

இமயமலைத் தொடரில் உள்ள உயரமான சிகரம் மவுன்ட் எவரெஸ்ட். 29,032 அடி உயரம் கொண்ட இது நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கானோர் இந்த மலை உச்சியை அடைய முயற்சிக்கின்றனர். இதற்கான அனுமதி மற்றும் உதவிகளை நேபாள அரசு செய்து வருகிறது. அதில் 6 வயது சிறுவன் முதல் 80 வயது முதியவர் வரை ஏறி சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் 124 மலையேறுபவர்கள் மற்றும் 150 உயரமான மலைப்பகுதிகளைச் சேர்ந்த ஷெர்பாக்கள் உட்பட, வியக்கத்தக்க வகையில் 274 மலையேறுபவர்கள் ஒரே நாளில் 20-5-2026 அன்று எவரெஸ்ட் சிகரத்தை அதனின் தெற்குப்பாதை வழியாக வெற்றிகரமாக அடைந்து, ஒரு மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளனர். திபெத்தில் சீன அதிகாரிகள் வடக்கு முகடுப் பாதையை மூடியதால், மலையேற்றங்கள் முற்றிலும் நேபாளப் பக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டன.
இந்த மாபெரும் முயற்சி, 2019 மே மாதம் 223 மலையேறு பவர்கள் ஒரே நாளில் மேற்கொண்ட முந்தைய சாதனையைத் தகர்த்தது. தாமதமான வசந்த காலம், தெளிவான மற்றும் அமைதியான வானிலை நிலவிய ஒரு குறுகிய காலம், பயணக் குழுக்கள் தங்கள் முயற்சிகளை மேற்கொள்ள உதவியது.உலகச் சாதனை படைத்த மலையேறிகள் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த துளசி ரெட்டி பால்புனூரி, சந்தீப் ஆரே, அஜய் பால் சிங் தாலிவால் ஆகியோர் இருந்தனர். நேபாள சுற்றுலாத்துறை 494 எவரெஸ்ட் அனுமதிகளை, ஒவ்வொன்றிற்கும் $15,000 கட்டணம் தோராயமாக வசூலித்துவிட்டு வழங்கியது.
நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாள நாட்டின் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் மே 29, 1953 அன்று அதிக காற்று, ஒரு பெரிய பனிப்புயல் மற்றும் -28ºC வெப்பநிலையைத் தாண்டி எவரெஸ்ட் உச்சியை முதல் முறையாக அடைந்தனர். எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்த முதல் ஆண்கள் என்ற சாதனை பதிவுக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு, 1975 ஆம் ஆண்டு மே 16 ம் தேதி' ஜூன்கோ தாபெய்' என்ற ஜப்பானிய பெண்மணி முதல் முறையாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்தார். அப்போது அவரின் வயது 36. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் உத்தரகண்ட் மாநிலத்தின் பச்சேந்திரி பால் ஆவார். அவர் 1984 இல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்.
மலாவத் பூர்ணா (Malavath Poorna), தெலங்கானாவின் பழங்குடியின சமூகத்தைச்சேர்ந்த ஒரு சாதனை இந்திய மலை ஏறுபவர். இவர் 2014-ம் ஆண்டு மே 25-ம் தேதி, தனது 13 வயது 11 மாதங்களில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் ஏறி சிகரத்தை அடைந்த மிக இளைய பெண் என்ற உலக சாதனையைப் படைத்தார். எவரெஸ்ட் மலை சிகரத்தில், கடல் மட்டத்திலிருந்து 18,200 அடி ( 5554 மீ) உயரத்தில் உள்ள 'காலா பத்தர்' சிகரத்தை டில்லியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஹர்ஷித் சுமித்ரா 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெற்றிகரமாக சென்றடைந்து உலக சாதனை படைத்தான். ஷர்ஷித்தின் தந்தை ராஜீவ் சவுமித்ரா ஒரு மலையேற்ற வீரர் என்பதால் ஷர்ஷித்தின் இரண்டரை வயதிலேயே மலையேற்றம் பயிற்சி பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணிமா சின்ஹா இந்திய மலையேறுபவர் மற்றும் ஒரு கைப்பந்து வீராங்கனை லக்னோவைச் சேர்ந்த இவர், 2011 ஆம் ஆண்டில் ஓடும் ரயிலில் இருந்து கொள்ளையர்களால் தள்ளப்பட்டார். அந்த பயங்கரமான ரயில் விபத்தில் தனது காலை இழந்த போதிலும், அசைக்க முடியாத உறுதியால் தூண்டப்பட்ட அவர், 2013 ம் ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தையும், பின்னர் கிளிமஞ்சாரோ சிகரத்தையும் தொட்டு, உலகின் முதல் கால் ஊனமுற்ற பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ (29 வயது), உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மே 19 2025 அன்று ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் வாயிலாக, இந்த சாதனையை படைத்த, முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இந்தியப் பெண் என்ற பெருமையை சோன்ஜின் பெற்றுள்ளார்.
அதிக முறை எவரெஸ்ட் சிகரம் தொட்டவர் நேப்பாளத்தைச் சேர்ந்த காமி ரீட்டா ஷெர்ப்பா. இவர் 32 முறை எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளார். 55 வயது காமி ரீட்டா "எவரெஸ்ட் மேன்" என்று அழைக்கப்படுகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் 1994 ம் ஆண்டு முதல்முறையாக சிகரத்தை அடைந்தார். அதிலிருந்து வருடாவருடம் ஒரு முறை எவரெஸ்ட் சிகரம் தொட்டு வருகிறார்.கடந்த 2024 மே மாதத்தில் மட்டும் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரம் தொட்டு உள்ளார். தற்போது ஏப்ரல் 17ஆம் தேதி 2026 அன்று அவர் 32 வது முறை எவரெஸ்ட் உச்சியைத் தொட்டார் அத்துடன்.தனது ஓய்வை அறிவித்தார்.