் என அனைத்திலும் தேங்காய் முக்கியப்பங்கு வகிக்கிறது. தெய்வ வழிபாட்டில் தேங்காய் மங்கலத்தின் அடையாள மாகவும், ஆன்மீகத் தத்துவங்களின் குறியீடாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேசமயம் இந்திய சமையலறைகளின் அத்தியாவசிய அங்கமான தேங்காய், எந்தவொரு பூஜையையும் நிறைவு செய்யும் புனிதப் பொருளாகவும் திகழ்கிறது.
அனைத்து தேங்காய்க்கும் ஏன் 3 கண்கள் இருக்கின்றன? அவற்றின் அர்த்தம் என்ன? இத்தகைய சந்தேகம் பலருக்கு எழுவதுண்டு. இந்து சமய வழிபாடுகளில் தேங்காய் பயன்படுத்துவதற்குப் பின்னால் ஆழமான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. அதேபோல் தேங்காயில் இருக்கும் மூன்று "கண்கள்" தாவரவியல் ரீதியாக விதை முளைப்பதற்கான அமைப்பாகவும், ஆன்மீக ரீதியாகப் பல அடையாளங்களாகவும் பார்க்கப்படுகின்றன. வாங்க இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ளலாம்.
அறிவியல் (தாவரவியல்) காரணம்:
தேங்காயில் உள்ள மூன்று கண்களுக்கு ஆன்மீகத்தில் பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அறிவியல்ரீதியாக, தேங்காயின் குடுமி இருக்கும் பகுதியில் 3 கண்களுக்கு பல காரணங்கள் உள்ளது.
உண்மையை சொல்லப்போனால், தேங்காயில் உள்ளது கண்கள் அல்ல. தாவரவியலின்படி, விதை உருவாகும்போது இயற்கையாக உருவாகும் மூன்று துளைகளின் அடையாளங்களே இவை.
அதாவது தேங்காயின் நுனியில் உள்ள மூன்று மென்மையான கண்கள் (தேங்காயில் 3 கண்கள்), கருமுளை வளர்ந்து முளை விடுவதற்கான இடங்களாகும். இவை இனப்பெருக்கத்திற்குத் தேவையான மூன்று கருமுளைகள் உருவாகும் சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது. தேங்காய்ப் பூ காயாக மாறத்தொடங்கும் நிலையில், மூன்று சூலகங்கள் (ovules) காணப்படும்.
பொதுவாக காய் தொடர்ந்து வளரும்போது, மூன்று கண்களில், ஒரு கண் மென்மையாகவும், மற்ற இரண்டு கண்கள் கடினமாகவும் இருக்கும். முளைப்பதற்கு ஏற்ற மென்மையான துளை அதன் உயிர்வாழ்வதற்கு அவசியமான ஒரு தாவரவியல் அமைப்பாகும். தேங்காயில் உள்ள மற்ற இரண்டு கண்களின் வளர்ச்சியும் நின்று, அந்த மென்மையான துளை வழியாகவே புதிய முளை வெளிவரும்.
அதாவது, இந்த மென்மையான பகுதிக்கு அடியில் தான் தேங்காயின் கரு உள்ளது. இதுவே பிற்காலத்தில் புதிய தென்னங்கன்றாக வளர்கிறது.
ஆன்மீகக் கருத்து:
சமஸ்கிருத மொழியில் தேங்காய் 'ஸ்ரீபலம்' (Shriphala) என்று அழைக்கப்படுகிறது, இதற்கு 'இறைவனின் கனி' அல்லது 'மங்களகரமான கனி' என்று பொருள். இந்து மதச் சடங்குகள் மற்றும் வழிபாடுகளில் தேங்காய் மிக முக்கியமான இடத்தைப் பெறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது.
இதன் மூன்று கண்கள் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. மேலும், தேங்காயின் அமைப்பு மும்மூர்த்திகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சில நம்பிக்கைகளில் இவை பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லது சூரியன், சந்திரன், அக்னி ஆகியவற்றின் குறியீடுகளாகவும் சொல்லப்படுகின்றன.
பொதுவாக பூஜைகளில் தேங்காய் உடைப்பது மனிதனின் கடினமான அகங்காரத்தை உடைத்து, உள்ளிருக்கும் தூய்மையான உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கிறது.
தேங்காயின் கடினமான வெளி ஓடு மனிதனின் ஆணவத்தையும், அகங்காரத்தையும் (Ego) குறிக்கிறது. அதை உடைக்கும்போது, அந்த அகங்காரம் நீங்கி இறைவன் முன் சரணாகதி அடைவதை இது உணர்த்துகிறது.
ஓட்டை உடைத்தவுடன் உள்ளே இருக்கும் வெள்ளை நிறப் பருப்பு, களங்கமற்ற தூய மனதையும், இனிமையான தேங்காய் நீர் இறைவனின் கருணையையும், தூய பக்தியையும் குறிக்கிறது.
வெளிப்புற ஓடு (பிரம்மா - படைத்தல்): கடினமான இந்த ஓடு, நமது அகங்காரத்தையும் (ஆணவம்) மாயையையும் குறிக்கிறது. இதனை உடைக்கும்போது, நமது ஆணவம் அழிந்து இறைவனிடம் சரணடைவதைக் காட்டுகிறது.
தேங்காய் உள்ளிருக்கும் வெள்ளை பருப்பு (விஷ்ணு - காத்தல்): ஓட்டை உடைத்தவுடன் தெரியும் தூய்மையான வெண்மை நிறப் பருப்பு, களங்கமற்ற தூய மனதையும் சாத்வீக குணத்தையும் குறிக்கிறது.
உள்ளிருக்கும் இளநீர் (சிவன் - அழித்தல்/புதுப்பித்தல்): இனிமையான இந்த நீர், இறைவனின் அருளையும் பேரின்பத்தையும் குறிக்கிறது.
மூன்று கண்கள்: தேங்காயின் மேற்பகுதியில் இருக்கும் மூன்று கண்கள், சிவபெருமானின் முக்கண்களைக் குறிப்பதோடு, மனிதனின் இடா, பிங்களா, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளையும் (குண்டலினி சக்தி) குறிப்பதாக யோக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், "எனது ஆணவத்தை (ஓடு) உடைத்து, தூய்மையான மனதுடன் (பருப்பு) உனது அருளை (இளநீர்) வேண்டுகிறேன்" என்பதே இறைவனுக்குத் தேங்காய் உடைப்பதன் அடிப்படைத் தத்துவமாகும்.
இதனால்தான் பூஜை, ஹோமம், சடங்குகளில் தேங்காய் புனிதப் பொருளாக கருதப்படுகிறது.