

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்கல்தேரி மற்றும் களக்காடு தேங்காய் உருளி போன்ற சிறப்பான நீர்வீழ்ச்சிகள் அடங்கிய பகுதிகள் ஏராளமாக உள்ளன. இந்தப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் பொங்கல் மறுநாள் இந்த பகுதிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அனைத்து இடங்களும் வனங்கள் நிரம்பிய காடுகள், பசுமையான புல்வெளிகள், பரந்த மரங்கள் என நிறைந்துள்ளன. இடையிடையே நீர்வீழ்ச்சிகளும் சிற்றாறுகளும் எண்ணற்ற அளவில் உள்ளன. இவை அனைத்தும் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும்.
தற்போது அனைத்து இடங்களுக்கும் செல்ல வனத்துறை அனுமதி பெற வேண்டும். களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் மிகுந்த இடமாகும். இங்கு உயிரினங்கள் அதிக அளவில் உள்ளன. அதிலும் சிங்கவால் குரங்குகள் இந்த பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த இடத்தில் மீன்கள் காப்பகம், அருங்காட்சியகம் போன்றவை உள்ளன.
களக்காடு பஸ் நிலையத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் களக்காடு தலையணை பகுதியை அடையலாம்.
ஓங்கி உயர்ந்த காடு, பசுமையான மரக்கூட்டங்கள், பசுமையான காடுகள் அவற்றின் நடுவே பாறைகள் மீது தண்ணீர் மோதி வருவது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த தண்ணீர் ஏராளமான மூலிகைகளை சுமந்து வருகிறது.
இத்தகைய அருவிகளில் மற்றும் நீரில் குளிப்பது உடம்புக்கு புத்துணர்ச்சியும் புதிய தெம்பையும் வழங்குகிறது. இந்த தலையணை பகுதியில் குளித்தால் மீண்டும் மீண்டும் குளிக்கத் தோன்றும்.
பொழுதுபோக்குக்காக சிறுவர் பூங்கா, மீன் காட்சியகம், அருங்காட்சியகம், சிற்றுண்டி ஆகியவை அருகில் உள்ளன. சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மூலிகை கலந்த நீரில் குளிப்பதற்காகவே உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் இங்கு படை எடுத்து வருகின்றனர். இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றுவதற்கு தனி அறைகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. பூலித்தேவன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த பகுதியில் உலா வந்ததாக கூறப்படுகிறது. அவரது ஆளுகையில் கீழ் இந்த பகுதி இருந்ததாக வரலாறு கூறுகிறது.
களக்காடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் செங்கல் தேரி மலையும் ஏரியும் உள்ளது. இந்த இடத்திலிருந்து எங்கு பார்த்தாலும் பசுமையான காடுகளையும் இயற்கை காட்சிகளையும் கண்டு களிக்கலாம். இதன் அருகில் புகழ்பெற்ற கருமாண்டி அம்மன் கோவில் உள்ளது.
இங்குள்ள மக்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இதன் கீழ் பகுதியில் தேங்காய் உருளி, கோழிக்கால் போன்ற ஏரிகளும் அருவிகளும் ஏராளமாக உள்ளன. அனைத்து இடங்களையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதில் நடந்து செல்வது சுகமான அனுபவமாக இருக்கும்.
மான்கள் மற்றும் மிருகங்கள் நீர் அருந்துவதற்காக சிறிய ஏரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேங்காய் உருளி அருவியை ஒட்டி உள்ள பாறைகளில் ராமர் லட்சுமணர் சீதை அனுமான் போன்றவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அருவியில் குளித்து விட்டு வரும் நபர்கள் இந்த பாறையை தொட்டு வணங்கி செல்வது வழக்கம். தலையணை பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் செங்கல் தேரி பகுதி அமைந்துள்ளது.
இந்த இடங்களுக்கு செல்ல வனத்துறை இடம் அனுமதி பெற வேண்டும். களக்காடு வனவிலங்கு சரணாலயம் 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் தவிர வெளியூரிலிருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இந்த இடங்களுக்கு வந்து அருவியில் குளித்துவிட்டு செல்கின்றனர்.
இத்தகைய பகுதிகளை சரியான முறையில் பாதை வசதி அமைத்துக் கொடுத்து இதை சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும். தற்போது தலையணைக்கு மட்டும் செல்வதற்கு வசதியாக ரோடு போடப்பட்டுள்ளது. இதைப் போன்று மற்ற இடங்களுக்கும் போக்குவரத்திற்கு வசதி செய்து கொடுத்தால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.