உலகின் பண்டைய நாடுகள் என்று சீனா, எகிப்து, ஈரான் போன்ற நாடுகளைக் குறிப்பிடுகிறோம். அதே வேளையில், உலகின் இளைய நாடு என்று எந்த நாட்டைக் குறிப்பிடலாம்?
விடுதலை, போர்களின் முடிவு அல்லது ஒரு பெரிய அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புதிய நாடுகள் தோன்றுகின்றன.
இந்த இளம் நாடுகள், தங்களுக்கென்று தனியான அடையாளங்களை வரையறுத்து, தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு, உலகின் இளைய நாடுகள் என்று 10 நாடுகளை இங்கு வரிசைப்படுத்தலாம்.
தெற்கு சூடான் (South Sudan) கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிலம் சூழ்ந்த நாடாகும். இதன் தலைநகரம் ஜூபா. தெற்கு சூடானின் எல்லைகளாக, கிழக்கே எத்தியோப்பியா, தெற்கே கென்யா, உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, மேற்கே நடு ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் வடக்கே சூடான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
வெள்ளை நைல் நதியால் உருவாக்கப்பட்ட பெருமளவு சதுப்பு நிலங்கள் இங்குள்ளன. இந்நாடு தொடக்கத்தில் பிரித்தானியர் மற்றும் எகிப்தியரின் கூட்டுரிமையுடன் கூடிய ஆங்கிலோ - எகிப்திய சூடானின் கீழ் ஆளப்பட்டு வந்தது. அதன் பின்னர், 1956 ஆம் ஆண்டில் சூடான் குடியரசின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.
சூடானில் இடம் பெற்ற முதலாவது உள்நாட்டுப் போரை அடுத்து, 1972 ஆம் ஆண்டில் இது சூடானின் கீழ் தன்னாட்சியுடன் கூடிய சிறப்புப் பகுதியாக 1983 ஆம் ஆண்டு வரை இருந்தது. அதன் பின்னர், இடம் பெற்ற இரண்டாவது உள்நாட்டுப் போரை அடுத்து 2005 ஆம் ஆண்டில் சூடானிய அரசுக்கும், சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒரு அமைதி உடன்பாடு உருவானது.
அதே ஆண்டின் பிற்பகுதியில், சூடானின் கீழ் மீண்டும் தன்னாட்சி அமைப்பாக உருவானது. 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் இங்கு இடம் பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பை அடுத்து 2011 ஜூலை 9 ஆம் நாள் உள்ளூர் நேரம் அதிகாலை 12:01 மணிக்கு தனி நாடானது. தற்போதைய நிலையில், உலகின் இளைய நாடு பட்டியலில் இருப்பது தெற்கு சூடான் நாடுதான்.
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள கொசோவோ (Kosovo), மலைப்பாங்கான நிலப்பரப்பால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். இங்கு உட்புற நதிப் பள்ளத்தாக்குகளில் விவசாயம் முதன்மையானதாக இருக்கிறது.
இந்நாடு 2008 ஆம் ஆண்டு, பிப்ரவரி 17 ஆம் நாளில் செர்பியாவிலிருந்து விடுதலை பெற்றதாக, தானாகவே அறிவித்துக் கொண்டது. கொசோவோ நாடு, அல்பேனியா, வடக்கு மாசிடோனியா, மொண்டெனேகுரோ மற்றும் செர்பியாவை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
செர்பியா உட்பட சில நாடுகள் இந்நாட்டின் விடுதலை நிலையை மறுத்துக் கொண்டிருக்கின்றன. 1999 ஆம் ஆண்டு முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது என்பது கவனிக்கத்தக்கது. உலகின் இளைய நாடு பட்டியலில் கொசோவோ இரண்டாமிடத்தில் இருக்கிறது.
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மொண்டெனேகுரோ (Montenegro), தெற்கில் அட்ரியேடிக் கடல், மேற்கில் குரோசியா, வடமேற்கில் பொசுனியா மற்றும் எர்செகோவினா, வடகிழக்கில் செர்பியா, தென்கிழக்கில் அல்பேனியா ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய மத்தியக் காலத்தில் இருந்து 1918 ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாகக் காணப்பட்ட இந்நாடு, பின்வந்த காலங்களில், யுகோசுலாவியா மற்றும் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் போன்ற பல ஒன்றியங்களில் இணைந்திருந்தது.
2006 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாளன்று நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி மொண்டெனேகுரோ 2006 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாளில் விடுதலைப் பிரகடனம் செய்தது. 2006 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் நாளில் ஐக்கிய நாடுகளின் 192 ஆவது நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது. இந்நாடு உலகின் இளைய நாடு பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறது.
தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் பகுதியில் அமைந்துள்ள செர்பியா, 2006 ஆம் ஆண்டு செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ மாநில ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து ஒரு சுதந்திர நாடாக மாற்றம் பெற்றது.
இந்நாடு வடக்கில் வளமான சமவெளிகள் (பன்னோனியன் சமவெளி) முதல் தெற்கில் உள்ள மலைகள் வரை பல்வேறு நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நிலத்தால் சூழப்பட்ட நாடாகும்.
செர்பியா ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, வடக்கு மாசிடோனியா, அல்பேனியா (கொசோவோவுடன் சர்ச்சைக்குரியது), மொண்டெனேகுரோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் குரோஷியாவுடன் எல்லையாக உள்ளது. இங்கு டானூப் நதி ஒரு முக்கியமான நதியாக இருக்கிறது. உலகின் இளைய நாடு பட்டியலில் செர்பியா நான்காமிடத்தில் இருக்கிறது.
தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும், அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும், இந்தோனேசியாவின் மேற்குத் திமோரின் கிழக்கு பகுதியில் உள்ள நாடாக, கிழக்குத் திமோர் (East Timor) அல்லது திமோர்-லெசுடே (Timor-Leste) இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
திமோர் என்பது "திமூர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழிப் பதத்தில் இருந்து தோன்றியதாகும். பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடைந்தது. போர்த்துகேயரால் திமோர் காலனித்துவப் பகுதியாகக் காணப்பட்ட போது, போர்த்துக்கேயத் திமோர் எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது.
திமோர்-லேசுடே என்ற பெயரே பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. 2002 ஆம் ஆண்டு, மே 20 அன்று உருவான கிழக்கு திமோர், உலகின் இளைய நாடு பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு பலாவு (Palau). பிலிப்பைன்ஸிலிருந்து 800 கி.மீ. கிழக்கேயும், டோக்கியோவிற்கு 3200 கி.மீ. தெற்கேயும் அமைந்துள்ளது. இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு 459 சதுர கிலோ மீட்டர்கள் என்பதால், மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது.
இந்நாடு, ஐக்கிய நாடுகள் மேற்பார்வையின் கீழ் பசிபிக் தீவுகளின் அறக்கட்டளைப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அமெரிக்காவுடனான இலவச சங்க ஒப்பந்தத்தின் மூலம் 1994 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் நாளில் விடுதலை பெற்றது. இந்நாடு உலகின் இளைய நாடு பட்டியலில் ஆறாமிடத்தில் இருக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் எரித்திரியா அல்லது எரித்திரேயா (Eritrea) எனும் நாடு உள்ளது. எரித்திரியா என்ற பெயர் இத்தாலியம் வழியில் பிறந்தது. இச்சொல், சிவப்பு என்னும் பொருளுடையது என்பதால், இதனைத் தமிழில் செந்நாடு என்று பொருள் கொள்ளலாம். "ஆப்பிரிக்காவின் கொம்பு" (Horn of Africa) பகுதியில் உள்ள இந்நாட்டின் தெற்கே எதியோப்பியா, மேற்கே சூடான், தென் மேற்கில் சிபூட்டி ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை செங்கடல் பகுதியாக இருக்கிறது.
செங்கடலுக்கு அப்பால் சவுதி அரேபியாவும், யேமனும் அமைந்துள்ளன. டலாக் தீவுக்கூட்டம், அனீசுத் தீவுகளின் சில தீவுகள் எரித்திரியா நாட்டுக்குச் சொந்தமானவையாகும். 1993 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாளில் இந்நாடு ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்நாடு உலகின் இளைய நாடு பட்டியலில் ஏழாமிடத்தில் இருக்கிறது.
ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடாக சுலோவேக்கியா இருக்கிறது. இதன் மேற்கில், செக் குடியரசு மற்றும் ஆஸ்திரியா, வடக்கில் போலந்து, கிழக்கில் உக்ரைன், தெற்கில் ஹங்கேரி ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகும்.
1989 ஆம் ஆண்டு வெல்வெட் புரட்சி, 1993 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியா, செக் குடியரசு மற்றும் சுலோவாக்கியாவாக அமைதியான முறையில் பிரிக்கப்படுவதற்கு முன்னதாக நடந்தது.
அப்போதிருந்து, சுலோவாக்கியா அதன் சொந்த அடையாளம், அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளுடன் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக வளர்ந்துள்ளது. இந்நாடு உலகின் இளைய நாடு பட்டியலில் எட்டாமிடத்தில் இருக்கிறது.
ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு (Česká ) நாடு ஒரு நிலம் சூழ் நாடாகும். இந்நாட்டின் வடக்கில் போலந்து, மேற்கு மற்றும் வடமேற்கில் ஜெர்மனி, தெற்கில் ஆஸ்திரியா, கிழக்கில் சுலோவேக்கியா ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
இந்நாடானது 78,866 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. பிராக் என்னும் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டிருக்கிறது. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது. இந்நாடு உலகின் இளைய நாடு பட்டியலில் ஒன்பதாமிடத்தில் இருக்கிறது.
நடு ஐரோப்பாவும், நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு குரோவாசியா (Croatia) எனும் நாடாகும். இந்நாட்டின் வடக்கில் சிலொவேனியா, அங்கேரி ஆகியவை உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கு, மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கில் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது.
ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டு யூகோஸ்லாவியா உடைந்த போது குரோஷியா, 1991 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது.
2013 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது. போர் மற்றும் பன்னாட்டு ராஜதந்திரத்திற்குப் பிறகு, அது அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாறியது. அதன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. இந்நாடு உலகின் இளைய நாடு பட்டியலில் பத்தாமிடத்தில் இருக்கிறது.
உலகிலுள்ள நாடுகளில் மேற்காணும் 10 நாடுகள் உலகின் இளைய நாடுகளுக்கான பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.