உலகின் அதிசய இடங்கள் - MILFORD SOUND WATERFALLS - கறுப்புப் பவளத்தைக் கண்டுபிடித்தது இங்குதான்!

MILFORD SOUND WATERFALLS
MILFORD SOUND WATERFALLS
Published on

உலகின் அதிசயிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகள் நியூஜிலாந்தின் தென்மேற்கு மூலையில் உள்ள மில்ஃபோர்ட் சவுண்ட் என்ற இடத்தில் உள்ளன.

அடர்ந்த காடுகள், கடலிலிருந்து உயர எழும் மலைச் சிகரங்கள், பளபளக்கும் நீர்வீழ்ச்சிகளின் வெண்மையான நீர்... அத்துடன் வண்ணமயமான அதிசய கடல் நீர், வேறெங்கும் காண முடியாத மலர்ச் செடிகள், தாவரங்கள் – இவை அனைத்தையும் பார்த்த பிரபல எழுத்தாளரான ருட்யார்ட் கிப்ளிங் இதை “உலகின் எட்டாவது அதிசயம்” என்றார்.

இருபதினாயிரம் வருடங்களுக்கு முன்னர் இயற்கையினால் ஏற்படுத்தப்பட்ட இந்த அதிசய இடத்தைப் பார்க்க ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து குவிகின்றனர்.

போட் சவாரி, நடைப் பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் உல்லாசப் பயணிகள் சூரிய அஸ்தமனத்தின் போது வானத்தில் ஏற்படும் விதவித வண்ணங்களின் காட்சிக் கோலங்களைப் பார்த்துத் திகைக்கின்றனர்; பிரமிக்கின்றனர்!

டஸ்மான் கடலிலிருந்து வரும் நீர் இங்கு வெள்ளமாகப் பாய்கிறது. ஒரு மைல் உயரம் உள்ள மலைச் சிகரங்கள் ஒரு புறம், அதன் சரிவுகள் ஒரு புறம், ஆயிரம் அடி உயரத்திலிருந்து நீர் அருவியாகக் கொட்டும் அழகிய காட்சி ஒரு புறம் – எதைப் பார்ப்பது, எவ்வளவு நேரம் பார்ப்பது – விடையில்லாத இந்தக் கேள்வியை இங்கு வருவோர் கேட்கின்றனர்; அனுபவிக்கின்றனர்!

இங்குள்ள ஃபோர்ட் நேஷனல் பார்க் (FJORD NATIONAL PARK) டாகெசி (TAKECHE) என்ற ஒரு அதிசயப் பறவையைப் பாதுகாத்து வருகிறது. ஒரு குட்டி கோழிக்குஞ்சு அளவே உள்ள இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த வண்ணத்தைக் கொண்ட இந்தப் பறவை உலகின் அரிய இனம் என்றே கருதப்பட்டது. ஆனால் 1947ல் நூறு பறவைகள் கொண்ட டாகெசி காலனி ஒன்று மில்ஃபோர்ட் சவுண்டில் கண்டுபிடிக்கப்பட, பறவை ஆர்வலர்களுக்கு ஒரே கொண்டாட்டம்!

இதையும் படியுங்கள்:
சகல செல்வங்களையும் தரும் மும்பை மகாலட்சுமி கோவில் தரிசனம்!
MILFORD SOUND WATERFALLS

மில்ஃபோர்ட் நீர் ஒரு விதமான சிறப்பான கலவையைக் கொண்டுள்ளது. மலைஇடுக்குகளின் நடுவிலிருந்து வரும் நீரானது மழை நீருடன் சேர மூன்று மிலிமீட்டர் கனத்திற்கு நாம் பருகும் டீயின் கலரைக் கொண்டிருக்கிறது. இது மெதுவாகச் சென்று கடல் நீரோடு கலக்க ஆக்ஸிஜன் இல்லாத தேங்கிய நீராக ஆகிறது.

இங்கு ஏராளமான விஞ்ஞானிகள் முகாமிட்டு தாவர வகைகளையும், நீரின் தன்மையையும் பற்றி ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமான ஒரு விஷயம் இவர்கள் கறுப்புப் பவளத்தைக் கண்டுபிடித்தது தான்! பவளம் என்றாலே சிவப்பு என்ற எண்ணம் போய், உலகின் மிக அதிகமான கறுப்பு நிற பவள வளத்தைக் கொண்டிருக்கும் பகுதி இது தான் என்பது உறுதியானது.

ஸ்டர்லிங் நீர்வீழ்ச்சி, போவன் நீர்வீழ்ச்சி, லேடி போவன் நீர்வீழ்ச்சி, என பல நீர்வீழ்ச்சிகள் இங்கு உள்ளன.

30 நிமிட நடைப் பயிற்சியை இங்குள்ள ஏரிப் பகுதியில் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் மலை உச்சிக்குச் சென்றவுடன், சுற்றி வர மலை இருக்க கடல் எதிரே திகழ, வானமோ வண்ணமயமாய் ஜொலிக்க, பிரமிக்க வைக்கும் ஒரு காட்சியை அங்கிருந்து பார்க்கின்றனர்.

ஸ்கூபா டைவிங்கை தைரியமாக மேற்கொள்ளும் பயணிகள் கடலுக்குள் பலவிதமான கடல் பிராணிகளைக் கண்டு மகிழ்கின்றனர்.

உலகின் அதிசய நீர்வீழ்ச்சி பகுதியில் அற்புதமான அனுபவம் பெற்றோம் என்று பயணிகள் சொல்கின்ற போது இங்கு போகமுடியவில்லையே என்று வருத்தப்படுவோர் இணையதளத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மில்ஃபோர்ட் சவுண்ட் வண்ணக் காட்சிகளைப் பார்த்தே மனம் குளிரலாம்!

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் மிகச்சிறந்த 8 குகைக் கோயில்கள் - சென்று வருவோமா?
MILFORD SOUND WATERFALLS

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com