

சொக்கப்பனை என்றால் அனைவருக்கும் சட்டென்று நினைவிற்கு வருவது கார்த்திகை திருநாளில் சிவா, விஷ்ணு ஆலயங்களின் முன்னர் காய்ந்த பனை ஓலையால் வேய்ந்த தீப ஸ்தம்பம் தயார் செய்து, சுவாமியை, பெருமாளை எழுந்தருளச் செய்து தீப ஸ்தம்பத்திற்கு எரியூட்டுவதுதான். இந்தப் பனை மரத்தின் பயன்களை சொல்லி மாளாது. அதன் ஒவ்வொரு பகுதியும் நமக்கு தேவையான பொருட்களாக இருக்கின்றன.
முக்கியமாக, அந்தக் காலத்தில் பனை மரத்தினை அறுத்து கழிகளாக செய்து அதை உத்திரங்களாக அமைத்து வீடுகளைக் கட்டினர். அதன் ஓலைகளை கூரையாக வேய்ந்தார்கள். முக்கியமாக, அதன் ஓலைகளை ஓலைச்சுவடிகளாகப் பயன்படுத்தினர். கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியது அந்த ஓலைச்சுவடிகள்தான். அந்த ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்தப் பனை ஓலைகளைக் கொண்டு விசிறிகள், பைகள், கூடைகள் போன்றவையும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பனம் நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பனங்கற்கண்டு, பனங் கருப்பட்டி போன்றவை உண்ணும் பொருளாக இருக்கின்றன. இப்படி இருக்க, இருப்பிடத்திற்கும், உண்ணும் உணவிற்கும் அடிப்படை காரணியாக பனைமரம் விளங்குவதால் அதனை, ‘பூலோக கற்பக விருட்சம்’ என்று போற்றுகின்றோம்.
சிறு குழந்தையாக விளையாடியபொழுது அந்தப் பனையோலைகளில் தாலி செய்து விளையாடியிருக்கிறோம். அதற்கு முன்பாக அந்த பனை ஓலைகளில்தான் தாலி செய்து தாளப் பத்திரமாக அதை திருமணத்ததில் உபயோகித்திருக்கின்றனர் என்றும் படித்திருக்கிறோம். இன்றும் பனைமரம் நீண்ட ஆயுளைக் கொண்டது என்பதனால் பெண்கள் தமது தாலி நீண்ட நாள் நிலைத்திருக்க பனையின் பன்னாடை எனப்படும் பகுதியிலிருந்து ஈர்க்குகளை எடுத்து தாலிச்சரட்டில் கோர்த்துக் கொள்வதுண்டு. அரக்கு போன்று உள்ளீடு வைக்காமல் செய்யப்படும் தாலிச் சரட்டுகுள் பனை ஈர்க்குகளை வைப்பதன் மூலம் அது ஆயுள் பலத்தை கூட்டுவது போல் தாலிச்சரட்டை நசுங்காமலும் பாதுகாக்கும் என்ற இரட்டை நம்பிக்கை உண்டு.
இம்மரத்தை தெய்வீக மரமாகப் போற்றி கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை ஏற்றுதல் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும் . கோயிலின் முன்னால் நீண்ட பனங்கழியை நட்டு அதன் மீது காய்ந்த பனை ஓலை, தடி, காய்ந்த மட்டைகளை கொண்டு கூம்பு போல் அமைப்பர். இதற்கு சொக்கப்பனை என்பது பெயர். ‘சொக்கம்’ என்பதற்கு கவர்ந்திழுக்கும் அழகு என்பது ஒரு பொருள். ‘சுஷ்கம்’ என்ற சொல் காய்ந்த என்ற பொருளைத் தரும். காய்ந்த பனையை சுஷ்கப்பனை என்பர். சுஷ்கம் என்பது சுக்கு என்றும் பொருளாகிறது. இஞ்சி காய்ந்தால் சுக்கு சுக்குப்பனை - சொக்கப்பனை ஆகி இருத்தல் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
சிவாலயங்களில் திருக்கார்த்திகை தினத்தன்று சிவன், அம்பிகை, பிள்ளையார், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர் மூர்த்திகளை எழுந்தருளச் செய்து மூலஸ்தானத்தில் இருந்து சிவாக்கனியை கொண்டுவந்து கோபுரம், ஸ்தூபி ஆலய மாடங்களில் எல்லாம் சிவாச்சாரியார் தீபம் ஏற்றுவார்.
அதன் பின்னர் சிவாச்சாரியார் சிவாக்கனியை சொக்கப்பனையில் ஏற்ற அது ஓங்கி வளர்ந்து பெருஞ்சோதி வடிவாகக் காட்சியளிக்கும். இக்காட்சியானது சிவபெருமான் ஜோதியாகக் காட்சி கொடுத்ததை நினைவு கூறுவதாக அமையும். முப்புரங்களையும் சிவன் எரி செய்ததை குறிக்கவே இந்த சொக்கப்பனை கொளுத்தும் சடங்கு என்பதும் ஒரு ஐதீகம். கார்த்திகை பௌர்ணமி அன்றுதான் சிவன் முப்புரங்களையும் பஸ்பம் ஆக்கினார். சொக்கப்பனை ஏகஜோதி மயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாய் காண்பிப்பதால் அது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.
மலை மீது தீபம் ஏற்றுவது சொக்கப்பனை கொளுத்துவது எல்லாம் அதிக தூரத்திற்கு பிரகாசம் தெரிய வேண்டும் என்பதால்தான். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற சகல ஜீவ ராசிகளின் மீதும் இந்த ஒளிபட்டு அவற்றின் பாவங்கள் போக வேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பனை எரியூட்டல். தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து ஜீவராசிகளின் மீதும் படுகிறதோ அப்படியே நம் மனதில் இருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாக பிரகாசிக்க வேண்டும்.