சிமென்ட் இல்லாமல் 2,000 ஆண்டுகளாக நிற்கும் அணை! கரிகாலன் கட்டிய கல்லணையின் ரகசியம் என்ன?

காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கும் பண்டைய பொறியியல் அதிசயம், பயண வழி மற்றும் பார்வையிட ஏற்ற நேரம்.
கல்லணை
கல்லணை Gemini image
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

இன்றைய தலைமுறையினர் பலரும் அணைகள் என்றால் கான்கிரீட் கட்டுமானங்களையும் பெரிய நீர்த்தேக்கங்களையும் மட்டுமே நினைத்துப் பார்க்கிறோம். அதிலும் இன்றைய நவீன தலைமுறை அணை என்றால் ஜாலியாக இருக்க மட்டுமே என்று நினைக்கிறார்கள். அவற்றின் பின்னணியில் உள்ள வரலாறுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நீரின் ஓட்டத்தைப் புரிந்துகொண்டு, விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் அணையைக் கட்டிய தமிழர்களின் அறிவைப் பார்த்து நிச்சயமாக வியக்காமல் இருக்க முடியாது. இந்த அணை பற்றிய வரலாற்று சுவாரஸ்யங்களை நமது இளைய தலைமுறையினருக்கு கடத்த வேண்டியது நமது கடமை.

கல்லணை என்பது வெறும் கற்களால் கட்டப்பட்ட அணை அல்ல. அது தமிழர்களின் வரலாறு, விவசாயம், அறிவியல் மற்றும் நீர் மேலாண்மைக்கான வாழும் சாட்சி.

ஒருமுறை பிள்ளைகளுடன் கல்லணைக்குச் சென்று, நம் முன்னோர்களின் கட்டிடக்கலைச் சாதனையை நேரில் பாருங்கள்.

கல்லணை பற்றித் திரட்டிய தகவல்கள் இங்கு.

தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவுக்கும், சோழர்களின் கட்டிடக்கலைத் திறமைக்கும் சாட்சியாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது கல்லணை. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை, இன்றும் விவசாயத்திற்காகக் காவிரி நீரைப் பகிர்ந்தளித்து வருகிறது என்பது வியப்பான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

கல்லணை (Grand Anicut) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. கரிகால சோழனால் கி.பி. 2ஆம் நூற்றாண்டு இந்த கல்லணை கட்டப்பட்டது எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. சுமார் 329 மீட்டர் நீளம் மற்றும் சுமார் 20 மீட்டர் அகலம் கொண்ட இது உலகின் மிகப் பழமையான பயன்பாட்டில் உள்ள நீர்ப்பாசனக் கட்டமைப்புகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

கல்லணை
கல்லணை Gemini image

சோழ மன்னன் கரிகால சோழன் ஆட்சிக் காலத்தில் காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தி, விவசாயத்திற்குத் தேவையான நீரைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்காகக் கல்லணை கட்டப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லணையை மற்ற அணைகளிலிருந்து வேறுபடுத்தும் சில முக்கிய அம்சங்கள்..

1. பெரிய கற்களைக் கொண்டு அணை அமைக்கப்பட்டுள்ளது.

2. சிமென்ட் இல்லாத பழங்காலக் கட்டுமானத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3. காவிரி நீரைப் பல்வேறு கிளை ஆறுகள் மற்றும் பாசனக் கால்வாய்களுக்குத் திருப்ப உதவுகிறது.

4. சுமார் 2,000 ஆண்டுகளைக் கடந்தும் நீர்ப்பாசனப் பணியில் தொடர்ந்து பயன்படுகிறது.

5. கல்லணை ஒரு சுற்றுலாத் தலம் மட்டுமல்லாமல் காவிரி டெல்டா விவசாயத்தின் முக்கியமான நீர் மேலாண்மைக் கட்டமைப்பும்கூட என்று உலகத்தாரால் வியந்து பார்க்கப்படுகிறது.

சென்னையிலிருந்து கல்லணைக்குச் செல்வது எப்படி?

சென்னையிலிருந்து கல்லணைக்குச் செல்ல ரயில், பேருந்து அல்லது சொந்த வாகனத்தைப் பயன்படுத்தலாம்.

கார், பைக் போன்ற வாகனங்களில் செல்லும் போது சென்னை முதல் திருச்சி வரை சுமார் 325 கி.மீ. தொலைவும், திருச்சியிலிருந்து கல்லணை வரை சுமார் 15–20 கி.மீ தொலைவும் உள்ளது. சிறப்பு தினங்களில் ஏற்படும் போக்குவரத்தைப் பொறுத்து திருச்சியிலிருந்து 30–45 நிமிடங்கள் ஆகலாம்.

இதையும் படியுங்கள்:
சடாரென்று பேக் பண்ணுங்க! தூத்துக்குடியில் உங்களை மயக்கப் போகும் 10 அற்புதமான சுற்றுலாத் தலங்கள்!
கல்லணை

ரயில் போக்குவரத்து பலருக்கும் எளிதானது. சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்குச் செல்லலாம். அங்கிருந்து பேருந்து, ஆட்டோ அல்லது வாடகைக் கார் மூலம் கல்லணையை அடையலாம்.

அதே போல் நகரத்தின் எங்கிருந்தும் பேருந்தில் திருச்சி செல்லும் வசதிகளுண்டு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை செல்லும் உள்ளூர் பேருந்துகள் குறித்து விசாரித்துப் பயணிக்கலாம். குறிப்பாக திருச்சியிலிருந்து கல்லணைக்குச் சாலை வழிப் பயணமே எளிமையானது.

கல்லணைக்குச் செல்லும்போது நினைவில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்..

1. ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது கரையோரத்திற்குச் செல்வதை நிச்சயமாக தவிர்க்கவும். குறிப்பாக அணையின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நுழைய வேண்டாம்.

2. வழுக்கும் கற்கள் மற்றும் ஈரமான தரையில் பாதங்களை நன்கு ஊன்றி கவனமாக நடக்கவும்.

3. குழந்தைகளை ஆற்றங்கரையில் தனியாக விளையாட விடாதீர்கள். வெயிலில் இருந்து தப்பிக்க குடிநீர், தொப்பி, சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பையில் எடுத்துச் செல்லவும்.

4. ஆற்றில் இறங்கி குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ நிச்சயமாக தவிர்ப்பது பாதுகாப்பு.

இதையும் படியுங்கள்:
சொர்க்கமே கண்முன்! கர்நாடகாவின் மறைந்திருக்கும் முத்து 'அப்சர கொண்டா' நீர்வீழ்ச்சி!
கல்லணை

கல்லணையைப் பார்வையிடும் நுழைவுக் கட்டணம் மற்றும் நேரம்..

கல்லணையின் திறந்தவெளி அனைவரும் பார்வையிடும் பகுதியாக உள்ளது. பொதுவாக நுழைவுக் கட்டணமின்றி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வையிட ஏற்ற நேரமாக பகல் நேரம் பரிந்துரைக்கப்படுகிறது.

கல்லணையைச் சுற்றிப் பார்க்க சுமார் 1 லிருந்து 2 மணி நேரம் ஆகலாம். அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் சேர்த்துப் பார்க்க நினைத்தால் அரை நாள் சுற்றுலாவாகத் திட்டமிடலாம். மேலும் அருகிலுள்ள பூங்கா அல்லது நினைவிடங்களின் திறப்பு நேரம் மாறுபடலாம் என்பதால் பயணத்திற்கு முன்பு உள்ளூரில் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு சிறிய சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கும், பண்டைய வரலாற்றை நேரில் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் கல்லணை சிறந்த தேர்வாக இருக்கும்.

குடும்பத்துடன் பாதுகாப்பான வார இறுதிச் சுற்றுலாவைத் திட்டமிடவும், ஆற்றங்கரை எச்சரிக்கைகள் மற்றும் போக்குவரத்து விவரங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு சிரமமின்றிப் பயணிக்கவும் இந்தத் தகவல்கள் உதவும்.